Published:Updated:

"இல்லை என்றால் இல்லைதான்..." - இந்தியாவின் மிஸ்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

"இல்லை என்றால் இல்லைதான்..." - இந்தியாவின் மிஸ்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
"இல்லை என்றால் இல்லைதான்..." - இந்தியாவின் மிஸ்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

''இல்லை என்றால் இல்லைதான்'' - இந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமிக்கது என்பதை உணர்ந்து சில நாடுகள் திருமணத்துக்குப் பின், ஒரு பெண்ணை அவரின் கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது தவறு என்பதை சட்டமாக இயற்றியுள்ளன. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் இன்னும் இதனைச் சட்டமாக்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம். "மனைவியானவள், கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான போகப்பொருள் அல்ல. அவளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன" என்பதைத் தொடர்ந்து பல அமைப்புகள் வலியுறுத்திக் கொண்டுதான் உள்ளன. ஆனாலும் இன்னும் இந்தியாவில் பல பெண்கள், பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து மத்திய குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவையாக உள்ளன.

பெண்களை துன்புறுத்தக்கூடிய பல வழிகளில் ஒன்றாக, செக்ஸ் என்பதை பல ஆண்கள் தங்களின் ஆயுதமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அதிலும் நூறு பேரில் ஒன்பது ஆண்கள், 'மனைவியானவள் தாங்கள் நினைக்கும் போதெல்லாம் உடலுறவுக்குச் சம்மதிக்க வேண்டும்' என்று நினைப்பவர்களாகவே உள்ளனர். இதை குடும்ப நல அமைச்சக சர்வே தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரத்தில் ஆந்திரப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. 100 ஆண்களில் 28 பேர் இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த வரிசையில் தமிழகம் 12.1 சதவிகிதத்துடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இது இந்திய சராசரியான ஒன்பது சதவிகிதம் என்ற அளவை விட அதிகம். சிலர் நேரடியாக இப்படி நினைப்பதை தவிர்த்து மிரட்டல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். உடலுறவுக்குச் சம்மதிக்காத மனைவிக்கு நிதி உதவி அளிக்காமல் கஷ்டப்படுத்தும் செயல்களில் நூறில் 11 ஆண்கள் ஈடுபடுதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது. இதிலும் தமிழகம் தேசிய சராசரியை விட அதிகம்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை 13 சதவிகித ஆண்கள், இந்த மனநிலையில் இருக்கிறார்கள். தெலங்கானா 30.7 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்கிறது. மனைவி மீது கோபம் கொண்டு தாக்குவதில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மிக மோசமான சதவிகிதத்தை வைத்துள்ளன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா முறையே 43 மற்றும் 42.6 என்ற விகித அளவில் உள்ளன. இந்த விஷயத்தில் தேசிய சராசரி 18. இதிலும் தமிழகம் மோசமான தரவரிசையையே கொண்டுள்ளது. 

பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு என பேசும் இந்த நாட்டில் மகளிரின் அடிப்படை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாலியல் உறவுக்குச் சம்மதிக்காத மனைவியை தாக்கும் செயலை இந்திய அளவில் நூறில் ஒன்பது ஆண்கள் மேற்கொள்கிறார்கள். தமிழகத்தில் இந்த அவலம் 11.2 சதவிகித அளவில் உள்ளது. குடிப்பழக்கமும், குடித்துவிட்டு உடலுறவுக்கு அழைக்கும் பழக்கமும் பெண்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு வைத்துக்கொள்ளும் மனநிலையில் மனைவி இல்லாததை, இந்தியாவில் நூறில் 15 ஆண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் முதலிடம் வகிப்பது சிக்கிம். அங்கு 42 பேர் என்ற அளவிலும், இரண்டாமிடத்தில் அதிர்ச்சியளிக்கும்விதமாக தமிழநாடு 37.4 பேர் என்ற அளவில் இரண்டாமிடத்துலும் உள்ளன.

load

இவ்வளவு கொடுமையான நிகழ்வுகளையும் தாங்கிக் கொண்டேதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறாள் இந்தியப் பெண். '21 வயதைத் தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்' என்று சொல்லும் இந்தச் சமூகத்துக்காக தன் வாழ்க்கையைத் திருமண பந்தத்துக்குள் நுழைப்பவள், 'முடியாது' என்று தன் விருப்பத்தைச் சொல்வதற்குக்கூட உரிமையற்றவளாக வலம் வருகிறாள் என்பதுதான் உண்மை.  

இதுபோன்றப் பிரச்னைகள் தொடர்பாக, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான அமைப்பின் (M.A.S.E.S) நிறுவனர் கொற்றவையிடம் பேசினோம். "பொதுவாக ஒரு பெண்ணின் உடல் என்பது உடைமையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆணாதிக்க

சமூகத்தில் இந்த மனநிலைதான் நிலவி வருகிறது. வேசி கலாசாரம் தொடங்கி, கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையேயான 'சியர் லீடர்ஸ்' வரை எல்லாவற்றையும் பெண்களின் உடலை மையப்படுத்தியே பார்க்கும்நிலை உள்ளது. ஆண்களின் தேவையைப் பூர்த்திசெய்யவே பெண்கள் என்கிற மனப்போக்கு இங்கு மலிந்து காணப்படுவதாலேயே, உடலுறவுக்கு மனைவி மறுக்கும்நிலையிலும் ஆண்கள் கோபப்படுகிறார்கள். காமம் குறித்த சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம். பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற புரிதல்கூட இங்கு இல்லை. பெண்ணுக்கென்று ஒரு உரிமை இருக்கிறது என்ற விஷயத்தைக்கூட அங்கீகரிக்காத இந்த சமூகம், திருமணத்துக்குப் பின் பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்பவே பாலியல் உறவுக்கு அனுமதிப்பாள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளும்?

முதலில் குடும்பம்தான் ஆகப்பெரிய வன்முறை நிறைந்த அமைப்பாக உள்ளது. பெண்ணுக்கு விருப்பமில்லை என்பதை குடும்ப உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இதற்குத் தீர்வுகாண ஆண்தான் முற்பட வேண்டும். அவளது சூழலையும், உளவியலையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இந்த சமூக அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு இந்தச் சமூகம் முதலில் மாற வேண்டும்" என்றார்.

குடும்பச் சூழ்நிலைகளும் அவளுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. #MeToo போன்ற போராட்டங்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவனுடனான உறவை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்பதை அவள் தீர்மானிக்கும் நிலை வரவில்லை. இது சட்டமாவதற்குள் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுவது நிதர்சனம். ஆனால் இந்த நிலையை மாற்ற ஆண்களால் முடியும். ஒரு பெண் ''இல்லை என்றால் இல்லை'' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனிதி மகிழ்ச்சியடைவாள்... அவள் விரும்பும் மகிழ்ச்சியை கொடுத்துதான் பாருங்களேன்....!