Published:Updated:

திருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?!

திருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?!
திருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?!

இதுவே அன்னிக்கு அந்தத் திருடன் என்னைக் கத்தியால குத்தி நான் செத்துப்போயிருந்தா, வீரவணக்கம் சூர்யானு சொல்லி, ரெண்டு லட்சத்தை எங்க வீட்டுக்குத் தூக்கிக்கொடுத்து அரசியலாக்கி இருப்பாங்க. நான் உயிரோட இருக்கிறதால ரெண்டு நாளைக்கு மட்டும் செய்தியாக்கிட்டு விட்டுட்டாங்க.

தியம் ஒரு மணி... சென்னை, அண்ணாநகரின் சிந்தாமணி பகுதி மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் என யாரிடம் கேட்டாலும், ``ஓ `தீரன்' சூர்யா தம்பியா' என விழிகளை விரியவைக்கிறார்கள். ஓர் அயர்ன் கடை அம்மா, `இப்படியே நேரா போனீங்கன்னா மின்ட் கிளினிக்னு போர்டு இருக்கும். அதுக்கு எதிர்லதான் அந்தத் தம்பி வேலை பார்த்த கடை இருக்கு. அங்கே போய் விசாரிங்க' ” என்றார்.

அந்தக் கடையில் வேலை செய்யும் சிறுவன், ``அவரு வேலையிலிருந்து நின்னுட்டாரு. வீட்டு அட்ரஸ் சொல்றேன். அங்கே போய்ப் பாருங்க” என்று திருமங்கலம் முகவரி சொன்னார்.

திருமங்கலம் நோக்கிச் சென்றபோது சூர்யா பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தது. நிச்சயமாக அன்று சூர்யா செய்தது வீரதீர செயல்தான். இரவு 9,30 மணி இருக்கும்... கிளினிக் ஒன்றில் நுழைந்து, மருத்துவர் அமுதாவிடம் ஆலோசனை கேட்பதுபோல நடித்து, அவரின் தங்கச்செயினைப் பறித்து ஓடினான் ஒரு திருடன். அப்போது, எதிரே கடையில் இருந்த 18 வயது சிறுவனான சூர்யா, திருடனை விரட்டிச்சென்று செயினை மீட்டார். அப்போது, சூர்யாவின் துணிச்சலைப் பாராட்டி, சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், பரிசுத்தொகையும் காவல்துறை அவரைத் தத்தெடுப்பதாகவும் அறிவித்திருந்தார். அது பரபரப்பு செய்தியானது. இப்போது அந்த சூர்யா எப்படி இருக்கிறார் என அறியவே இந்தப் பயணம். 

திருமங்கலத்தின் அந்த முகவரியில் இருக்கும் தெருவுக்குச் சென்று ஒரு சிறுவனிடம் ``தம்பி, இங்கே சூர்யா வீடு எங்கே இருக்கு. திருடனைப் பிடிச்சுக்கொடுத்து போலீஸ்கிட்ட பாராட்டு வாங்கினாரே அவர் வீடு'' என்றதும், ``அண்ணே, நல்லாத் தமாசு பண்றே நான்தான்ணே அந்த சூர்யா'' என திகைக்கவைத்தார்.

``என்ன தம்பி சொல்றே, டி.வியில் பார்க்கும்போது வேற மாதிரி இருந்தியே'' என்றால், ``அண்ணே, அதெல்லாம் வேஷம். இதுதான் ஒரிஜினல். டி.வி, பேப்பர்ல வருவே. நல்ல டிரஸ் போட்டு பவுடர் பூசிக்கோன்னு சொன்னாங்க அதான். மத்தபடி நான் எப்பவுமே இப்படித்தான் இருப்பேன். என்னை வெச்சு ஆளாளுக்குக் காசு பாத்துட்டாங்க. அவங்க காரியம் முடிஞ்சதும் என்னைக் கழட்டி விட்டுட்டாங்க. வாண்ணே, குடிசையில குந்திக்கின்னு பேசுவோம்'' என்றார்.

குனிந்துதான் குடிசைக்குள் செல்லமுடிந்தது. சூர்யாவின் பாட்டி இருந்தார். ஒரு சிறிய கட்டில், அரசு கொடுத்த இலவச டி.வி பெட்டி. அந்தச் சிறிய இடத்திலும் நாய் ஒன்றுக்குத் தாராளமாக இடம் கொடுத்திருக்கிறார்கள். 

``இதுதான் என் குடிசை. முந்தாநாளு எவனோ குடிசை மேலே கொளுத்திப் போட்டுட்டான். நான்தான் தண்ணியை ஊத்தி அணைச்சேன். பாவம் என் பாட்டி. அலப்பறையைக் கூட்டிருச்சு. சின்ன வயசிலிருந்தே அதுகிட்டதானே வளர்றேன். அன்னிக்கு அந்தத் திருடனைப் புடிக்க போவும்போது கை, கால்ல எல்லாம் வெஷத்தனமா அடிபட்டுடுச்சு. அதைப் பாத்துட்டு பாட்டி கதறிடுச்சு. ரொம்ப மெனக்கெட்டு அந்தத் திருடனைப் புடிச்சேன். நல்லா வெயிட்டு அவன். யாருமே எனக்குத் தொணைக்கு வரலே. அந்த டாக்டரு அம்மா கதறுனதைப் பார்த்து மனசு கேக்காம ஓடிப்போயி சண்டைப் போட்டு புடிச்சேன். அதுக்கப்பறம்தான் ஒருத்தரு உதவிக்கு வந்தாரு. ரெண்டு நாளைக்கு போலீஸ்க தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. பதினைஞ்சாயிரம் தர்றதா சொன்னாங்க. பெருசா ஃப்ளெக்ஸ் மாதிரி ஒண்ணு கொடுத்தாங்க. அதிலும் பதினைஞ்சாயிரம் எழுதி இருந்துச்சு. ஆனா, கையில அஞ்சாயிரம்தான் கொடுத்தாங்க. அதையும் சாந்தோம் பக்கம் குந்தியிருக்குற பிச்சைக்காரங்களுக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுத்தும், என் ஃப்ரெண்ட்ஸுகளுக்கு பார்ட்டி வெச்சும் தீர்த்துட்டேன். டி.வியிலும் பேப்பரிலும் என்னைக் காட்டிட்டே இருந்தாங்க. எனக்குப் படிப்பெல்லாம் வராது, நான் ஏ.சி மெக்கானிக் ஆகணும். என்னை ஸ்கூல்ல சேர்த்துவிடாம என் தொழிலுக்கு உதவி பண்ணிக்கொடுங்கன்னு என்னைப் பார்க்க வந்தவங்ககிட்டயும் போலீஸ்கிட்டயும் சொன்னேன். எதுவும் நடக்கலை. 10 நாளைக்கு முன்னாடிகூட கமிஷனர் ஆபீஸுக்குப் போய் ரொம்ப நேரம் வெயிட் பண்ணினேன். ஆனா, யாருமே வந்து பார்க்கலை. எனக்குப் படிப்புதாங்க வராது. நல்லா வேலை பார்ப்பேன். என் திறமைக்குச் சரியான வழி கெடைச்சா பொழைச்சுப்பேன்” என்கிறார் சூர்யா. 

சூர்யாவின் பாட்டி முனியம்மா குறுக்கிட்டு, ``கண்ணு... இவன் என் மவன் வழிப் பேரன். அப்பனும் ஆத்தாளும் பக்கத்துலதான் குடியிருக்குதுங்க. ஆனா, இவன் அங்கே இருக்குறதைவிட எங்கிட்டதான் அதிகம்  கிடப்பான். துருதுருன்னு ஏதாச்சும் ஒரு வேலையைச் செஞ்சுட்டே இருப்பான். அன்னிக்குத் திருடனைப் புடிக்கப் போனானே, ஏதாச்சும் ஏடாகூடமா ஆகியிருந்தா இவன் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன். `எதுக்குடா நமக்கு ஊரு வம்பு?'னு கேட்டா, `நீ சும்மா கெட ஆயா. இதுவே என் அம்மாவுக்கு நடந்திருந்தா பார்த்துட்டு சும்மா இருந்திருப்பேனா?'னு கேட்கறான். படிப்பை நிறுத்திட்டுத் திரியுறானே எப்புடி பொழக்கப்போறானோன்னு நெனைச்சுட்டிருந்தேன். இப்போ கொஞ்ச நாளா வீட்டுக்கு போலீஸ்காரங்களும் சினிமாக்காரங்களும் தேடிவர்றாங்க. ஆனா, எல்லாருமே வெறும் வார்த்தைக்குத்தான் சொல்லிட்டுப் போறாங்களே தவிர, யாருமே உதவி செய்யறதா தெரியலை. காசு பணம் கொடுத்து உதவ வேணாம். ஒரு வேலையை வாங்கிக்கொடுத்து எங்கயாச்சும் நிரந்தரமா உட்காரவெச்சுடுங்கய்யா. உங்களுக்குப் புண்ணியமா போகும்” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

``ஆயா, எதுக்கு இப்போ அழறே. நான் என்ன செத்தா போயிட்டேன். யாரோட உதவியும் இல்லாம சொந்தக் காலுல நின்னு ஜெயிப்பேன். ஏண்ணே, இதுவே அன்னிக்கு அந்தத் திருடன் என்னைக் கத்தியால குத்தி நான் செத்துப்போயிருந்தா, வீரவணக்கம் சூர்யானு சொல்லி, ரெண்டு லட்சத்தை எங்க வீட்டுக்குத் தூக்கிக்கொடுத்து அரசியலாக்கி இருப்பாங்க. நான் உயிரோட இருக்கிறதால ரெண்டு நாளைக்கு மட்டும் செய்தியாக்கிட்டு விட்டுட்டாங்க. என்ன உலகம் இது?” என்கிறார் அப்பாவியாக. 

சூர்யாவின் கேள்விக்கு என்ன பதிலைத் தருவது?

அடுத்த கட்டுரைக்கு