Published:Updated:

யார் அந்த சுஜாத் புகாரி?- காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை!

யார் அந்த சுஜாத் புகாரி?- காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை!
யார் அந்த சுஜாத் புகாரி?- காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை!

யார் அந்த சுஜாத் புகாரி?- காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை!

துப்பாக்கிக்குண்டுகளின் ஓசைகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு மண்ணில், பூக்களை மலரச்செய்ய விரும்பும் யாருக்குத்தான் உயிர் நிலைத்துவிடும்.. காஷ்மீரில் கொல்லப்பட்ட பத்திரிகையாசிரியர் சுஜாத் புகாரி உட்பட? 

இன்றைய காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பசரத் அகமதுவின் சகோதரர்தான் புகாரி என்றாலும், அந்த செல்வாக்கை வைத்து செய்தித்தொழிலையோ வர்த்தகத்தையோ பார்த்துக்கொண்டு வசதியான வாழ்க்கையை வாழ சுஜாத் புகாரிக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட’ தி இந்து’ நாளேட்டிலும் அதன்’ ஃபிரன்ட்லைன்’ இதழிலும் பணியாற்றியவர், ஒரு கட்டத்தில் காஷ்மீர் பத்திரிகைகளில் பணியாற்றுவதென முடிவுசெய்தார்.  பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 'ரைசிங் காஷ்மீர்' எனும் ஆங்கில நாளேட்டைத் தொடங்கினார். இரு தரப்பு பயங்கரவாதிகளையும் ஆதரிக்காமல், காஷ்மீர் மண்ணில் அமைதியான வாழ்க்கை திரும்பவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, பணியாற்றிவந்தார். 

சொந்த இனத்து மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து அக்கிரமங்களுக்கும் எதிராக, ஜனநாயக உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதே அவரின் பத்திரிகைக் கொள்கையாக இருந்தது.  

தலைநகர் டெல்லியில் மட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட காஷ்மீரி பத்திரிகையாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், புகாரிக்கு அதில் ஆர்வம் இல்லை. சொந்த மண்ணிலிருந்து உலகுக்கு செய்திகளை அளிப்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ஆங்கில ’ரைசிங் காஷ்மீர்’ மட்டுமல்ல, காஷ்மீரி மொழியில் சங்கர்மால், உருது மொழியில் புளண்ட் காஷ்மீர் ஆகிய பத்திரிகைகளையும் நடத்தினார். 

1997 முதல் 2012வரை ’தி இந்து’ குழுமத்தில் காஷ்மீர் செய்தியாளராகப் பணியாற்றினார், புகாரி. அதற்கு முன்னரும் உள்ளூர் பத்திரிகையில் செய்தியாளராக இருந்துள்ளார். 1996 ஜூலை 8-ம் நாளன்று காஷ்மீரின்  அனந்த்நாக் மாவட்டத்தில் ஆயுதக்குழுவான இக்வான் இயக்கம், 19 உள்ளூர் பத்திரிகையாளர்களைக் கடத்திச்சென்றது. அதில் புகாரியும் ஒருவர். அப்போது ‘எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு’க்கு அளித்த பேட்டியில், “இங்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் எனக் கண்டுபிடிப்பதே சாத்தியம் இல்லை” புகார் குறிப்பிட்டிருந்தார். 

அவரின் மரணத்துக்கும் எந்த இயக்கமோ சக்தியோ இதுவரை பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.  

அது ஒருபக்கம் இருக்க, புகாரியின் இறப்புக்கு காஷ்மீரின் அனைத்துத்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலான தரப்புகளிலிருந்து புகாரியின் சொந்த ஊரில் நடந்த இறுதிநிகழ்வில் நேரில் பங்கேற்றனர். 

அதுவும், இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதும் ரமலான் மாதத்தில், ரம்ஜானுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக, ஸ்ரீநகரில் வைத்து அவர் கொல்லப்பட்டது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியடையச் செய்துவிட்டது.   வெள்ளிக்கிழமை முற்பகல் வடக்கு காஷ்மீர் பகுதியான பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி கிராமத்தில் சுஜாத் புகாரியின் உடல் அடக்கம்செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். 

முதலமைச்சர் மெஹ்பூபா முக்தி, முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நசீர் அஸ்லம் வானி, மாநில அமைச்சர்கள் பலர் மற்றும் ஹுரியத் இயக்கத் தலைவர் பேரா. அப்துல் கனிபட், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் உட்பட ஏராளமானவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்களில், முக்கியமானவர்கள். 

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, கல்வியாளர்கள் பேராசிரியர்கள் சமன் அசருதா, பசார் பசீர், மஜ்ரூ ரசீது, மௌலானா சௌகத் உசைன் ஹெங், கிரேட்டர் காஷ்மீர் நாளேட்டின் ஆசிரியர் ஃபயாஸ் அகமது காலூ, காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் ஜாம்வால், காஷ்மீர் இமேஜஸ் ஆசிரியர் பசீர் மன்சார், காஷ்மீர் லைஃப் ஆசிரியர் மசூத் உசைன், கல்வியாளர்கள் காஷ்மீர் பல்கலை. துணைவேந்தர் குர்சித் அந்த்ரபி ஆகியோரும் புகாரியின் இறுதிவணக்கம் செலுத்தினர். 

பத்திரிகையாளர் பணியைத் தாண்டி, புகாரியின் மேதமையும் அவருக்கு அடையாளம் ஆகும். முனைவர் ஆய்வுப் பட்டம் பெற்றவர், காஷ்மீரி மொழியின் கலை, இலக்கிய, பண்பாட்டு மீட்பிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டினார். காஷ்மீரி மொழி மற்றும் பண்பாட்டை மீட்கும் பணிகளில் வடக்கு காஷ்மீரின் இலக்கிய அமைப்பான ’அட்பி மார்க்கஸ் கம்ராஸ்’ குறிப்பிடத்தக்கது. அவ்வமைப்பின் தலைவராக சுஜாத் புகாரியும் இருந்துள்ளார். 

நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பத்திரிகைகளுக்கு காஷ்மீரிலிருந்து எழுதுவதைவிட, அங்கிருந்துகொண்டே அங்கு வெளியாகும் செய்தியேடுகளில் பணியாற்றுவது அதிக சவால் நிறைந்ததாகும். அதுவும் ரைசிங் காஷ்மீர் போன்ற ஒரு கருத்துவிவாதத்துக்கு இடம்தரும் பத்திரிகைக்கு, பத்திரிகையாளர்களை வார்த்தெடுப்பது உண்மையிலேயே மிகவும் சவாலான பணியாகவே இருந்தது. காஷ்மீர் பிரதேசத்தில் பெருநிறுவன சந்தை விளம்பரம் இல்லாமல் பத்திரிகையை நடத்தமுடியாதபோது, அரசு விளம்பரங்களை மட்டுமே சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம், அங்குள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கு! 

புகாரியின் சகோதரர் ஆளும் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரமுகராக இருக்கையில், எதிரணியான தேசிய மாநாட்டுக் கட்சி+ காங்கிரஸ் ஆட்சியில் இவரது பத்திரிகைக்கு விளம்பரங்கள் குறைவாக மட்டுமோ அல்லது முற்றிலும் மறுக்கவோதான் அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆட்சிமாறி தன் சகோதரர் அமைச்சரான பிறகும் ரைசிங் காஷ்மீர் பத்திரிகைக்கு அதே நிலைதான் நீடித்தது என்பது புகாரியின் பத்திரிகைப்பணி எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தும். இது மட்டுமல்ல, அவர் பத்திரிகை மத்திய அரசின் களவிளம்பரத் துறையின் தடைப் பட்டியலில் நீண்டகாலமாக இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் துறைகளுடன் கடைசிவரை புகாரி போராடிக்கொண்டே இருந்தார்; ஆனால் கடைசிவரை சாதகமான ஒரு முடிவையும் அவர் பார்க்கவில்லை என்கிறார்கள் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையாளர்கள். 

ஐம்பது வயதான புகாரி தன் கடைசிக் காலங்களில் அன்றாட பத்திரிகைப் பணிகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்துவிட்டு, அட்பி மார்கஸ் கம்ரஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு அதிக நேரம் ஒதுக்கினார். காஷ்மீரி மொழியை மாநிலத்துக்குள் இருக்கும் பல சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்; மேலும், இதன் மூலம், ஜம்மு- காஷ்மீர் பிரதேசங்களுக்கு இடையிலான இடைவெளியை இட்டுநிரப்பவும் முயன்றார். இந்திய, பாகிஸ்தான் நாடுகளில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பக்கங்களிலும் இருக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக உரையாடலை மேற்கொண்டுவந்தார். 

அமைதியான காஷ்மீருக்காக புகாரி செய்துவந்த எழுத்து, உரையாடல் பணிகள் யாரை உறுத்திக்கொண்டு இருந்ததோ, அவர்களே அவரின் உயிரை எடுப்பதன் மூலம் அந்தப் பணிகளைத் தடுத்துவிடமுடியும் என அற்பமாக நினைக்கமுடியும்! 

அடுத்த கட்டுரைக்கு