Published:Updated:

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" -  திருச்சி மாணவியின் வாக்குமூலம்
"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்

சென்னை டாக்டர் கொலையில் மாணவி  ஈஸ்வரி கொடுத்துள்ள வாக்குமூலம் போலீஸாரை மட்டுமல்ல; பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" -  திருச்சி மாணவியின் வாக்குமூலம்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட திருச்சி திருவளர்ச்சோலை கல்லணை காவிரிக் கரை ஓரம் அமைந்துள்ளது புத்துநாகம்மன் கோயில். இதன் அருகே ஜூலை 12-ம் தேதி சென்னையில்  பிஸியோதெரப்பிஸ்டாக பணியாற்றும் மருத்துவர் விஜயகுமார்  கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்,  இறந்தவர் அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த பிஸியோதெரப்பிஸ்ட் விஜயகுமார் என்பதும், அவர் சென்னையில் பணியாற்றி வந்ததும், அவருக்குத்  திருமணமாகி கற்பகாம்பிகை என்கிற மனைவியும்,  இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. விஜயகுமாரின் மனைவி கற்பகாம்பிகை ஈரோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" -  திருச்சி மாணவியின் வாக்குமூலம்

இந்தக் கொலை தொடர்பாக, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் மாணவி ஈஸ்வரி, தாராநல்லூர் மாரிமுத்து மற்றும் அவருடைய நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், கும்பா (எ) குமார்  உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது மாணவி  ஈஸ்வரி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அனைவரையும் திகிலடையச் செய்யும் வகையில் உள்ளது.

“எங்க ஊரு குளித்தலை. நான் எல்.கே.ஜி படிக்கும் போதே எங்கம்மா இறந்துட்டாங்க. பிள்ளைங்கதான் உலகம்னு அப்பா எங்களை வளர்த்தார். தினமும் காலையில அஞ்சு மணிக்கு எந்திருச்சு சமைச்சு, துணி துவைச்சு, எட்டு மணிக்கு எங்களுக்கு ஊட்டிவிட்டு, மதிய உணவைக் கட்டிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பிட்டு, லாரி ஓட்டச் செல்வார். அப்பா லாரி  டிரைவர். நாங்க சின்னவயசா இருந்தபோதே, எங்களிடம் அப்பா கஷ்டத்தைச் சொல்லி வளர்த்தார். அம்மா இல்லாத குறை தெரியாமல் எங்களை வளர்த்தார்.

நாங்கள் வளர்ந்ததும் அப்பா வேலைக்காக வெளியூர் போறதை விட்டுட்டு, கூடவே இருந்தார். திருச்சி உறையூர் தனலெட்சுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தேன். 2013-ம்  ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே 2-வது இடம் பிடித்தேன். பிளஸ் 2-வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றேன்.  இந்நிலையில் சென்னையில் சி.ஏ. சேர்ந்து படித்து வருகிறேன். சி.ஏ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த நான், சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சொந்த ஊரான  திருச்சிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் வருவது வழக்கம், அப்படி வரும்போதுதான், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிசியோதெரப்பிஸ்ட் மருத்துவர் விஜயகுமார்  அறிமுகமானார். ரயில் பயணத்தில் என் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டவர், அடுத்தடுத்து போனில்  பேச ஆரம்பித்தார். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்த விஜயகுமார், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில்  பணியாற்றி வந்தார்.

ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்குப் போன் செய்த அவர், அவரது கிளினிக்கிற்கு கிளம்பி வருமாறும், வைத்தியம் பார்ப்பதாகவும் என்னிடம் கூறினார். அதை நம்பி  நானும் சென்றேன். அப்போது அவர் கூல்டிரிங்சில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, என்னைச் சீரழித்துவிட்டார். இதைத் தெரிந்து நான் அவரிடம்  கேட்டபோது, 'உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என சமாதானப்படுத்தினார். அதனால், நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தேன். அப்போதுதான் விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் எனக்கும் அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அடுத்து அவர், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்வதாகக் கூறினார். நான் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  ஆனால், என்னோடு இருந்ததை  வீடியோவாக எடுத்து வைத்திருப்பதாகவும், அவரின் இச்சைக்கு மீண்டும் பணியவில்லை எனில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் என்னை மிரட்டியதுடன், விடாமல் என்னைத் தொந்தரவு செய்தார். அதற்குப் பயந்து விடுதி மாறினேன். தொடர்ந்து என்னை மிரட்டியதுடன்,  அவர் எடுத்த வீடியோவை பேஸ்புக்கில் அப்லோடு செய்வேன் என மிரட்டினார்.

இதனால், நான் தற்கொலை செய்துகொள்ள  நினைத்தேன். ஆனால், கஷ்டப்பட்டு வளர்ந்த நான், படித்து நல்ல மதிப்பெண் எடுத்தும் இப்படி மோசமான மனிதர்களால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனே என அந்த முடிவைக் கைவிட்டு விஜயகுமாரைக் கொலைசெய்யத் திட்டமிட்டேன். 

"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்!" -  திருச்சி மாணவியின் வாக்குமூலம்

திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் மாரிமுத்துவிடம் நடந்த சம்பவம்  குறித்து விளக்கிக் கூறி உதவி கோரினேன். விஜயகுமாரைக் கொலை செய்ய மாரிமுத்து ரூ.55 ஆயிரம் பணம்  கேட்டார். முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்தேன்,

அடுத்து, மாரிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள் துணையுடன், திருச்சி திருவளர்ச்சோலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காவிரிக் கரைதான் சரியான இடம்  என முடிவெடுத்தோம். விஜயகுமாருக்கு போன் செய்து திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அழைத்தேன். அவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த நான், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் காவிரிக் கரைக்குச் சென்றேன். அங்கு நானும் விஜயகுமாரும் தனியாக இருந்தபோது, திட்டமிட்டபடி புதர் மறைவில் இருந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் எங்களைத் துரத்த, நான் பயந்து ஓடி வந்துவிட்டேன். பிறகு மாரிமுத்துவும் அவரின் கூட்டாளிகளும் கத்தியால் குத்தி விஜயகுமாரைக் கொலை செய்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம், டாக்டர் விஜயகுமாரின்  மனைவிக்கு தெரியவர, கணவர் தவறான நடவடிக்கையால் கொல்லப்பட்டதை அறிந்த கற்பகாம்பிகை,  கணவரின் உடலை வாங்க  மறுத்து வருகிறார். இதனால் பரபரப்பு நிலவுகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை மாணவியாகப் பலருக்கும் அறிமுகமான அதே ஈஸ்வரியைக் கொலைகாரியாக மாற்றியதுதான் காலத்தின் கோலம்…

அடுத்த கட்டுரைக்கு