Election bannerElection banner
Published:Updated:

சென்னை டு சின்னாளப்பட்டி... அப்பாவிகளின் உயிர்குடிக்கும் கந்துவட்டி பின்னணி! #EndKandhuVatti

சென்னை டு சின்னாளப்பட்டி... அப்பாவிகளின் உயிர்குடிக்கும் கந்துவட்டி பின்னணி! #EndKandhuVatti
சென்னை டு சின்னாளப்பட்டி... அப்பாவிகளின் உயிர்குடிக்கும் கந்துவட்டி பின்னணி! #EndKandhuVatti

சென்னை டு சின்னாளப்பட்டி... அப்பாவிகளின் உயிர்குடிக்கும் கந்துவட்டி பின்னணி! #EndKandhuVatti

சென்னை டு திண்டுக்கல் சின்னாளப்பட்டி, கரூர் வரை வால்பிடித்து, கேரளா, ஆந்திரா வரை நீளும் கந்துவட்டியின் இன்னொரு பக்கத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..?

ஆண்டு, 2003. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பிரிவுக்கு அடுத்தடுத்து ஒரே பிரச்னையை முன்வைத்து பல மனுக்கள் வருகின்றன. அத்தனை மனுக்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது, ''கந்துவட்டி ஆள்களின் கொடுமையைத் தாங்க முடியவில்லை'' என்பதுதான்.  

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டிருந்த அதேநேரம், இன்னொரு கடிதமும் அவர் கைக்கு வந்திருந்தது. அந்தக் கடிதம், சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் கமிஷனர் மூலமாக அனுப்பப்பட்ட கடிதம். அந்தக் கடிதத்தில், "சென்னை மாநகராட்சியில் கந்து வட்டிக்கு இணையான ஒரு கொடுமை நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் மலேரியா டிபார்ட்மென்ட் மற்றும் துப்புரவுத் தொழிலாளிகளாக உள்ளனர். தொழிலாளிகளின் சம்பளப் (பாஸ்புக்) புத்தகத்தை ஒரு கும்பல் வாங்கி அவர்களின் கையில் வைத்திருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் சம்பளத் தேதியில், ஊழியர்களின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தை மட்டும் அந்தக் கும்பல் வாங்கிக்கொள்கிறது, சம்பளக் கவரையே அந்தக் கும்பல்தான் வாங்குகிறது. சாதாரணமாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் குடும்பக் கஷ்டத்துக்காக வட்டிக்கு வாங்கிய கூலித்தொழிலாளிகள், இன்று அடிமைகளாகி விட்டனர்" இப்படி நீண்டது அந்தக் கடிதம். 

அப்படியான ஒரு சூழலில்தான், தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), 2003, ஜூன் மாதம், 9-ம் தேதி, ஜெயலலிதாவால் அவசரமாக அமல்படுத்தப்பட்டது.  இந்தச் சட்டம் தொடர்பான ஆணையும்,  2003,  நவம்பர், 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிகப் பணம் வசூலித்தது நிரூபணம் செய்யப்பட்டால், மூன்றாண்டுச் சிறை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. 

கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, தினவட்டி, ராக்கெட் வட்டி, ஜெட் வட்டி, கம்ப்யூட்டர் வட்டி என பத்து விதமான வட்டி விவகாரம் நடைமுறையில் இருந்ததும் அப்போதுதான் வெளியில் தெரிந்தது. கந்துவட்டிச் சட்டம் அரசிதழில் வெளியான அந்த வேளையில்தான், கந்துவட்டியின் வசூலிப்புக் கொடுமை தாளாமல் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர், ரிப்பன் மாளிகையிலேயே விஷம் குடித்துவிட்டார். இதையடுத்து, இன்றைய நெல்லை தீக்குளிப்புபோல அன்று அந்த விவகாரம் சீரியஸாக விவாதிக்கப்பட்டது. சென்னை மத்தியப் பொருளாதாரக் குற்றப் பிரிவின் துணைக் கமிஷனராக இருந்த மௌரியா இதில் நேரடியாக இறங்கி விசாரணையை நடத்தினார். சென்னை மாநகராட்சிக்குள் நுழைந்து வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறந்த இரண்டு பேரைப் பிடித்து கைதுசெய்தார். அதில் ஒருவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது. சென்னையிலிருந்து கரூர், சின்னாளப்பட்டி, ஆந்திரா, கேரளா, புதுவை என்று கந்துவட்டி பிசினஸ், களை கட்டத் தொடங்கிய இந்த நேரத்தில்தான் சென்னை மாநகராட்சியில் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள்மீது  குண்டாஸ் பாய்ந்தது. கந்துவட்டி வசூலிப்பில் இறங்கியிருந்த பலர், தங்களின் 'அசல்' தொகையைக்கூட வாங்காமல் ஓட்டம் பிடித்தனர். 

லட்சம் ரூபாயை வட்டிக்குக் கேட்டு வாங்கியவர்கள், கையில் வாங்குவது 85 ஆயிரம் ரூபாய்தான். 15 ஆயிரம் ரூபாயைப் பிடித்துக்கொண்டுதான் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கணக்குக் கொடுப்பார்கள். ஆனால், வாரம் 10 ஆயிரம் ரூபாய் என்று பத்து வாரங்களுக்குக் கட்ட வேண்டும், ஏதாவது ஒருவாரம், வட்டி கொடுப்பது நின்றுவிட்டால், அந்த  வட்டிக்கும் சேர்த்து வட்டியைச் செலுத்த வேண்டும்... இதற்கு முதலில் முடிவு கட்டியது சென்னைப் போலீஸ்தான். ஜெயலலிதாவின் ஆட்சி இது என்கிறவர்கள், மழைநீர் சேமிப்புத் திட்டத்தைக் கிடப்பில் போட்டதுபோல் கந்துவட்டிக்கு எதிரான அத்தனையையும், கிடப்பில் போட்டதன் எதிரொலியே நெல்லை சம்பவம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு