Published:Updated:

"மீண்டும் இரண்டு என்கவுன்டர் கொலைகள் : விசாரணை இல்லாமல் மரண தண்டனை அளிக்க யார் இவர்கள்?" - அ.மார்க்ஸ்

"மீண்டும் இரண்டு என்கவுன்டர் கொலைகள் : விசாரணை இல்லாமல் மரண தண்டனை அளிக்க யார் இவர்கள்?" - அ.மார்க்ஸ்
"மீண்டும் இரண்டு என்கவுன்டர் கொலைகள் : விசாரணை இல்லாமல் மரண தண்டனை அளிக்க யார் இவர்கள்?" - அ.மார்க்ஸ்

"மீண்டும் இரண்டு என்கவுன்டர் கொலைகள் : விசாரணை இல்லாமல் மரண தண்டனை அளிக்க யார் இவர்கள்?" - அ.மார்க்ஸ்

இரண்டு நாள்கள் முன் மதுரையில் இரண்டு ‘ரவுடிகள்’ போலீஸாரால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரு அரசியல் கட்சிகளுக்கிடையேயான மோதலில் ஈடுபட்டவட்டர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் எனும் இருவரைச் செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்.ஐ. முருகன் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படை சுட்டுக் கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பல கொலைகளில் தொடர்புடையவர்கள் எனவும், கைது செய்யச் சென்ற காவலர்களை அவர்கள் தாக்க முயன்றார்கள் எனவும் தாங்கள் தற்காப்புக்காகச் சுட்டோம் எனவும் வழக்கம்போலக் காவல்துறை சார்பில் கதை சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில் 10 பேர் இவ்வாறு மதுரையில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக இன்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையில் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இவ்வாறு என்கவுன்டர் என்கிற பெயரில் போலீஸ் சுட்டுக் கொன்ற நிகழ்வுகளில் எங்கள் உண்மை அறியும் குழு நேரில் சென்று விசாரித்து அறிக்கை அளித்த வகையில் நினைவில் உள்ள சில என்கவுன்டர் கொலைகள் மட்டும் வருமாறு:

"2014 ல் ராமநாதபுரம் எஸ்.பி, பட்டணம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்டார். 2015 ல் திருநெல்வேலியில் கான்சாபுரம் கிட்டு என்கிற ஒரு முன்னாள் கிரிமினல் குற்றவாளி அவரது மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 2017 ல் தொண்டி கோவிந்தராசு என்பவர் இப்படி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். 2012 ல் இன்ஸ்பெக்டர் ஆல்வின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையிலிருந்த பிரபு, பாரதி ஆகிய இருவர் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு மானாமதுரைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதற்கெனவே அப்போது வேறு மாவட்டத்தில் பணி செய்துகொண்டிருந்த 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை, மானாமதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்கவுன்டர் கொலைகள் தொடர்பான எங்களின் உண்மை அறியும் குழு விசாரணைகளில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பலவும் வேதனைக்குரியவை. கான்சாபுரம் கிட்டு கதையை எடுத்துக்கொண்டால் அவர் பல வழக்குகளில் தொடர்புடையவர்தான். ஆனால், மனம் திருந்தி மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கு விவசாயம் செய்து வந்த நிலையில்தான் அவர் விசாரணைக்கு என அழைத்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படிக் கொலை செய்ய வேண்டிய அவசியம் ஏதாவது போலீஸுக்கு இருந்ததா? இருந்தது. அப்போது திருநெல்வேலியில் பெரிய அளவில் கொலை, கொள்ளைகள் நடப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதையொட்டி தாங்கள் ஏதோ பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் முன் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மாவட்டக் காவல்துறைக்கு இருந்தது. அதன் விளைவுதான் கிட்டுவின் கொலை. நாங்கள் அது குறித்து விசாரிக்க அவரது ஊருக்குச் சென்ற போது அவரது ஐந்து வயது மகனுக்கு ஓர் ஆற்றங்கரையில் மொட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். தந்தைக்குக் கருமாதி செய்வதற்காகத்தான் தனக்கு மொட்டை அடிக்கப்படுகிறது எனத் தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தான்.

மணல்மேடு சங்கர் எனும் ரவுடி ஜெயிலில் இருந்தபோது அவரைக் கொல்லப் போவதாக அவரிடம் போலீஸ்காரர்களே சொன்னார்கள். பஞ்சாயத்துத் தலைவரான அவரது அம்மா, இந்த நாட்டின் எல்லா உயர்நீதி மன்றங்களையும் அணுகித் தன் மகனைக் காப்பாற்ற வேண்டிக் கதறினார். தாங்கள் அவரைக் கொல்லப் போவதில்லை எனப் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அவரை
விசாரணைக்கென வெளியே கொண்டு வந்து சுட்டுக் கொன்றார்கள். இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் பலர். தங்கள் சாதித்தலைவர் பிறந்த நாள் விழாவுக்காக ஒரு வேனில் பலர் குடி வெறியில் சென்று கொண்டிருந்த போது தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டரை அவர்கள் அடித்துக் கொன்றனர். ஆனால், அந்த 20 பேரில் யார் உண்மையில் கொலைக்குக் காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சிறைச்சாலைக்குச் சென்று அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கும்பலிலிருந்து, கண்ணில் பட்ட இரண்டு பேரை அழைத்து வந்து ஆளுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி சுட்டுத் தீர்த்தார்கள். வெள்ளை ரவி என்கிற ரவுடி இவ்வாறு தன் தொழிலை விட்டுவிட்டு ஒதுங்கிக் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்தபோது அவரையும் அவருடன் கூட இருந்த ஓர் அப்பாவியையும் தந்திரமாகப் பிடித்து வந்து ஓசூர் அருகே ஒரு பாழடைந்த பங்களாவில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். 'வெள்ளை ரவியுடன் இருந்த மனிதர்', அப்படியான காரணத்திற்காக மட்டுமே கொல்லப்பட்டார். 

 நாங்கள் அது குறித்த அறிக்கையைச் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டபோது கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவியும் அங்கிருந்தார். தன் கணவனுடன் பகை கொண்ட ஒரு முதலாளி ரெட்ஹில்ஸில் உள்ளார் என்றும், அவரிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் போலீஸ் தன் கணவனை என்கவுன்டர் செய்து கொன்றது எனவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அந்த அம்மையார் சொன்னது உண்மையோ பொய்யோ ஆனால் இதுபோலப் பணம் வாங்கிக் கொண்டு என்கவுன்டர் செய்து கொன்றார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு மும்பையிலும் டெல்லியிலும் சிறையில் அடைபட்டுக்கிடந்த தயாநாயக் உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் ஆல்பம் ஒன்றை ‘அவுட்லுக்’ இதழ் வெளியிட்டிருந்ததை மறக்க முடியாது. இது தவிர பதவி உயர்வுக்காகவும், பணப் பரிசுகளுக்காகவும் (out of turn promotions and cash awards) என்கவுன்டர் கொலைகள் செய்யப்பட்டதும் உண்டு. ஆனால், என்கவுன்டர் கொலைகளில் பங்குபெற்ற அதிகாரிகளுக்கு இப்படிப் பணப் பரிசு, பதவி உயர்வு முதலியவற்றை அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் முதலியன கூறியுள்ளன. ஆனால், அரசாங்கங்கள் அது குறித்து இம்மியும் கவலைப்படுவதில்லை.

சந்தன வீரப்பன் வேட்டையின் போது பாலியல் வன்முறை, பல கொலைகள் முதலான குற்றங்கள், வீரப்பன் வேட்டைக்காக நியமிக்கப்பட்ட அதிரடிப்படை மீது சுமத்தப்பட்டன. மேச்சேரி தங்கம்மாள் என்பவர் தன்னைப் பலமுறை ‘பெரிய அதிகாரி’ பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார் என சாதாசிவா ஆணையம் முன் குற்றம் சாட்டினார். ஏழை எளிய பழங்குடி மக்கள் பலர் வீரப்பனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகக் கொல்லப்பட்டனர். எனினும் அதிரடிப்படைத் தலைவர்களில் ஒருவரான தேவாரத்திற்கு ஜெயலலிதா அரசு அப்போது பரிசளித்த வீட்டுமனையின் மதிப்பு அப்போதே ஒரு கோடி ரூபாய் எனப் பத்திரிகைகள் எழுதின. எவ்வளவோ விமர்சனங்கள், நீதிமன்றக் கண்டனங்கள் எல்லாம் இருந்தும் இந்த நிலை தொடர்வதெப்படி?

1.அரசாங்கம், காவல்துறை, ராணுவம் முதலானவை இப்படிக் குடிமக்களுக்கெதிராகச் செய்யும் அத்துமீறல்களைக் கண்டு கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன. அப்படியும் எங்களைப் போன்றவர்களின் செயற்பாடுகளால் சில காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் விரைவில் அவை திரும்பப் பெறப்பட்டு அவர்களுக்குப் பதவி உயர்வுகளும் அளிக்கப்படுகின்றன. சொராபுதீன், கௌசர் பீவி, பிரஜாபதி ஆகியோரின் புகழ் பெற்ற அந்த என்கவுன்டர் கொலை வழக்கில் கைதான குஜராத் காவல் உயரதிகாரிகள் எல்லோரும் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படுவதை அறிவோம். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். எங்களுக்கும் அப்படியான அனுபவங்கள் சில உண்டு. கான்சாபுரம் கிட்டு, எஸ்.பி பட்டணம் சையது ஆகியோர் காவல்துறையால் கொல்லப்பட்டபோது நாங்கள் அறிக்கை அளித்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் சையதைக் கொன்ற காவல்துறை ஆய்வாளர் இப்போது பதவியில் உள்ளார். இப்படித்தான் எல்லாம். எந்த ஒரு காவல் அதிகாரியானாலும் இதுவரை பெரிய அளவில் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டதில்லை.

2. பொதுமக்கள் மத்தியில் இப்படியான என்கவுன்டர் கொலைகளுக்குப் பெரிய அளவில் ஆதரவு இருப்பது இத்தகைய நிலை தொடர்வதற்கு இன்னொரு காரணம். குறிப்பாக மத்தியதர வர்க்கம் என்கவுன்டர் கொலைகளைத் தீவிரமாக ஆதரிப்பதைக் காணலாம். “என்ன சார் இப்படி எல்லாம் செய்யாவிட்டால் எப்படி சார் அப்புறம் இதெல்லாம் குறையும்?” என இவர்கள் ரொம்பப் புத்திசாலித்தனமாகக் கேட்பதை நீங்கள் காண முடியும். ஆனால், இப்படியெல்லாம் செய்தும் குற்றங்கள் குறையவில்லையே என்பதையும் குற்றச் செயல்களுக்கான சமூகக் காரணங்களையும் இவர்கள் யோசிக்கவே மாட்டார்கள். சில ஆண்டுகள் முன் சென்னை வேளச்சேரியில் ஐந்து வடமாநிலத் தொழிலாளிகள் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். அது ஓர் அப்பட்டமான போலி என்கவுன்டர் கொலை. நாங்கள் அதை விசாரிக்கச் சென்றபோது போலீஸால் அனுப்பப்பட்ட ஒரு குண்டர் படையினர் எங்களை வந்து வெளியேறச் சொன்னார்கள். அப்பகுதியில் உள்ள மக்களும் எங்களைத் தாக்க ஊக்குவிக்கப்பட்டனர். நாங்கள் அன்று தப்பி வருவதே பெரும்பாடாயிற்று. குற்றம் அறுதியாகவும் உறுதியாகவும் நிறுவப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அவர்கள் யாராயினும், அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்கிற மிக அடிப்படியான மானுட அறம் பற்றி இன்று யாரும் கவலை கொள்வதில்லை.

போலீஸ்காரர்கள், அவர்கள் எத்தனை உயர் அதிகாரிகள் ஆயினும் அவர்கள் போலீஸ்காரர்கள் மட்டுமே. அவர்கள் நீதிபதிகள் அல்ல. நீதி வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது. அந்தத் தகுதியும் அவர்களுக்குக் கிடையாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்களோ யாருமோ சொல்லவில்லை. ஆனால், போலீஸ்காரர்கள் அதைச் செய்ய முடியாது, செய்யவும் கூடாது என்பதுதான். மரண தண்டனையே கூடாது என்கிறோம். விசாரணையே இல்லாமல் மரண தண்டனை கொடுக்க இவர்கள் யார்?

அடுத்த கட்டுரைக்கு