Published:Updated:

“ஆராயிக்கு ஆம்புலன்ஸ் சீக்கிரம் வரலை... ஆனா, அவ ஊருக்கே பஸ் வர வெச்சுட்டா!'' - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

“ஆராயிக்கு ஆம்புலன்ஸ் சீக்கிரம் வரலை... ஆனா, அவ ஊருக்கே பஸ் வர வெச்சுட்டா!'' - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்
“ஆராயிக்கு ஆம்புலன்ஸ் சீக்கிரம் வரலை... ஆனா, அவ ஊருக்கே பஸ் வர வெச்சுட்டா!'' - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

னி மனித துயரில் துவண்டு, தனிப்பட்ட வாழ்வின் வலியில் உழன்றுகொண்டிருந்த நாள்களில் ஒன்று அது. மிக மோசமான ஒரு வார இறுதியை முடித்திருந்த தருணம். சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. ஶ்ரீதேவி மரணத்தின் முன்னிலையில் மறைந்து போய்க் கிடந்திருந்தது அந்தச் செய்தி. சில சமூகத் துயரங்களை ஒரு நொடி கவனித்தால் போதும், தனி மனித துயரங்கள் தண்ணீரில் கரைத்த மலங்களாக மறைந்துவிடும். எனக்கும் அப்படித்தானிருந்தது. 

அங்கு நான் போயே ஆக வேண்டிய அவசியமிருக்கவில்லை. இருந்தும் என்னால் போகாமல் இருக்க முடியவில்லை. எப்படி ஒருவனால் இந்த எல்லைக்குச் செல்ல முடியும்? அதுவும் அந்த 14 வயது சிறுமி? அந்த ரத்தத்தையும், வலியையும், சாவையும், கொடூரத்தையும், குரூரத்தையும் கண்டு உணர விழுப்புரத்தை நோக்கி வண்டியை அழுத்திக்கொண்டிருந்தேன். என் சில ஆண்டுகால பயணங்களில் நான் சந்தித்த பல சம்பவங்கள் என் மனத்தில் வந்து போயின. குறிப்பாக, 'அத்தியூர்' விஜயா குறித்து சிந்தனைகள் இந்தப் பயணத்தில் அதிகம் எழுந்தது எனக்கு. 1991-ல் செஞ்சி பக்கமிருக்கும் அத்தியூர் எனும் கிராமத்தில் பாண்டிச்சேரி காவல்துறையைச் சேர்ந்த சிலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி இறந்து போனவர். ஒரு நிகழ்ச்சிக்காக அவரோடு இரண்டு நாள்கள் உடனிருந்த நினைவுகள், அவரின் பேச்சு, என்னை உண்மையிலேயே தன் தம்பியாகக் கொண்டாடிய பாசம், பார்த்து வந்த சில மாதங்களில் எனக்கு வந்து சேர்ந்த அவரின் மரணச் செய்தி, அவர் வளர்த்த அந்த முயல்கள்... என அவரின் நினைவுகளில் திளைத்திருந்த தருணம், விழுப்புரத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். அங்கிருந்து திருக்கோவிலூர். அங்கிருந்து வெள்ளம்புத்தூர் கிராமம். 

மெயின் ரோட்டிலிருந்து வலது பக்கம் திரும்பவும், அந்தக் குட்டி வெள்ளை நிற நாய் வண்டிக்கு முன்னே வரவும் சரியாக இருந்தது. மெதுவாகத்தான் திருப்பினேன் என்பதால் சடன் பிரேக் பிடிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. நெடுநெடு உயரம், ஒல்லி, கலைந்திருந்த முடி, கழண்டிருந்த ஜடை, பாவாடை, சட்டை சகிதமாக அந்தப் பெண் நடந்து வந்து அந்த நாய்க் குட்டியைத் தூக்கினார். மன வளர்ச்சி குறைந்தவர் என்பது தெரிந்தது. கோயிலை ஒட்டிய மரத்தின் அடியில் போலீஸின் பொலீரோ நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு மட்டும்தான் நிழல் இருந்தது. அதனருகே வண்டியை நிறுத்தினேன். நான்கைந்து போலீஸார் இருந்தனர். யாரும் எதுவும் கேட்கவில்லை. இறங்கி ஊருக்குள் நடக்கத் தொடங்கினோம். 

அந்தச் சின்ன சந்தின் கடைசியில் போலீஸ் வண்டியும் சில போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அதுதான் ஆராயி வீடு என்பது புரிந்தது. கடுமையான வெயில். ஒரு சின்னக் குடிசையின் முன்னர் சில பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகே உட்கார்ந்தோம். என் சீனியர் ரிப்போர்ட்டர் அவர்களோடு உரையாடத் தொடங்கினார். நான் எதுவும் பேசாமல் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தேன். 

"என்னத்த சொல்றது... ஒரே பயமா இருக்குது. ஆம்பிளைங்க பூரா வேலைக்கு பெங்களூருக்கு போயிடுறாங்க. பொட்டச்சிங்க நாங்க இங்க தனியா இருக்கிறத நினைச்சாலே பயமாத்தான் இருக்குது..." என்று சலித்து சொன்னபடியே அங்கிருந்து கிளம்பினார் ஓர் அக்கா. 

"க்கா...ஏன் எல்லோரும் பெங்களூருக்கு போறாங்க?" என்று அவரை நிறுத்திக் கேட்டேன். 

"வேலை வேணும்ல... இங்க விவசாயம் செத்துப் போச்சு. கூலி வேலைக்குக்கூட போக முடியில. அப்படியே எங்கேயாவது போனா நூறு, இருநூறுதான் கிடைக்குது. அதே பெங்களூர்லன்னா 600 லருந்து 700 வரைக்கும் கிடைக்கும்..." என்று சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

"நிலத்தகராறில் விழுப்புரம் வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த ஆராயி, அவரின் மகன் மற்றும் மகள் வெட்டப்பட்டனர்."

"ஆராயின் 14 வயது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்".

"ஆராயின் 8 வயது மகன் சமையன் கொலை".

"சாதியப் பிரச்னையில் தலித் குடும்பத்தின் மீது கொலைவெறித் தாக்குதல்."

இப்படியாக இந்தச் சம்பவங்கள் குறித்து நிறைய செய்திகளைக் கேட்டிருந்தேன். ஆனால்,  எதையும் மண்டையில் ஏற்றிக்கொள்ளவில்லை. எதுவும் தெரியாதவனாகத்தான் அந்த ஊருக்குள் நுழைந்தேன். 

ஆரம்பத்தில் ஆராயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசத் தயங்கினார்கள். ஆராயியின் மூத்த மகன் பாண்டியனிடம்தான் முதலில் பேசினோம்...

"பெங்களூர்ல, சட்டியில சிமென்ட் கலவை கலந்தினு இருந்தேன் சார். அப்பத்தான் போன் வந்துச்சு. ஒண்ணும் புரியில. ஒரே பதற்றமாயிடுச்சு. அப்படியே தூக்கிப் போட்டுட்டு வந்து பஸ் ஏறிட்டேன். இங்க வந்து பார்க்கும்போது பாப்பாளயும், அம்மாவையும் பாண்டிச்சேரிக்குக் கொண்டு போயிட்டிருந்தாங்க. நான் மூத்தவன் சார்...எனக்குக் கீழ சரத், விஜய்...அப்புறம் அஞ்சுலட்சம், தனம், கடைசியா சமையன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கினு போனோம். 'டிபி வந்துடுச்சு...உள்ள எல்லாம் அழுகிப் போயிடுச்சு, ஆறு மாசந்தான் தாங்கும்'ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அப்புறம்தான், உடனே இதோ இவள (பக்கத்தில் இருக்கும் தன் மனைவியைக் காட்டுகிறார்) கல்யாணம் செஞ்சிக்கிட்டன். என் அத்த மவதான். அப்புறம் அப்பா செத்துப் போயிட்டாரு. சரின்னு...நான், தம்பி சரத், விஜய் மூணு பேரும் பெங்களூருக்குப் போய் ஆளுக்கு ஒரு வேலையப் பார்க்க ஆரம்பிச்சோம். தங்கச்சி அஞ்சு லட்சம் திருப்பூருக்கு வேலைக்குப் போயிடுச்சு. தனமும், சமையனும் படிச்சினு அம்மா கூடவே இருந்தாங்க..." என்று சொல்லி முடித்து, இதற்கு மேல் என்ன சொல்வது என்பதுபோல் அமைதியாக இருந்தார். 

"என்ன நடந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க?"

"தெரியலையே சார்...நான் வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுப் போயிடுச்சு. எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல."

"உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம்? குறிப்பா உங்களுக்கும் ஒருத்தருக்கும் நிலப்பிரச்னை இருந்ததாக?

"தெரியல சார்...நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். நில சம்பந்தமா ஒரு பிரச்னை இருந்துச்சு. அவரு பக்கத்து ஊர்காரர்தான். கட்டாப்பு (ராஜேந்திரன் என்பது அவர் இயற்பெயர்). ஆனா, அந்த ஆளு இப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு"

உங்க ஊர்ல சாதிப் பிரச்னைகள் ஏதாவது?

"அப்படில்லாம் எதுவும் இல்லையே. எல்லாம் அண்ணன், தம்பிங்களாத்தான் இருக்கோம். இது காலனி, அந்தப் பக்கம் ஊரு . அதுக்கு அந்தப் பக்கம் குறவங்க இடம். எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல..."

அந்தக் கடைசி கேள்வி கேட்க ரொம்பவே தயக்கம் இருந்தது. 

தனத்த ஏதாவது பலவந்தப்படுத்தினாங்கன்னு?

பாண்டியனிடம் பெரிதாக எந்தச் சலனமும் இல்லை.

"தெரியல சார்... ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. டாக்டரும் இன்னும் ரிப்போர்ட் எதுவும் கொடுக்கலியே..."

இன்னும் சிலரிடம் பேசிவிட்டு ஆராயி வீட்டிற்கு நகர்ந்தோம். இரண்டே சிறு அறைகள் கொண்ட மிகவும் சின்ன வீடு. ஒரு 'க்ரைம் சீன்' அப்படி யாரும் எளிதாகச் சென்று பார்க்கும் நிலையில் இருந்து, நான் இதுவரை எங்குமே பார்த்ததில்லை. இத்தனைக்கும் சம்பவம் நடந்து மூன்று நாள்களே ஆகியிருந்தன. அந்த வீட்டுக் கதவு மட்டும் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த இரும்புக் கதவும் கால்வாசி உடைந்து கிடந்ததால் தலையை அடியில் விட்டுப் பார்த்தால் முழு அறையும் தெளிவாகத் தெரியும். நான் அப்படிப் பார்ப்பதை போலீஸும் பார்த்துக்கொண்டேதானிருந்தது. பின்னர், ஜன்னல் வழியாக சில புகைப்படங்களை எடுத்தேன். சுவற்றில் காய்ந்துபோயிருந்த ரத்தம் இன்னும் இருந்தது. 

கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. இந்த அறைக்குள் 14 வயதே ஆன குழந்தையை...சரி அவன் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்று அறிக்கை வந்தாலும்கூட...தலையில் அப்படி அடித்திருக்கிறான். ஆராயிக்கும் தலையில்தான் அடி. சமையனின் சாவை பக்கத்து வீட்டு அக்கா இப்படி விவரித்தார்... 

"சமையனுக்கு 8 வயசு தான் சார். ரொம்ப மெலிசா இருப்பான். உடம்புல ஒண்ணுமே இருக்காது. சும்மா காலி அரிசிப் பைய தூக்குற அளவுக்குத்தான் இருப்பான். அவன சுவத்தோட சேர்த்து ஒரே அடி... அதுலயே அவன் மண்ட,கிண்டல்லாம் குலைஞ்சுப் போயிடுச்சு...அது போதாதுன்னு வெறி கொண்ட தே....... அவன் நெஞ்சுலய மிதிச்சிருக்கானுங்க. அந்தப் புள்ளையோட நெஞ்சு எலும்பெல்லாம் தூள்தூளா உடைஞ்சு போயிடுச்சு சார். இத சத்தியமா ஒருத்தன் பண்ணியிருக்க மாட்டான்னுதான் நினைக்கிறேன். இன்னா வெறி சார் அவனுங்களுக்கு...நாசமாப் போவானுங்க..."

இப்போது மீண்டும் அந்தத் தெருவில் இருந்தவர்களிடம் பேசினோம். இப்போது அவர்கள் இன்னும் சில கூடுதல் தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். 

"நாங்க தனியா இருக்கும் நேரத்துல வீட்டுக்கு வந்து தீப்பெட்டி வேணும், தண்ணி வேணும்ன்னு கட்டாப்பு (ராஜேந்திரன்) தொந்தரவு பண்ணும் சார். பாத்ரூம்ல குளிக்கப் போனா பார்த்திட்டே இருக்கும். அதுக்குப் பயந்தே அது இல்லாத நேரத்துலதான் சார் குளிக்கவே போவோம்." என்று சொன்னார் அஞ்சுலட்சம்.

"சார்...கட்டாப்புல்லாம் டொக்கு சார். அந்தாளுக்கு 55 வயசிருக்கும்.பொம்பளைங்ககிட்ட கொஞ்சம் குடைச்சல் குடுக்கும் ஆனா,  அதெல்லாம் இப்படிப் பண்ண வாய்ப்பே இல்ல" என்று தன் வயதையும் தாண்டி விஷயத்தைப் பேசினான் அந்த தெருவிலிருக்கும் ஒரு சிறுவன். 

இப்படியாக விசாரணகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தபோதுதான், அந்த அக்கா இந்த விஷயத்தின் மொத்தப் பார்வையையும் திசை திருப்பினார்.

"இது எங்க ஊர்ல நடக்கிற மூணாவது சம்பவம் சார். ஏற்கெனவே, ஊருக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அவங்க மேல்சாதி. திடீர்னு ஒரு நாள் ராத்திரி வீட்டுக்குள்ள புகுந்து அந்தப் பொண்ணோட புருஷனை அடிச்சுப் போட்டுட்டு, இந்தப் பொண்ணையும் தலையில அடிச்சுப் போட்டுப் போயிருக்கானுங்க. ஆனா, அதுல யாருக்கும் உயிருக்கு எதுவும் நடக்கலைங்கிறதாலேயும், பொண்ணு விஷயங்கிறதாலயும் மறைச்சுட்டாங்க. போலீஸ்கிட்ட போகல. அதே மாதிரி ஆறு மாசத்துக்கு முன்னாடி குறவ பொண்ணு ஒருத்தியவும் இப்படித்தான் அடிச்சுப் போட்டு பண்ணிட்டாங்க.அதுவும் கேஸாகலை.  அது மட்டுமில்லாம, ஊருல ரொம்ப புழுக்கமா இருக்குங்குறதால கதவ எல்லாம் மூட மாட்டோம். அப்படியே திண்ணையிலயும், வாசல்லயும் நீட்டி படுத்துடுவோம். ரெண்டு பொண்ணுங்களோட தாலி செயினையும் அறுத்திட்டுப் போயிருக்கானுங்க. என்ன நடக்குதுன்னே தெரியல...ஒரே பயமா இருக்கு. இந்த அரசாங்கம்தான் எங்களுக்கு ஏதாவது பாதுகாப்ப செஞ்சு கொடுக்கணும் சார் ..." என்று அவர் சொன்னார். 

அதைத் தொடர்ந்து மொத்த ஊரையும் சுற்றி வந்தோம். பாதிக்கப்பட்ட அந்த குறவர் இனப் பெண்ணைப் பார்க்க அவர் வீட்டை தேடிப்பிடித்துச் சென்றோம். ஆனால், அவர் வீட்டில் அன்று யாருமில்லை. அவரின் அத்தையிடம் பேசினோம். ஆனால், இந்த விஷயங்கள் குறித்துப் பேச யாரும் முன்வரவில்லை. பொதுவாக, "என்ன நடந்ததுன்னே தெரியாது. திடீர்னு யாரோ தலையில அடிச்சதும், மயங்கிடுறாங்க. அப்புறம் அக்கம், பக்கத்துல இருக்கவுங்க போய் பார்க்கும்போது ரத்த வெள்ளத்துல கிடக்குறாங்க...' என்பதைத் தாண்டி யாரும் தெளிவாக எதையும் சொல்லவில்லை. தாக்கப்பட்ட இரண்டு பெண்களும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக ஊர் மக்களில் பலர் சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க முடியாததால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்கள் வீட்டில் பணமோ, நகையோ கொள்ளை போனதாக யாரும் சொல்லவில்லை. அதேபோல், ஆராயி வீட்டிலும்கூட சில ஆயிரங்கள் ரொக்கம் இருந்திருக்கின்றன. ஆனால், வந்தவன் அதை எடுக்கவில்லை. 

ஊரைச் சுற்றி வந்ததில் தண்ணீர்த் தொட்டிகள், சுடுகாட்டுக் கட்டடம் போன்ற இடங்களில் ஊர்த் தலைவர் N..நடேசன் என்று இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரைத் தேடிப் போனோம். ஒரு வீட்டின் வாசலில் சின்ன ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்தார். மேல் சட்டையில்லை. பழங்கால ரகக் கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார். அவரின் அருகே, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு ஆர்ப்பரிக்க அவரின் சில அடிபொடிகள்.

"ஐயா...இந்த ஆராயி வழக்கு சம்பந்தமா உங்ககிட்ட பேசலாம்னு?!"

"பேசுங்க... என்ன சொல்லணும்? எங்கிட்டதான் பவரே இல்லையே. தலைவருங்குற பவரு இருந்தா ஏதாவது செய்ய முடியும்."

"இல்லீங்க ஐயா...இதுக்கு முன்னாடியே ஊர்ல இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்திருக்கு. அப்போ நீங்கதானே தலைவர்?"

"இல்லீங்க... அந்தச் சம்பவம் நடக்கும்போது நான் பவர்ல இல்லைங்க. உள்ளாட்சித் தேர்தல் நடந்து எத்தனை காலமாகுது? கணக்குப் போட்டுப் பார்த்துக்குங்க? பவரு இருந்தாதான் ஏதாவது செய்ய முடியும். பவரு இருக்கும்போதே, நான் .....(தன் தலித் சாதியின் பெயரை குறிப்பிடுகிறார்) சாதி... இவனுக்கு என்ன மரியாதைன்னுதான் என்னை நடத்துவானுங்க. அதையும் மீறி இந்த ஊருக்கு நான் எவ்வளவோ செய்திருக்கேன்..." என்று அவர் தன் கதைகளைப் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால், அவர் சொன்னதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இந்த உள்ளாட்சித் தொடர்பானது. செயலற்று செத்துக் கிடக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டின்மைக்கும், இந்தக் கொடூரக் கொலைக்கும் மிக முக்கிய சம்பந்தம் இருக்கிறது. 

வெள்ளம்புத்தூர் பகுதியில் ரயில்வே பாலம் வேலை நடைபெறுவதைக் காரணமாகக் காட்டி ஊருக்குவரும் பேருந்து நிறுத்தப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பாலம் வேலை முடிந்துமேகூட ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. இருந்தும் வெள்ளம்புத்தூருக்குப் பேருந்து வசதி செய்யப்படவில்லை. பலமுறை ஊர்மக்கள் போராடியும், மனு கொடுத்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்கள்  உட்பட அனைவருமே தேவனூரில் இறங்கி 3 கிமீ தூரம் நடந்துதான் வர வேண்டும். அதுவும் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ரயில்வே தரைப்பாலம் பகுதியில் ஒரு சிறு விளக்குக்கூட கிடையாது. கும்மிருட்டில்தான் நடந்து வர வேண்டும். அதேபோல், சம்பவம் நடப்பதற்கு 5 நாள்களுக்கு முன்பு மின்சார வயரில் பாதிப்பு ஏற்பட்டு, தெருவிளக்குகள் வெடித்துப் போயிருக்கின்றன. 5 நாள்களுக்கும் மேலாக மொத்த ஊருமே இருளில்தான் மூழ்கிக் கிடந்திருக்கிறது. ஆராயி வீட்டில் சம்பவம் நடந்த அன்றும் அந்த இருள்தான் சூழ்ந்திருந்தது. ஆனால், சம்பவம் நடந்து ஊடக கவனம் பெறத் தொடங்கியதும் பரபரவென எல்லாம் மாற்றப்பட்டு இப்போது பேருந்தும் விடப்பட்டுள்ளது.

"கூறு கெட்டவனுங்க...ஊருல எல்லாருமே 9 மணிக்குத் தூங்கவே போயிடும். இப்போ நைட்டு 10 மணிக்குக்கூட ஆளே இல்லாம தனியா பஸ்ஸ ஓட்டிட்டுப் போறானுங்க. இந்த பஸ்ஸ விடுங்கடான்னு எத்தனை மாசமா போராடிக்கிட்டு இருக்கோம். இதோ இந்த லைட்டுங்க...ஒரு மணி நேரத்துல மொத்த ஊருக்கும் வெளிச்சத்தக் கொடுத்தானுங்க. ஒரு பஸ்ஸுக்கும், இந்த லைட்டுக்கும் எங்க ஊர்ல எழவு விழணும். இவனுங்க எல்லாம் எந்த காலத்திலயும் வெளங்க மாட்டானுங்க..." என்று தாள முடியா ஆற்றாமையோடும், பெரும் கோபத்தோடு பேசினார் ஊர்ப் பெரியவர் ஒருவர். 

சமையனின் இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டன. தனம் ஜிப்மர் ஐசியூவில் இருக்கிறார். ஆராயியும் ஜிப்மரில்தான் இருக்கிறார். இருவருமே இன்னும் கோமாவிலிருந்து நினைவுக்கு திரும்பவில்லை. தனத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே போகிறது. பிழைப்பதே கடினம் என்கிற நிலை. ஆராயி அவ்வப்போது பயத்தில் கைகளைத் தூக்கித் தூக்கிப் போடுவதால் அவரின் கைகள் கட்டிலோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றைய நாள் உழைத்தால் மட்டுமே அன்றைய நாளுக்கான உணவு என்ற குடும்ப நிலை. படிப்பறிவு இல்லை. அரசியல் சதுரங்க ஆட்டங்கள் புரியவில்லை. காவல்துறையின் திறன்மிக்க சூழ்ச்சிகள் தெரியவில்லை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது ஆராயி குடும்பம். 

எல்லாம் முடிந்து சென்னையை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தோம். கடைசியாக கிராமத்தைவிட்டு கிளம்பும்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் சொன்ன விஷயம் எனக்குள் ஓடி, பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தது...

“ சார்...சம்பவத்த முதல் ஆள் பார்த்த நேரம் காலை 6.15. மொத்த ஊரும் கூடியது 6.30. முதல்ல நான் ஆம்புலன்ஸுக்குக் கூப்பிட்டது 6.40. கையோட போலீஸுக்கும் தகவல் சொன்னேன். திருக்கோவிலூர்லருந்து ஆம்புலன்ஸ் ஊருக்கு வர அதிகபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால், அன்னிக்கு ஆம்புலன்ஸ் வந்தது 7.37க்கு. ஒரு மணி நேரமா அந்த ரத்த வெள்ளத்துல ஆராயியும், தனமும் துடிச்சிட்டே கிடந்தாங்க சார். போலீஸ் ஸ்பாட்டுக்கு வந்தது 7.45 மணிக்கு. அதுவும் ஒரே ஒரு எஸ்.ஐ மட்டும்தான் வந்தாரு. கணக்குப் பார்த்தா சம்பவத்த முதல் ஆளு பார்த்தலருந்து ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தனத்தையும், ஆராயியையும் ஆம்புலன்ஸ்ல ஏத்துனோம். ஒருவேளை சீக்கிரமே அவங்கள கொண்டு போயிருந்தா ரெண்டு பேரும் இந்நேரம் கண் முழிச்சிருப்பாங்களோ?''

சென்னையை அடைந்திருந்தோம். நெருக்கியடித்துக்கொண்டிருந்த அந்த வாகன நெரிசலில், எந்தப் பக்கமும் நகர முடியாமல் திணறிக் கொண்டிருந்தது அந்த ஆம்புலன்ஸ். அதன் அவசர கால ஒலி மட்டும் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டேயிருந்தது... 

Note: 21-02-2018 அன்றைய நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை ஆராயி வழக்கில் யார் குற்றவாளிகள் என்பது தெரியவில்லை. யாரும் கைது செய்யப்படவுமில்லை.