Election bannerElection banner
Published:Updated:

“பேருந்தில் உரசினான்... பையால் சமாளித்தேன்!” #SpeakUp

“பேருந்தில் உரசினான்... பையால் சமாளித்தேன்!” #SpeakUp
“பேருந்தில் உரசினான்... பையால் சமாளித்தேன்!” #SpeakUp

“பேருந்தில் உரசினான்... பையால் சமாளித்தேன்!” #SpeakUp

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

இன்ஜினீயரிங் பட்டதாரி நான். அன்று அரசுத் தேர்வெழுத, திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் பேருந்தில் கூட்டத்தில் திணறியடித்து நின்றுகொண்டிருந்தேன். அக்கம், பக்கம் நிற்பவர் ஆணா, பெண்ணா என்றுகூட அறிய முடியாத அளவுக்கு நெரிசல். பின்னால் நிற்பவர் என்னை அழுத்துவதுபோல ஓர் எண்ணம். நெரிசலில் இப்படித்தான் இருக்கும் என்பதால் முதலில் கண்டுகொள்ளவில்லை. நேரம் செல்லச் செல்ல, பின்னால் நின்றுகொண்டு என்னை உரசுபவர் ஓர் ஆண் என்றும், இது நெரிசல் காரணமாக நடக்கவில்லை, வேண்டுமென்றே வக்கிர எண்ணத்துடன் செய்கிறார் என்பதையும் உணர்ந்தேன். எழுதவிருக்கும் தேர்வைப் பற்றிய சிந்தனையில், பதற்றத்தில் இருந்த எனக்கு, சத்தமிட்டு அவரைக் கண்டிப்பது என்பது என்னை இன்னும் டென்ஷனாக்கும். பேருந்தைவிட்டு இறங்கிவிடலாம் என்றால் தேர்வுக்குத் தாமதமாகும். என்ன செய்வதென்று தெரியாமல், ஆனால் நடப்பதை சகித்துக்கொள்ளவும் முடியாமல் நின்றிருந்தேன். திடீரென அந்த யோசனை வந்தது. அருகில் நின்றிருந்த என் தோழியிடம், இரண்டு தோள்களிலும் மாட்டக்கூடிய பேக் பேக்(back bag)-ஐ கேட்டேன். என் தோழிக்கு நான் எதற்காகக் கேட்கிறேன் என்பது புரிந்துவிட்டது. சட்டென தந்தாள். வாங்கி, என் முதுகில் மாட்டிக்கொண்டேன். கத்திப் பேசவில்லை, திட்டி அறையவில்லை என்றாலும், அந்த அயோக்கியனின் செய்கைக்கு நான் என்னால் முடிந்த அளவில் புரிந்த இந்த எதிர்வினை, அவனைத் தானாக என்னைவிட்டு விலகி நிற்கச் செய்தது. அடுத்தடுத்த ஸ்டாப்களில் கூட்டம் குறைய, இறங்கும்போது அவனைப் பார்த்து முறைத்துவிட்டு இறங்கிச் சென்றேன். கத்திப் பேச தைரியமில்லை என்றாலும், அவன் தானாக விலகும் விதமாக அவனை நான் எதிர்த்த விதம், எனக்கு ஆறுதலாக இருந்தது. 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக் கூ டாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரிகமான வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தரவேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு