Published:Updated:

வாட்ஸ்அப் எனும் "வதந்தி பாக்ஸ்".. ஃபார்வர்டுகளும்.. பிரச்னைகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்ஸ்அப் எனும் "வதந்தி பாக்ஸ்".. ஃபார்வர்டுகளும்.. பிரச்னைகளும்!
வாட்ஸ்அப் எனும் "வதந்தி பாக்ஸ்".. ஃபார்வர்டுகளும்.. பிரச்னைகளும்!

வாட்ஸ் அப்பில் பொய்யாகப் பரவும் அதிகச் செய்திகள் பெரும்பாலும் யுனேஸ்கோ அறிவித்ததாகவே இருக்கிற சுவாரஸ்யம்தான் என்னவென்றே தெரியவில்லை. உலகிலேயே சிறந்த பிரதமராக யுனெஸ்கோ மோடியை அறிவித்திருக்கிறது என யுனேஸ்கோ பற்றி இன்னும்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ண்மையைவிட பொய்யும், புரளியும் சீக்கிரம் பரவி விடக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் இந்த ஃபார்வர்டு யுகத்தில் அவை ஒளியின் வேகத்தைவிட அதிவேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டு வருகிறது எனச் சொன்னால் அது மிகையில்லை. இதைச் செய்வதில் வாட்ஸ்அப்தான் டாப்.

வாட்ஸ்அப்பில் பொய்யாகப் பரவும் அதிகச் செய்திகள் பெரும்பாலும் `யுனேஸ்கோ' மற்றும் `நாசா' அறிவித்ததாகவே இருக்கிற சுவாரஸ்யம்தான் என்னவென்றே தெரியவில்லை. உலகிலேயே சிறந்த பிரதமராக `யுனெஸ்கோ' நம் நரேந்திர மோடியை அறிவித்திருக்கிறது, உலகிலேயே சிறந்த தேசிய கீதமாக `ஜனகனமண' என்று `யுனெஸ்கோ' அறிவித்திருக்கிறது, உலகிலேயே சிறந்த கரன்ஸியாக நம்முடைய புதிய இரண்டாயிரம் ரூபாயை `யுனேஸ்கோ' அறிவித்திருக்கிறது என இந்த `யுனெஸ்கோ' வகைப் பட்டியல் நீளம். இதில், இன்னொரு பகீர் ரகமும் இருக்கிறது. `மிகப்பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது' என `நாசா' அறிவித்திருக்கிறது. `இன்றிரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு மிக அருகில் வருவதால் உங்கள் செல்ஃபோனை ஸ்விட்ச்ஆப் செய்து கட்டிலுக்கடியில் வையுங்கள்' என `நாசா' தெரிவித்துள்ளது என்றும், செங்கல்பட்டு ஏரி உடைந்து நீர் ஊருக்குள் வந்துகொண்டிருக்கிறது பக்கத்திலுள்ள நண்பர்கள் போய்க் காப்பாற்றுங்கள் என்பார்கள். `இந்தியாவில் விரைவில் உப்பு காலியாகிவிடும் சீக்கிரம் வாங்கிவிடவும்' என்கிற செய்தி வடமாநிலங்கள் பக்கம் பரவ உப்பைப் பலமடங்கு விலை கொடுத்து அடித்துப்பிடித்து நள்ளிரவில் வாங்கினார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாயலில் அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்து, `இவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்' என்கிறார்கள். அந்தப் பெண்ணே அதை வந்து சொன்னாலும் யாரும் நம்பத் தயாராக இல்லாத நிலையில் உறுதியுடன் இப்போது மக்கள் நிற்கிறார்கள். இது தவிர, ஒருநாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நீதிக்கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. இவைகளுக்கிடையே `இந்த நபருக்கு ரத்தம் தேவை அவசரம்' என்கிற ரக மெசேஜ்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகச் சுற்றிக்கொண்டிருக்கும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் `உண்மையான தமிழன்', `உண்மையான இந்தியன்' என நிரூபிப்பதற்கு இதுபோன்ற செய்திகளை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்தாலே போதுமென்று ஆகிவிட்டது. ஆனால், இதுமாதிரியான பொய்யான செய்திகளைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளை நாம் யோசிப்பதே இல்லை

வாட்ஸ்அப்பில் வந்த ஒரு வதந்திச் செய்தி இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாள் வரை இருபதுக்கும் மேற்பட்ட உயிர்களை இந்தியாவில் பழிவாங்கியிருக்கிறது எனச் சொன்னால் நம்ப முடிகிறதா.

தங்களது கிராமங்களில், ஊரில் புதிதாக நுழைந்தவர்களைக் குழந்தை கடத்த வந்ததாகக் கூறி, அடித்து உதைத்தே சாகடித்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் பத்துப்பேரை கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். ஜார்கண்டில் ஏழுபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனையொட்டி தகவல்களைத் தேடினால் அது இன்னும் அதிர்ச்சி நிறைந்ததாக இருக்கிறது. அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது வாட்ஸ்அப் செய்திகளை மக்கள் எந்த அளவுக்குக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதை மிகுந்த சோகத்துடன் பார்க்க முடிகிறது.

இதை தடுக்கும் விதமாக வாட்ஸப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இருக்கிறது. ஒரே மெசேஜை ஐந்துமுறைக்கு மேல் பார்வர்ட் பண்ண முடியாது என்கிற ஒரு கடிவாளத்தை அவர்கள் போட இருக்கிறார்கள். நமக்கு வந்த மெசேஜை இன்னொருவருக்கு அனுப்பும்போது அந்த மெசேஜுக்கு மேலே Forwarded என்று தன்னியல்பாகவே இருக்கும். ஆக, இது அவருடைய சொந்தக் கருத்து அல்ல பார்வர்ட்தான் என்று நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும். பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்த இப்படி புதிய மாற்றங்கள் வருகிறதென்றாலும், இந்த மாற்றங்கள் எழ வேண்டியது அவர்களிடமிருந்து அல்ல. நம்முடைய கட்டுப்பாடும், பொறுப்பு உணர்வு மட்டுமே இதற்கான தீர்வு.

நமக்கு வருகிற தகவல், உண்மையா பொய்யா என்பதை நவீன யுகத்தில் சில நொடிகளிலேயே கண்டறிந்துவிட முடியும். ஆனால், அதைச் செய்கிறோமா. எல்லாச் செய்திகளின் உண்மைத்தன்மையையும் இணையத்தில் கண்டறிய முடியாதுதான். ஆனால், வந்த மெசேஜை உடனே ஃபார்வர்டு செய்யாமல், நம்முடைய பகுத்தறிவைக் கொண்டு அதைப் பற்றி யோசிக்கலாம். சந்தேகம் வரும் பட்சத்தில், நமக்கு அனுப்பியவரிடம் இதிலுள்ள சந்தேகங்களைக் கேட்கலாம். ஆனால், அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா என்ன? செய்தியை நாம்தான் முதலில் ஃபார்வர்டு செய்யவேண்டுமென உடனடியாக அதை அடுத்தவருக்குப் பகிர்கிறோம். இணைய சேவையும் இப்போது மலிவாகக் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் எதைப் பற்றியும் நாம் கவலைப்படுவதில்லை.

`இந்தச் செவுரு இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகுதோ' என்று மெட்ராஸ் படத்தில் ஒரு வசனம் வரும். அப்படியொரு மிகப்பெரிய சுவராகத்தான் இன்று வாட்ஸ்அப் நம்மைச் சுற்றி எழும்பி நிற்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு