Published:Updated:

``நீங்களே சிக்கிட்டா.. எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் நடத்திக்கிட்டு?" `40 கேஸ்' ஈரோடு `திருடர்ர்ர்'

``நீங்களே சிக்கிட்டா.. எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் நடத்திக்கிட்டு?" `40 கேஸ்' ஈரோடு `திருடர்ர்ர்'
``நீங்களே சிக்கிட்டா.. எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் நடத்திக்கிட்டு?" `40 கேஸ்' ஈரோடு `திருடர்ர்ர்'

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்க, போலீஸார் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பார்கள் என்பதைத் `தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். திருடச்சென்ற இடத்தில் அசந்து தூங்கியது போன்ற காமெடி கொள்ளையர்களை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் போலீஸார் லாகவமாகப் பிடித்த கதைகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டாவதாக நாம் சொன்ன டிசைனில் ஒரு கொள்ளையன் ஈரோட்டில் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார். பகலில் மட்டுமே வழிப்பறி, கொள்ளை எனச் செய்துவந்தவர் ஒரு நள்ளிரவில் வான்ட்டடாக போலீஸ் வண்டியில் ஏறிய கதைதான் இது.  

ஈரோடு மாவட்டம், அந்தியூர் போலீஸார் கடந்த ஜூன் மாதம் 8 ம் தேதி இரவு ரோந்துப்பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். இரவு 11.30 மணியளவில், அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரி அருகே போலீஸார் சென்ற பொழுது, ஏரியையொட்டியுள்ள வேகத்தடை அருகே சாலையில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் ஆண் ஒருவர் கிடந்திருக்கிறார். இதைக் கண்ட போலீஸார், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதையடுத்து, விபத்து குறித்து விசாரிப்பதற்காக போலீஸார் மருத்துவமனைக்குச் செல்ல அங்குதான் அரங்கேறியிருக்கிறது அந்த காமெடிச் சம்பவம். சாலையில் அடிபட்டுக் கிடந்த அந்த நபர் வேறு யாருமல்ல... ஈரோடு மாவட்டத்தில் பவானி, வெள்ளித்திருப்பூர் போன்ற பல்வேறு ஸ்டேஷன்களில் `மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் போலீஸார் தேடிவந்த குற்றவாளிதான். இதில் கொடுமை என்னவென்றால், அந்தியூர் ஸ்டேஷனிலேயே அந்த நபர் மீது 4 வழக்குகள் இருந்திருக்கின்றன. இதனையெல்லாம் விசாரணையில் தெரிந்துகொண்ட போலீஸார் வெடித்துச் சிரித்திருக்கின்றனர்.

ஈரோடு, மோளப்பாளையத்தைச் சேர்ந்த இந்தக் குற்றவாளியின் பெயர் மணிகண்டன். மளிகைக்கடை, ஃபைனான்ஸ் நிறுவனம் எனப் பல இடங்களுக்குள் நுழைந்து தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார். மேலும், தனியாகச் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது போன்ற பல அட்ராசிட்டிகளையும் செய்து வந்திருக்கிறார். அந்தவகையில், இவர் மீது 40 வழக்குகள் இருந்திருக்கின்றன. கடைசியாக, அந்தியூர் பகுதியில், ஒரு பெண்ணிடம் 4 பவுன் செயினைப் பறித்துக்கொண்டு, பைக்கிலேயே கர்நாடகாவுக்குச் சென்று செலவுசெய்துவிட்டு ஈரோடு திரும்பிய கதையும் தெரியவந்திருக்கிறது. அந்தியூரைக் கடக்கையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரைப் பார்த்திருக்கிறார். சிக்கினால் சிதைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் பைக்கை வேகமாக முறுக்கியவர், கெட்டிசமுத்திரம் ஏரி அருகே இருந்த வேகத்தடையைக் கவனிக்காமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காலை உடைத்திருக்கிறார். அந்தநேரம் பார்த்து போலீஸார் அந்தவழியாக வர வசமாய்ச் சிக்கியிருக்கிறார். இதனையெல்லாம், அந்த நபர் விசாரணையில் சொல்லச்சொல்ல போலீஸார், ``நீங்களே இப்படிச் சிக்கிட்டா.. நாங்க எதுக்கு ஸ்டேஷன் நடத்திக்கிட்டு" எனத் தங்கள் `கண்டிப்பு'களை மறந்து சிரித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்துவிட்டு, மேல்சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையை முடித்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், கொள்ளையடிக்கும் பணத்தில் சரக்கு, சாப்பாடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் சேர்ந்து ஒருசில நண்பர்களும் இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றவாளி மணிகண்டன் கூறியிருக்கிறார். அந்த விவரங்களை குறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இரு நபர்களின் வீடுகளுக்குச் சென்று போலீஸார் விசாரிக்க... வேறு ஒரு கேஸில் ஏற்கெனவே அந்த இரண்டு நபர்களும் கோபிச்செட்டிப்பாளையம் கிளைச்சிறையில் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். `ஜெயில்ல இருக்கிற குற்றவாளியவா நாம அரஸ்ட் பண்ண வந்தோம்...' எனச் சிரித்தபடியே போலீஸார் யூ டர்ன் அடித்து வந்திருக்கின்றனர். 40 வழக்குகளுடன், கால் ஒடிந்து கோவை மத்திய சிறையில் இருக்கும் மணிகண்டன் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இப்படி எல்லா திருடர்களும் காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டா, போலீஸ் டென்ஷன் ஃபிரீயா வேலை பார்க்கலாம்...!