Published:Updated:

லிப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்; சினிமா பாணியில் நடந்த வழிப்பறி

லிப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்; சினிமா பாணியில் நடந்த வழிப்பறி
லிப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்; சினிமா பாணியில் நடந்த வழிப்பறி

லிப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்; சினிமா பாணியில் நடந்த வழிப்பறி

பைக்கில் லிப்ட் கொடுத்த மாணவரை சினிமா பாணியில் கடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை புதுச்சேரி போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.

புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான ரவியின் மகன் விபின் ஷியாம். 19 வயதான இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வை எழுதியிருக்கிறார். இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். புஸ்ஸி வீதி- பாரதி வீதி சந்திப்பு அருகே சென்றபோது அங்கு 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஓர் இளைஞரின் கால் அடிபட்டிருந்ததால் வலியில் துடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியே சென்ற விபின் ஷியாமிடம் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டுமென்று இருவரும் லிப்ட் கேட்டனர். உடனே நின்ற ஷியாம் அவர்கள் இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏறச் சொன்னார். ஆனால், ”மருத்துவமனைக்கு சீக்கிரம் செல்ல வேண்டும். அதனால் வண்டியை நான் ஓட்டுகிறேன்” என்று அந்த இருவரில் ஒருவன் கூறியிருக்கிறான். அதை ஏற்றுக்கொண்ட விபின் ஷியாம் இருவருக்கும் நடுவில் அமர்ந்துகொண்டார்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய மோட்டார் சைக்கிள், கிழக்கு கடற்கரை சாலை வழியாகக் காலாப்பட்டு நோக்கிச் சென்றதால் அதிர்ச்சியடைந்த விபின் ஷியாம், “ஹாஸ்பிடல் போகாம எங்கே போறீங்க?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு, “பேசாமல் வா. இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம்” என்று இருவரும் மிரட்டியதால் பயத்தில் உறைந்த ஷியாம் அமைதியாக அமர்ந்துவிட்டார். சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு சென்ற அவர்கள் மரக்காணத்துக்கு அருகேயுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அங்கே கீழே கிடைத்த மரக் கட்டையை எடுத்து விபின் ஷியாமை மிரட்டிய அவர்கள், அவர் கழுத்தில் போட்டிருந்த தங்கச் செயின், வெள்ளி கைச் செயின், 6,500 ரொக்கப் பணம், ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். பின்னர் விபின் ஷியாமை அங்கேயே விட்டுவிட்டு அதே பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அதன்பின் அந்த வழியாகச் சென்ற ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டினரிடம் நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் அவரை அழைத்து வந்து ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நகரின் மையப் பகுதியில் கடத்தப்பட்டிருப்பதால் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிச் சென்றவர்களைத் தேடி வருகிறது போலீஸ். லிப்ட் கொடுத்தவரிடமே வழிப்பறி செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு