Published:Updated:

ஆணவக்கொலைக்கு எதிராக  மீண்டும் ஒரு பரபரப்பு தீர்ப்பு!

செ.சல்மான் பாரிஸ்
ஆணவக்கொலைக்கு எதிராக  மீண்டும் ஒரு பரபரப்பு தீர்ப்பு!
ஆணவக்கொலைக்கு எதிராக  மீண்டும் ஒரு பரபரப்பு தீர்ப்பு!

ஆணவக்கொலைக்கு எதிராக  மீண்டும் ஒரு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது  தஞ்சை நீதிமன்றம். தண்டனை விவரங்களை பிப்ரவரி 2-ம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளது நீதிமன்றம். இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய மதுரை எவிடென்ஸ் கதிர், ``திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  கோட்டூர் அருகிலுள்ள கீழ மருதூர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அமிர்தவல்லியும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனியப்பனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் மகேந்திரன், துரைராஜ் ஆகியோர் கடந்த 10.12.2014 அன்று அமிர்தவள்ளியையும் பழனியப்பனையும் பிறந்த நாற்பது நாள்களே  ஆன குழந்தையையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

ஆணவக் கொலையில் ஒரே நேரத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் வறுமை நிலையிலிருந்த விவரம் தெரியாத அமிர்தவள்ளியின் தாய் ரோஜினவதியும், தந்தை கணேசனும் எங்களைத் தேடிவந்து நடந்த கொடுமைக்கு நீதி பெற்று தரவேண்டும் என்று அழுதனர்.

எவிடென்ஸ் அமைப்பு மூலம் வழக்குப் பதிவு செய்து எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்தது மட்டும் அல்லாமல்,  சாட்சிகளைக் கண்டுபிடித்து வழக்கை சரியாக நடத்த நிறைய உழைத்தோம். எங்களைத் தேடி வரும் ஒவ்வொரு தடவையும் என் மகளையும், மருமகனையும், சின்னக்குழந்தையையும் கொன்றவர்களை விடக்கூடாது, தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அழுதுகொண்டே இருப்பார்கள்.  அந்த வயதான தாய்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியாது. இந்நிலையில், சற்று  முன்புதான் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. நான்கு குற்றவாளிகளும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தண்டனை விவரம் வருகிற 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் கொடுமையானது, இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் தப்பிவிடாமல் இந்த ஆணவக் கொலை வழக்கில் வெற்றி  கிடைத்திருப்பது ஆறுதலாக உள்ளது,  தொடர்ந்து நீதிக்காக போராடுவோம்.'' என்றார். உடுமலை சங்கர் ஆணவக்கொலை தீர்ப்பு வந்த சில மாதங்களில் இந்த வழக்கிலும் தீர்ப்பு வந்துள்ளதை ஆறுதலாக பார்க்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.