Published:Updated:

''எல்லா குழந்தைகளும் ஹாசினிதான்... பத்திரமா பார்த்துக்கோங்க!'' - கலங்கி நிற்கும் ஹாசினி அம்மா

''எல்லா குழந்தைகளும் ஹாசினிதான்... பத்திரமா பார்த்துக்கோங்க!'' -   கலங்கி நிற்கும் ஹாசினி அம்மா
''எல்லா குழந்தைகளும் ஹாசினிதான்... பத்திரமா பார்த்துக்கோங்க!'' - கலங்கி நிற்கும் ஹாசினி அம்மா

''எல்லா குழந்தைகளும் ஹாசினிதான்... பத்திரமா பார்த்துக்கோங்க!'' - கலங்கி நிற்கும் ஹாசினி அம்மா

ருநாள் ஹாசினியையும் தேஜஸையும் அழைச்சிட்டு நானும் பாபுவும் வெளியில போயிருந்தோம். ஹாசினிக்கு அவுட்டிங் போறதுனா ஒரே ஜாலிதான். வேடிக்கை பார்த்துட்டே வருவா. அப்போ ராமச்சந்திரா ஹாஸ்பிட்டல் வழியா போகும்போது, 'அம்மா அவங்கள்லாம் ஒரே மாதிரி வொயிட் கோட் மாட்டிட்டுப் போறாங்க...'னு காட்டினா. 'அவங்கள்லாம் டாக்டர்ஸ். யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா அவங்கதான் நம்மளக் காப்பாத்துவாங்க'னு சொன்னேன். உடனே ஹாசினி என்ன நினைச்சாலோ தெரியல, 'நானும் பெரியவளானதும் டாக்டராகுறேன்ப்பா'னு சொன்னா. உடனே பாபுவோட கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஏன்னா, அதுவரை அவ மத்த பிள்ளைங்க மாதிரி 'டீச்சர் ஆவேன்', 'சயின்டிஸ்ட் ஆவேன்'னுலாம் அப்படி எதுவும் சொன்னதில்ல. பாபு, 'அப்பா சொத்து எல்லாத்தையும் வித்தாவது உன்னை டாக்டருக்குப் படிக்க வைக்குறேன்டா செல்லம்'னு சொன்னார். ஆனா, இப்போ ஹாசினி உயிருக்கான நியாயம் கிடைக்கிறதுக்காக கையில இருக்கிற எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா விக்கிற நிலைமைக்கு விதி எங்களை மாத்தியிருக்கு. ஹாசினி என்ன பாவம் பண்ணினா?" - குரல் தழுதழுக்கப் பேசிக்கொண்டிருந்த ஶ்ரீதேவி, வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். 


கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, போரூரில் தஷ்வந்த் என்ற இளைஞனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட 6 வயதுச் சிறுமி ஹாசினியை தமிழக மக்களால் மறக்க முடியாது. குற்றவாளி தஷ்வந்த் கைதுசெய்யப்பட, அவன் மீதான குண்டர் சட்டத்தை உடைத்து பெயிலின் மூலம் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் அவன் அப்பா சேகர். அடுத்த 10 நாள்களுக்குள், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தன் அம்மாவைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் தலைமறைவானான். காவல்துறையினர் மும்பையில் தஷ்வந்த்தை கைதுசெய்து தமிழகம் அழைத்துவந்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். 

இதற்கிடையே ஹாசினியின் குடும்பம் சொந்த மாநிலமான ஆந்திராவுக்குக் குடிபெயர்ந்துவிட, சமீபத்தில் ஹாசினியின் அம்மா ஶ்ரீதேவி சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தேன். இதுவரை  மீடியாவிடம் பேசாதவர், முதல் பத்து நிமிடங்கள் அழுது தீர்த்தார். பின்னர்தான் பேச்சை ஆரம்பித்தார். 

“எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்ச மூணாவது வருஷத்துல ஹாசினி பாப்பா பிறந்தா. அடுத்த ரெண்டு வருஷத்துல தேஜஸ் பிறந்தான். புள்ளைங்கதான் வாழ்க்கைனு இருந்தோம். இன்ஜினீயரான அவரை, அவர் வேலைபார்த்த நிறுவனத்தில் திடீர்னு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க. போரூர்ல அந்த ஃபிளாட்டை வாங்கி, 2016 ஜுன்லதான் அங்க குடிவந்தோம். அந்த அப்பார்ட்மென்ட்ல எங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு குடும்பங்கள் வசிச்சோம். நான் எம்பிஏ முடிச்சிருந்ததால, வீட்டு லோனை கட்ட நானும் வேலைக்குப் போகலாமேனு பக்கத்துல இருந்த ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையா சேர்ந்தேன். ஹாசினியும்  அங்கேயே செகண்ட் ஸ்டாண்டர்டு படிச்சா. 

ஹாசினி ரொம்ப ஜாலியான குழந்தை. எதையுமே ஷார்ப்பா புரிஞ்சுப்பா. தேஜூ, அவன் அக்காகூட வம்பு பண்ணிட்டே இருப்பான். 'தேஜூ என் சாக்லேட்டை எடுத்துக்கிட்டான்ம்மா', 'என்னோட புக்ஸை எடுத்துக்கிட்டான்ம்மா', 'அது என் பில்லோ, அவனைக் கொடுக்கச் சொல்லுங்கம்மா'னு ஹாசினி சொல்லிட்டே இருப்பா. 'உன் தம்பிதானே குட்டி... கொஞ்ச நேரம் வெச்சிக்கட்டுமே'னு சொன்னா, 'ஓ.கே'னு சட்டுனு சிரிச்சுட்டே சமாதானமாகிடுவா. ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் ரெண்டு பேருமே ஃப்ரெண்ட்ஸோட விளையாடப் போயிடுவாங்க” - ஹாசினியின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் கண்கள் கசிந்துகொண்டே இருக்கின்றன. 

''அன்னைக்கு என்னதான் நடந்துச்சு” என்று நாம் முடிப்பதற்குள், “தயவு செஞ்சு அதை மட்டும் என்கிட்ட கேட்காதீங்க ப்ளீஸ். என்னால முடியல” என்று கைகூப்பியவரை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை. பிறகு தஷ்வந்த் பற்றிய பேச்சு வந்தபோது, கோபமும் ஆற்றாமையுமாக மாறிப்போகிறார். 

“அந்த வீட்டுக்குக் குடிபோன எட்டு மாசத்துக்குள்ள, எங்களால யாரைப் பற்றியும் அவ்வளவா தெரிஞ்சுக்க முடியலை. அதனாலதான் அவனையும் கணிக்க முடியலை. அவனை நான் எத்தனை முறை பார்த்திருக்கேன்னுகூட எனக்கு நினைவில் இல்லை. அவன் ஒரு நாய் வளர்த்துட்டு இருந்தான். ஹாசினியும், மத்த பசங்களும் அந்த நாயை அடிக்கடி வேடிக்கை பார்ப்பாங்க. மத்தபடி அவன்கூட நாங்க பேசினதுகூட இல்லை. அவன் அம்மாவை வெளியில எப்பவாவது பார்க்கும்போது 'ஹலோ', 'ஹாய்'னு மட்டும் சொல்லியிருக்கேன். 

கடைசியா நாங்க ஹாசினியைத் தேடிட்டு இருந்தப்போ, அவனும் தன்னோட நாயைக் கையில பிடிச்சிட்டே எங்ககூட சேர்ந்து தேடிட்டு இருந்தான். இப்பவும் அதை நினைச்சா எனக்குப் படபடன்னு வருது. வீட்டுலேயும் சரி, ஸ்கூல்லேயும் சரி ஹாசினியை ரொம்ப கவனமா பார்த்துக்குவேன். ஆனா, எந்தத் தருணத்துல எங்க பொண்ணைத் தவறவிட்டோம்னு இப்போ வர என்னால தெரிஞ்சிக்கவே முடியல. 

நாங்க ரெண்டு பேரும் படிச்சவங்க, மனதைரியத்தோட எங்க பொண்ணுக்காக நியாயம் கேட்டுப் போராடுறோம்தான். ஆனா, ஒரு பெற்றோரா நாங்க சுக்கு நூறா உடைஞ்சுபோயிருக்கோம். எங்க தூக்கமெல்லாம் பத்து மாசத்துக்கு முன்ன பறிபோயிடுச்சு. சரியான சாப்பாடு கிடையாது. தமிழ்நாடே வேணாம்னு ஆந்திராவுக்குப் போனாலும், எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஹாசினி நினைவு வந்துடுது. அவ என்கூட இல்லை, அவ குரலை என்னால கேட்க முடியலை. அவ வாசத்தை என்னால உணர முடியலை. நிலைகுலைஞ்சு போனதுல, தேஜுவையும் எங்களால கவனிக்க முடியலை. இப்போதான் அவனை மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பிச்சிருக்கோம். 


ஒவ்வொரு முறையும் விசாரணைக்காக நானும், பாபுவும் மாறி மாறி சென்னை வந்துட்டுப் போக வேண்டியிருக்கு. கடந்த முறை அவன் அப்பா அவனை பெயில்ல எடுத்தது, அவங்களுக்கே பாதகமாயிடுச்சு. அவன் அவங்கம்மாவையே அடிச்சுக் கொன்னுட்டான்னு தெரியவந்தப்போ, துடிதுடிச்சுப் போயிட்டேன். ஏற்கெனவே, அவன் எங்களைக் கொல்வேன்னு மிரட்டியிருந்ததால, எங்க குடும்பம் ரொம்ப பயந்து போயிட்டோம். ஒருத்தன் செஞ்ச குற்றம் எத்தனை பேரை, எவ்வளவு காலத்துக்கு வதைக்குதுனு பாருங்க. அவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைச்சே தீரும். 

ஆரம்பத்துல, இந்த வழக்குல எங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருந்துச்சு. ஆனா, மீடியாவோட சப்போர்ட்டும், வழக்கறிஞர்களோட சப்போர்ட்டும் இப்போ எங்களுக்கு ஆறுதலா இருக்கு. அவனுக்கு தூக்குத் தண்டனை கிடைச்சாதான், இனி குழந்தைங்க மேல கைவைக்கக் கூடாதுனு அடுத்தடுத்து தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கு பயம் வரும். ஹாசினியை யாரோ ஒரு குழந்தையா நினைக்காதீங்க. எல்லாக் குழந்தைகளுமே ஹாசினிதான். புள்ளைங்கள பத்திரமா பார்த்துக்கோங்க.” 

மீண்டும் அழுகை ஆரம்பிக்கிறது! 

''அவனைத் திரும்ப போலீஸ் புடிக்கிறவரை உசுரைக் கையில புடிச்சிட்டுதான் இருந்தோம்!"

ஹாசினியின் குடும்பம் வசித்த போரூர், மதனந்தபுரத்துக்குச் சென்றேன். அங்கு அப்பார்ட்மென்டில், துணி காயவைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேசினேன். ''மேல போய் கேட்டுப்பாருங்க'' என்றவாறு வீட்டுக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார். முதல் தளத்தில் ஹாசினியின் பக்கத்து வீட்டில், ''ப்ளீஸ், இங்க சின்னப்பசங்க எல்லாம் இருக்காங்க'' என்று தன் குழந்தைகளை வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, பதற்றத்துடன் நம்மைத் தவிர்த்தார் அந்த வீட்டுப் பெண். ஹாசினி கொலை, தஷ்வந்த் தாயின் கொலை ஆகியவை அந்தக் குடியிருப்புவாசிகளை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன. 

டூ வீலரில் கிளம்பிக்கொண்டிருந்த ஒரு தம்பதி, என் அடையாள அட்டையை வாங்கி உறுதிசெய்துகொண்ட பின் பேசினார்கள். “சாரி சார், இந்த ஏரியாவுக்கு இப்போவெல்லாம் யார் வந்தாலும் பயந்து பயந்துதான் பார்க்க வேண்டியதா இருக்கு. இங்க பக்கத்து பக்கத்து வீட்டுல வசிச்சாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப பேசிக்கமாட்டோம். அன்னைக்கு ஹாசினி காணாமபோனபோதுதான், பாபு பதறிட்டே வந்து எங்ககிட்டயெல்லாம் சொன்னாரு. ஆளும்பேருமா தேட ஆரம்பிச்சோம். இதோ, இந்த இடத்துல அப்போ குழி தோண்டிப் போட்டுருந்தாங்க. ஒருவேளை பாப்பா குழிக்குள்ள விழுந்துடுச்சோன்னு நினைச்சுத் தேடினோம்.  அப்போ, தஷ்வந்த்தும் அவனோட நாயைப் புடிச்சிக்கிட்டு தேடுற மாதிரி நடிச்சிட்டிருந்தான். அன்னைக்குதான் நான் அவனை எதிர்லயே பார்த்தேன். தினமும் காலையில வேலைக்குப் போகும்போது, ஹெல்மெட் போட்டுட்டுதான் வீட்டுலயிருந்தே வெளிய வருவான். அதனால, அவனை அந்தச் சம்பவத்துக்கு முன்ன சரியா பார்த்த ஞாபகம்கூட இல்ல. சம்பவம் நடந்த அன்னைக்கே போலீஸ் தஷ்வந்த்தான் குற்றவாளின்னு கணிச்சுட்டாங்க'' என்றவரைத் தொடர்ந்தார் அவர் மனைவி. 

“தஷ்வந்த் அம்மா ரொம்ப அமைதியா இருப்பாங்க. அவங்களுக்கு தஷ்வந்த் தப்பான வழியில போறது முன்னமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். ஏன்னா, சின்னப் பையன்கிட்ட இருக்கிற மாதிரி, இவன்கிட்ட அவங்க க்ளோஸா இருந்ததில்ல. அன்னைக்கு போலீஸ் அவனைக் கைது செய்தப்போ, நாங்க எல்லோரும் போய் அடிச்சுத் துவைச்சோம். ஒரு வாரம் கழிச்சு, அவங்கம்மா இங்க ஆட்டோவுல வந்து டிரெஸை எல்லாம் எடுத்துட்டு குனிஞ்சுட்டே போனாங்க. நியூஸ்ல, அவன் அவங்களையும் கொன்னுட்டு தப்பிச்சிட்டான்னு பார்த்தப்போ, பதறிப் போயிட்டோம். அவனைத் திரும்ப போலீஸ் புடிக்கிறவரை உசுரைக் கையில புடிச்சிட்டுதான் இருந்தோம்'' என்றார். 

அடுத்த கட்டுரைக்கு