Election bannerElection banner
Published:Updated:

மயிலாடுதுறை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி! - போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

சிறார் வதை
சிறார் வதை

13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று மாத கர்ப்பமாக்கிய, மூன்று கொடூரன்களை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வளர்ந்துவரும் 13 வயது நிரம்பிய சிறுமி அவள். கள்ளம் கபடமில்லாமல் வளர்ந்த அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விவரித்தனர்.

Singaravel dineshkumar murugavel
Singaravel dineshkumar murugavel

அந்தச் சிறுமியின் தந்தை, குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்க சிரமப்பட்டிருக்கிறார் தாய். இப்படியான வறுமையான சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு அந்தச் சிறுமியின் உறவினரான மேலப்போலகம் கிராமம், தட்டாரத்தெருவைச் சேர்ந்த சாமித்துரை மகன் தினேஷ்குமார் (வயது19) என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்திருக்கிறார். அங்கு சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தினேஷ்குமார், சிறுமியைத் திருமணம் செய்துகொள்ளாமல் இழுத்தடித்திருக்கிறார். இதனால் மனம் நொந்த சிறுமி, அங்கிருந்து மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்காடு கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் சென்று தங்கியிருக்கிறார்.

அங்கு மயிலாடுதுறை  மாப்படுகை, கங்கைநகரைச் சேர்ந்த குருசாமி மகன் முருகவேல் என்பவர் (வயது 36) சித்தர்காட்டில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவர் சிறுமியின் சகோதரியின் கணவர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரும் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கைது
கைது

அங்கிருந்து பாதுகாப்பு கருதி மங்கைநல்லூரிலுள்ள அண்ணன் உறவு முறையுள்ள  சிங்காரவேலன் (வயது 30) என்பவர் வீட்டில் தங்கி அந்தப் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துவந்தார். அண்ணன் முறையுள்ள சிங்காரவேலனும் பலமுறை அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்தச்சூழ்நிலையில் கடும் வயிற்றுவலி காரணமாக தவித்த சிறுமிக்கு, ஹோட்டல் உரிமையாளர் உதவியுடன் மயிலாடுதுறை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு   பரிசோதித்ததில் சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்ததில் சிறுமி நடந்த சம்பவம் அனைத்தையும்  ஒவ்வொன்றாகக் கூறியுள்ளார். 

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில்  சிறுமியின் உறவினர்களான மூன்று பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உண்மையெனத் தெரியவந்தது. உடனடியாக மூவர் மீதும்  போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் , முருகவேல்,  சிங்காரவேலன் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்" என்றனர். தற்போது மருத்துவமனையில் இருக்கும் சிறுமி, உடல்நலம் தேறியதும் காப்பகத்தில் சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு