Published:Updated:

`ரிலேஷன்ஷிப் சர்வீஸ் வாட்ஸ்அப் குரூப்!' தரகர்களைப் போலீஸில் சிக்க வைத்த நடிகை

`ரிலேஷன்ஷிப் சர்வீஸ் வாட்ஸ்அப் குரூப்!' தரகர்களைப் போலீஸில் சிக்க வைத்த நடிகை
`ரிலேஷன்ஷிப் சர்வீஸ் வாட்ஸ்அப் குரூப்!' தரகர்களைப் போலீஸில் சிக்க வைத்த நடிகை

``பாலியல் தொழிலில் ஈடுபடும் அழகான இளம்பெண்கள் தேவைப்படுகிறார்கள். கைவசம் அப்படி இருந்தாலோ, தெரிந்தாலோ உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

சினிமா உலகப் பெண் பிரபலங்களைப் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபடி இருக்கின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம், துணை நடிகை ஜெயலட்சுமி கொடுத்துள்ள புகாரும் இதே, பாதிப்பால் கொடுக்கப்பட்டதுதான். புகாரின் பேரில் பாலியல் தொழில் தரகர்களாக அறியப்படும் முருகப்பெருமாள், கவியரசு என்ற இரண்டு பேர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'பிரிவோம், சந்திப்போம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்துக்கு அறிமுகம் ஆனவர், ஜெயலட்சுமி. விசாரணை, அப்பா, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பல சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். புகார் குறித்து நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி, ``என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம், ஆபாசமாகப் பதிவிட்டு மெசேஜ் வந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மெசேஜ் வருவது நிற்கவில்லை. நான் அந்த நம்பரை பிளாக் செய்த பின்னரும், மெசேஜ் வருவது தொடர்ந்தது.

பின்னர், 'நாங்கள் பாலியல் தொழில் தரகர்களாக இருக்கிறோம். எங்களோடு இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டால் 30 ஆயிரத்தில் இருந்து, மூன்று லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என்று மெசேஜ் வர ஆரம்பித்தது. என்னைப்போலவே என்னுடையத் தோழிகள் சிலருக்கும் இதுபோன்ற மெசேஜ்கள் வந்திருக்கின்றன. இதுபற்றி நாங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சாரை நேரில் பார்த்து புகார் அளித்தோம். அவருடைய விசாரணைக்குப் பின், இப்படி மெசேஜ்களை அனுப்பிய இரண்டு பேரைப் போலீஸார் பிடித்துக் கைது செய்தனர். சினிமாக்காரர்கள் என்றால் அவர்களிடம், எப்படியும் பேசலாம், எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற குறுகிய எண்ணவோட்டம் சிலரிடம் இருக்கிறது. நாங்களும் மனிதர்கள்தானே... எங்களுக்கும் குடும்பம், உணர்வுகள், ஆசாபாசங்கள் இருக்கின்றன என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள்?'' என்றார்.

இதுகுறித்துப் பேசும் போலீஸ் தரப்பு, ``குற்றவாளிகளான முருகப்பெருமாள், கவியரசு ஆகிய இருவரும் 'ரிலேஷன்ஷிப் சர்வீஸ்' என்ற பெயரில், ஒரு வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்து அட்மினாக இருந்து நடத்தி வந்துள்ளனர். அந்தக் குழுவில் நடிகை ஜெயலட்சுமியின் செல்போன் நம்பரையும் சேர்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலட்சுமிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். எங்களுக்குப் புகார் வந்ததும், 'குற்றவாளிகளுக்கு சந்தேகம் வராதபடி, நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் இடத்துக்குத் தைரியமாகப் போங்கள். நாங்கள் மறைந்திருந்து உங்களைப் பின் தொடர்கிறோம்' என்று ஜெயலட்சுமியிடம் சொன்னோம். அவரும் அப்படியே செய்தார்.  'ரேட் பேசி முடித்துக்கொள்ளலாம். அண்ணாநகர் காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள்' என்று அங்கே அவரை வரச் சொன்னார்கள். திட்டமிட்டபடி நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம். கையோடு ஆட்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இவர்கள் கூட்டணியில் இன்னும் வேறு நபர்கள் இருக்கிறார்களா என்ற விசாரணை போய்க் கொண்டிருக்கிறது" என்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட முன்னணி நடிகை தீப்தி காப்ஸிக்கும் இதேபோல் ஒரு சிக்கல் வாட்ஸ்அப் மூலம் வந்தது. 'ஹனி ஹனி இப்பானி, ஜூவ்லம்தம்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இவர். இவருக்கு வந்த மெசேஜில் நேரடியாகவே தன்னுடைய எண்ணத்தைச் சொல்லியிருந்தார், அந்த வாலிபர். 'பாலியல் தொழிலில் ஈடுபடும் அழகான இளம்பெண்கள் தேவைப்படுகிறார்கள். கைவசம் அப்படி இருந்தாலோ, தெரிந்தாலோ உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

நடிகை தீப்தி காப்ஸியும் 'நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை எனது முகநூலில் வெளியிடுகிறேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளாவிட்டால், நீங்கள் உங்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களை அணுகி ஆக வேண்டியதைப் பாருங்கள். இதன்மூலம் உங்களது பணமும் மிச்சமாகும். நன்றி!' என்று அந்த வாலிபருக்குப் பதில் அனுப்பினார். இதைப்பார்த்த அந்த வாலிபர், 'தெரியாமல் குறுந்தகவல் அனுப்பி விட்டேன் ஸாரி' என்று மீண்டும்  நடிகைக்குப் பதில் அனுப்பினார். இந்த முறை நடிகை தீப்தி காப்ஸி, நடந்த உரையாடல்களை 'ஸ்க்ரீன் ஷாட்' எடுத்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டு விட்டார். போலீஸிலும் புகார் கொடுத்துவிட, கர்நாடகப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மலையாள சீரியல் நடிகை ஒருவர், சீரியல் இயக்குநர் மீது அளித்துள்ள பாலியல் புகார், மற்றொரு முன்னணி நடிகை விவகாரம் என்று முற்றுப்புள்ளி இல்லாமல் தொடரும் இந்தக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காத வரையில், நடிகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியே!

அடுத்த கட்டுரைக்கு