
புதுச்சேரியைக் கலங்கடித்த ரவுடிகள் கொலை வழக்கில் 5 பேர் கைது!
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில், கடந்த 18-ம் தேதி தீபாவளி அன்று, ஒரே நேரத்தில் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் என்ற மூன்று ரவுடிகளை எதிர்கோஷ்டியினர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலைசெய்தனர். மாநிலத்தையே உறையவைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் தாதா தமிழரசன் மற்றும் அவன் கூட்டாளிகளை போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில், 3 ரவுடிகளைக் கொலைசெய்த வழக்கில், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, சுதாகர், வினோத், சின்னதுரை, நந்தகுமார் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் அதிரடியாக இன்று கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் விழுப்புரம் தாதா தமிழரசனை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்ட 5 பேரும் தாதா தமிழரசனின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.