Published:Updated:

`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!

`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!
`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஆராயியின் மகள் தனத்தின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த 21-ம் தேதி இரவு தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனையும் மிதித்துக் கொன்றது. அதேபோல சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தது. ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது காவல்துறை.

சம்பவம் நடந்த 22-ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆராயி, தனம் இருவருக்கும் தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவசர சிகிச்சைப் பிரிவின் நான்காவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆராயிக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அதனால் அவரது மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தனத்தின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து சுய நினைவின்றியே இருந்துவந்தார். அவரது மூளைப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகக் காதுகளின் வழியே தொடர்ந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த முதுகில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு டியூப் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.