Election bannerElection banner
Published:Updated:

``என் மகள் விநோதினிக்காகவும் போராடுங்களேன்!” மகளின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் தந்தை

``என் மகள் விநோதினிக்காகவும் போராடுங்களேன்!” மகளின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் தந்தை
``என் மகள் விநோதினிக்காகவும் போராடுங்களேன்!” மகளின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் தந்தை

``என் மகள் விநோதினிக்காகவும் போராடுங்களேன்!” மகளின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் தந்தை

''ஹாசினிக்காகப் போராடியவர்கள் என் மகள் வினோதினிக்காகவும் போராடுங்களேன்” என்று தனது மகளின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளங்கோ.

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெரியவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், ''புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த எனது மகள் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்றும், 4 வருடங்கள் கடந்த நிலையில் அந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்றே தனக்குத் தெரியவில்லை என்றும், என் மகளின் சாவுக்கு நீதி கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள்'' என்றும் உருக்கமாகப் பேசியிருந்தார், அவர். வாட்ஸ்அப்பில் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த அடுத்த சில மணி நேரத்தில் வில்லியனூரில் உள்ள அவரது வீட்டில் ஆஜரானோம். வீட்டின் வாசலிலும், எதிரிலும் வினோதினியின் மரணத்துக்கு நீதி கேட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்பு 2014-ல் ஒட்டுமொத்த புதுச்சேரியையும் உலுக்கிய வினோதினியின் மர்ம மரணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். 

புதுச்சேரி - விழுப்புரம் செல்லும் வழியில் மதகடிப்பட்டு மற்றும் கலிதீர்த்தாள்குப்பத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீமணக்குள விநாயகர் கல்விக் குழுமம். இங்கு புதுச்சேரி, தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். ஸ்ரீமணக்குள விநாயகர் என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்கள் இங்கு இயங்கிவருகின்றன. 2014 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலை சுமார் 11 மணி அளவில் ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியல் கல்லூரியில் E.E.E முதலாம் ஆண்டு படித்த மாணவி வினோதினி, அந்தக் கல்லூரியின் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் எனத் தகவல் பரவியது.

''அந்த மாணவி சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக அவரின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னோம். ஆனால், பெற்றோருக்குப் பதிலாக ரெக்கார்டு நோட்டில் அவரே கையெழுத்துப் போட்டதற்காகக் கண்டித்தோம். அதனால் 5-வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்” என்று வினோதினியின் மரணத்துக்கு விளக்கமளித்தது கல்லூரி நிர்வாகம். ஆனால், ''5-வது மாடியிலிருந்து விழுந்ததற்காக எந்த அடையாளமுமே வினோதியினின் உடலில் இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அந்தக் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணிபுரியும் எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி, சேதுபதி ஆகியோர்தான் வினோதினி மரணத்துக்குக் காரணம். அதனால், அவர்கள்மீதும் கல்லூரி நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் வினோதினியின் உறவினர்கள். 

ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாத காவல் துறை வழக்கம்போலத் தற்கொலை என்றே வழக்குப்பதிவு செய்தது. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர் மாணவர்கள். அதேபோலக் கல்லூரிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய ரவுடிக் கும்பல், போராட்ட மாணவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. போராட்டம் தீவிரமடைந்ததால் நீண்ட ஆலோசனைக்குப்(!?) பிறகு தற்கொலைக்குத் தூண்டியதாக 306-வது பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர, குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

அரசியல் தலையீடு அப்பட்டமாகத் தெரிந்ததால், ''குற்றவாளிகளைக் கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என மாணவர்களுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர் வினோதியின் உறவினர்கள். வினோதினி மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளும் கைகோத்துக் களம் இறங்க ஸ்தம்பித்தது புதுச்சேரி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று அப்போதைய கவர்னர் வீரேந்திரக் கட்டாரியாவிடம் மனு அளித்த பிறகே பேராசிரியர்கள் எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அன்றைய தினமே வினோதினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதேபோல, அதற்கு மறுநாளே நான்கு பேராசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சுவலி (!?) ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் வினோதினிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று மாணவர்களை எச்சரித்தது கல்லூரி நிர்வாகம். அதேபோல, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் கல்லூரியின் பேராசிரியர்களையும் மாணவர்களையும் வைத்துப் பேரணி ஒன்றையும் நடத்தியது. மாணவி வினோதினி உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே கைதுசெய்யப்பட்ட பேராசிரியர்கள் நான்கு பேரும் ஜாமீன் பெற்று வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

வினோதினியின் வீட்டுக்குள் நுழையும்போதே மாலை போடப்பட்ட அவரது புகைப்படம் நம்மை வரவேற்றது. அந்தப் புகைப்படத்தின் மேலே பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து அல்லாடிக்கொண்டிருந்தது. வினோதினி வளர்த்த கிளியாம் அது. நான்கு வருடம் கடந்த நிலையிலும் இழப்பின் வலி மாறாத முகத்துடன் நம்மிடம் பேசினார் வினோதினியின் தந்தை இளங்கோ. “கடந்த 2014-ம் வருஷம் பிப்ரவரி மாசம் 24-ம் தேதி எப்பவும் போல காலைல 7.30 மணிக்கு எம்பொண்ணு காலேஜுக்குக் கிளம்பிப் போச்சி. 10 மணிக்கு அந்தக் காலேஜுல இருந்து எனக்குப் போன் பண்ணி, 'உங்க பொண்ணு மயக்கம்போட்டு விழுந்துடுச்சி. வாங்க'னு சொன்னாங்க. புள்ளைக்கு என்ன ஆச்சோனு பதறியடிச்சிக்கிட்டு நாங்க காலேஜுக்குப் போனோம். நாங்க போகும்போது அவங்களோட ஹாஸ்பிட்டல் அவசரப் பிரிவில் என் பொண்ணைக் கிடத்தி வெச்சிருந்தாங்க. டிரீட்மென்ட் குடுக்கற மாதிரியே ஏதோ பண்ணிக்கிட்டிருந்தாங்க. அவளைப் பார்க்கக்கூட எங்களை உள்ளே விடலை. வலுக்கட்டாயமா நாங்களே உள்ளே போய்ப் பார்த்தோம். என் பொண்ணு அங்க செத்துப்போய் கெடந்துச்சுய்யா” என்று கதறியவரைச் சமாதானப்படுத்தினோம்.

 சற்று நேரத்துக்குப் பிறகு அவரே தொடர்ந்தார். “என்ன நடந்துச்சினுகூட யாரும் எங்களுக்குச் சொல்லலை. ஆசிரியர்கள் கண்டிச்சதால 5-வது மாடில இருந்து குதிச்சி எம்பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டானு சொன்னாங்க. 5-வது மாடில இருந்து கீழ மார்பல் தரையில் குதிச்ச உடம்பு சிதறிப் போயிருக்காதா? ஆனா, எம்பொண்ணு உடம்புல எங்கயுமே சின்னக் காயம்கூட இல்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில நுரையீரல மட்டும்தான் அடினு இருக்குது. எம்பொண்ணைக் கல்லூரி நிர்வாகம்தான் கொலை பண்ணி இருக்கு. 'இந்தச் சாவுக்கு எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி ஆகியோரின் பேரில் எனக்குச் சந்தேகம் இருக்கு'னு திருபுவனை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தேன். ஆனா, அவங்கள கைது பண்ணி மூணாவது நாளே ஜாமீன்ல விட்டுட்டாங்க. 'பணம் தர்றோம்... வழக்கை வாபஸ் வாங்கு'னு சொன்னாங்க. நாங்க, 'முடியாது'னு சொன்னதும் ரவுடிங்களை வெச்சி என்னை வெட்ட வந்தாங்க. அதுக்கு வில்லியனூர் போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர் இருக்குது. அதுக்கப்புறம் நான்கு பேர் ஜாமீனையும் ரத்துசெய்ததோடு, அவங்களை உடனே கைதுசெய்யணும்னு திருபுவனை போலீஸுக்குப் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு போட்டது. அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியலை. வாட்ஸ்அப்ல இந்த வீடியோவ வெளியிட்டதுக்கு அப்புறம்தான், என் பொண்ணு வழக்குக்குக் கல்லூரி நிர்வாகம் தடை உத்தரவு வாங்கியிருக்காங்கன்னே தெரியும். இதுவரைக்கும் அந்தக் கல்லூரியில 10-க்கும் மேற்பட்ட புள்ளைங்க செத்திருக்காங்க. ஆனா, 'தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க'னுதான் வழக்கு இருக்கும். எந்தப் பையனாவது தன் ஆணுறுப்பை அறுத்துக்கிட்டு தற்கொலை செஞ்சுப்பானா? இதெல்லாம் அவங்க சொல்ற தற்கொலை வழக்குகள்ல நீங்க பாக்கலாம். அந்தக் கூட்டமைப்பு, இந்தக் கூட்டமைப்புனு எங்களுக்காகப் போராட வந்தவங்களாம் பணத்துக்கு விலை போயிட்டாங்க. இப்போ எங்களுக்குனு யாரும் இல்லை. என் மகள் கொலைக்கு நீதி கிடைக்கணும். உடனே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடணும்.  ஹாசினிங்கிற சின்னப் புள்ளைக்காக யார் யாரோ முகம் தெரியாதவங்களாம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல குரல் கொடுத்ததாலதான் அந்தப் புள்ளை சாவுக்கு நீதி கிடைச்சது. அந்த நம்பிக்கையிலதான் உங்ககிட்ட கையேந்தி நிக்கிறேன். ஹாசினிக்காகப் போராடியவர்கள் வினோதினிக்காகவும் குரல் கொடுங்களேன்” என்றார் கண்ணீருடன்.

ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் மலர்க்கண்ணிடம் பேசினோம். “அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்று வினோதினியின் தந்தைக்கே தெரியும். மாணவர்களால்தான் கல்லூரிகளின் வளர்ச்சி இருக்கிறது. அப்படியிருக்கும்போது படிக்கும் மாணவியை இப்படிச் செய்வதற்கு என்ன அவசியம்? சராசரி மதிப்பெண்ணுக்கும் கீழாகப் படிக்கும் மாணவிதான் அந்த வினோதினி. 2014-ம் ஆண்டு ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் அவர் ’பிட்’ அடித்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்து கண்டித்ததோடு, பெற்றோர்களையும் அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் கிழமை கல்லூரிக்கு வந்த அவர், வகுப்பறைக்குச் செல்லாமல் 5-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 'அவரது உடலில் எங்குமே அடிபடவில்லை' என்று கூறுகிறார்கள். தரையில் அமர்வது போன்ற நிலையிலேயே விழுந்ததால் நுரையீரலில் மட்டுமே அடிபட்டு இறந்திருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்ட அந்த 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் ஜாமீனில் எடுத்தது. அந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ரவுடிகளை வைத்து மிரட்டினார்கள் என்று புகார் அளித்தார் வினோதினியின் தந்தை. ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் படிக்கும் கல்லூரி இது. சொந்தப் பிரச்னை மற்றும் காதல் உள்ளிட்டக் காரணங்களால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு நிர்வாகம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? எங்கள் ஆசிரியர்கள்மீது எந்தத் தவறும் இல்லாததால் தற்போது அந்த வழக்குக்குத் தடை வாங்கி வைத்திருக்கிறோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு