Published:Updated:

ஜான்சிபிரியா... யாரால் எரித்துக் கொல்லப்பட்டார்? - கோவையை உலுக்கிய திகீர் சம்பவம்!

ஜான்சிபிரியா... யாரால் எரித்துக் கொல்லப்பட்டார்? - கோவையை உலுக்கிய திகீர் சம்பவம்!
ஜான்சிபிரியா... யாரால் எரித்துக் கொல்லப்பட்டார்? - கோவையை உலுக்கிய திகீர் சம்பவம்!

“ஜான்சி பிரியாவுக்கு வயது 17. அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறார். அவருக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. 60 வயதையொட்டிய பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த நிராதரவான ஜீவன். திடீரென்று, ஒருநாள் வீட்டைவிட்டு  ஜான்சி மாயமாகிவிட... பேத்தியை ஊர் முழுக்கத் தேடுகிறார் பாட்டி. அடுத்த நாள், பாட்டி  இல்லாத நேரம் பார்த்து... வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறார் ஜான்சி. அவர், தற்கொலை செய்துகொண்டதாகத்தான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால்?  

ஜான்சிபிரியா... யாரால் எரித்துக் கொல்லப்பட்டார்? - கோவையை உலுக்கிய திகீர் சம்பவம்!

கடந்த 12-ம்தேதி, கோவையை அடுத்துள்ள செஞ்சேரிப்புத்தூரைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவி ஜான்சிபிரியா எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை இப்படித்தான் விவரிக்க ஆரம்பித்தார் ஒரு போலீஸ் அதிகாரி. “சின்ன வயசுலேயே ஜான்சியோட அம்மா செத்துட்டாங்க. நாலு வருஷத்துக்கு முன்னால அவுங்க அப்பாவும் உடம்புக்கு முடியாம செத்துப்போயிட்டாராம். ஒரே பொண்ணான ஜான்சி தனிச்சுவிடப்பட்டிருக்கு. அதோட  அப்பா வழி பாட்டியான கமலம் வீட்டில் தங்கியிருந்துதான் படிச்சிக்கிட்டு இருந்திருக்கு. ஜான்சிக்கு ஒரு பெரியப்பா இருக்காராம். பேரு...  அருள்பிரகாசம். அப்பப்ப கமலம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சர்ச்சுக்கு வருவாராம். அப்போ, ஜான்சியையும் பார்த்துட்டுச் செலவுக்குக் காசு கொடுப்பாராம். அவ்வளவுதான்  ஜான்சிக்கு உள்ள சொந்தபந்தம். நல்லா சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்த ஜான்சி, கடந்த 11-ம்தேதி திடீர்னு காணாமல் போயிடுச்சி. வயசான காலத்துல அந்தப் பாட்டி எங்கே போய்த் தேடும்? மறுநாள் பாட்டி இல்லாத நேரத்துல, வீட்டுல பயங்கர அலறல் சத்தம் கேட்டிருக்கு. சுத்தி இருக்கவங்க எல்லாம் பதறிப்போய் ஓடியிருக்காங்க. அங்க ஜான்சி பொண்ணு கொழுந்துவிட்டு எரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கு. உடனேயே கையில கெடச்ச துணியெல்லாம் ஜான்சிமேல தூக்கிப் போட்டு அணைச்சிருக்காங்க. முழுசா எரிஞ்சு கருகிட்ட ஜான்சியை, மருத்துவமனைக்கு அழைத்து வந்தும் காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தபோது, செல்வக்குமார்ங்கிற பெயரை ஜான்சி சொல்லலைனா. அது கொலைங்கிற விஷயமே யாருக்கும் தெரிஞ்சிருக்காது. இப்போ, செல்வக்குமாரைக் கைதுசெய்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

கைதுசெய்யப்பட்டிருக்கும் செல்வக்குமாரும், ஜான்சியும் சில வருடங்கள் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. செல்வக்குமார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும், ஜான்சிபிரியா குடும்பம் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் என்பதாலும் சாதியரீதியில் ஏதேனும் பிரச்னை ஆகியிருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்தது காவல்துறை. ஆனால், அப்படியொன்றும் இல்லை என்று தெளிவானது. அடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஒரு தகவலைச் சொன்னது போலீஸ். அவர்கள், “செல்வக்குமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 11-ம்தேதி, வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஜான்சிபிரியா வீட்டுக்கு அருகில் உள்ள ஆல்பர்ட் ஹவுஸ் என்கிற பாழடைந்த வீட்டில் இருவரும் தனியாக இருந்திருக்கிறார்கள். அதற்கடுத்து என்ன பிரச்னை ஆனது என்று தெரியவில்லை. மறுநாள், இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள். முதலில் தூக்கில் தொங்கிவிடலாம் என்று செல்வக்குமார் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் மறுத்திருக்கிறார். உடனே மண்ணெண்ணெய்க் கேனை எடுத்து அந்தப் பெண்ணின் உடலில் ஊற்றித் தீ வைத்துள்ளார் செல்வக்குமார். குப்பென்று தீ கொழுந்துவிட்டு எரிய பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் செல்வக்குமார்'' என்றனர்.

அது நம்பும்படியாக இல்லை. எதற்காக  இருவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அப்படியே தற்கொலை செய்ய முடிவெடுத்தாலும் மண்ணெண்ணெயை அந்தப் பெண்ணின் உடலில் மட்டும் ஏன் ஊற்ற வேண்டும் எனப் பல கேள்விகள் எழுகின்றன.

செல்வக்குமார் ஏன் கொன்றார் என்று எல்லோரும் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த சூழலில், 13-ம் தேதி ஒரு தகவலைச் சொல்கிறார்கள் போலீஸார். ''ஜான்சி பிரியாவைக் கொன்றது செல்வக்குமாரா என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் செல்வக்குமார் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லும் போலீஸார், அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவன் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. அவனைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார்கள். 

செல்வக்குமார் அந்த இடத்தில் இல்லை. வேறொருவன்தான் கொலை செய்தானென்றால், ஏன் ஜான்சி பிரியா செல்வக்குமார் பெயரைச் சொல்ல வேண்டும்... அந்த ஒருவன் யார்... அவன் எதற்காக ஜான்சி பிரியாவைக் கொலை செய்ய வேண்டும் என்று விரிகின்றன பல கேள்விகள். விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறது போலீஸ்.