Published:Updated:

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?
பிரீமியம் ஸ்டோரி
மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

மதுரையை மிரட்டும் தொடர் கொலைகள்

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

மதுரையை மிரட்டும் தொடர் கொலைகள்

Published:Updated:
மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?
பிரீமியம் ஸ்டோரி
மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

‘‘திருந்தி வாழ நினைத்தவர்களைச் சரணடைய வருமாறு நாடகமாடிக் கூப்பிட்டு,போலீஸார் கொன்றுவிட்டார் கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரின் உறவினர்கள்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர்மீது பல கொலை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரும், மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல முன்னாள் தலைவருமான ராஜபாண்டியின் ஆதரவாளர்கள். தி.மு.க-வின் தலைமைச்செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவருமான வி.கே.குருசாமிக்கும் இந்த ராஜபாண்டிக்கும் இடையே முன்விரோதம். அதனால், இரு தரப்பிலும் தொடர்ச்சியாக பல கொலைகள் நடந்தன. இதில், முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர்மீது கொலை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் 2015 முதல் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இந்த நிலையில்தான், இவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

உண்மையில், ரவுடி மாயக்கண்ணன்தான் போலீஸாரின் டார்கெட் என்றும், எதிர்பாராத விதமாக என்கவுன்டரில் இவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி என்கவுன்டர் நிகழ்ந்த நிலையில், என்கவுன்டரில் தப்பிய ரவுடி மாயக்கண்ணன் மார்ச் 3-ம் தேதி விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், என்கவுன்டருக்கு குறிவைக்கப்பட்ட மாயக்கண்ணன் இவர் இல்லை என்றும், இவர் ஒரு லோக்கல் ரவுடி என்றும் அதிர்ச்சி கிளப்புகிறார்கள். ‘‘சரி, நடந்தது நடந்து விட்டது... கொல்லப்பட்ட முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் மீதான வழக்குகளை மையப்படுத்தி இந்த விவகாரத்தைக் கொண்டுபோகலாம்’’ என்று போய்க் கொண்டிருக்கிறது காவல்துறை.

சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் உடல்களை வாடிப்பட்டி குற்றவியல் மாஜிஸ்திரேட் விக்னேஷ் பார்வையிட்டார். ‘இருவரும் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என இருவரின் உறவினர்களும் மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர். என்கவுன்டர் நடைபெற்ற சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் உள்ள மாயக்கண்ணன் வீட்டுக்குச் சென்று மாஜிஸ்திரேட் பார்வையிட்டார். காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளையும், அருகே வீடுகளில் வசித்தவர்களிடமும் அவர் விசாரித்தார். மதுரை அரசு ராசாசி மருத்துவமனை பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக இருவரின் உடல்களும் வைக்கப்பட்டிருந்தன. பிணவறை அருகே குழுமியிருந்த இருவரின் உறவினர்கள், போலி என்கவுன்டரில் கொன்றுவிட்டதாக போலீஸாரைக் குற்றம்சாட்டினர். இன்னொரு பக்கம், ‘‘இதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்காமல் விடமாட்டோம்’’ என்று வி.கே.குருசாமியின் பெயரைக் குறிப்பிட்டு, சிலர் ஆத்திரம் பொங்கக் கத்திக்கொண்டிருந்தனர்.

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

போலீஸாரின் டார்கெட்டில் உள்ள மாயக்கண்ணன் குறித்து விசாரித்தோம். இந்த மாயக்கண்ணன், மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்தவர். இவர், மதுரையில் பல குற்றங்களைச் செய்துவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் செட்டிலாகி, அங்கும் ஒரு திருமணம் செய்துகொண்டார். அயனாவரம், ஓட்டேரி பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது உள்பட பல குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அவரைச் சுட்டுப் பிடிக்க போலீஸ் முடிவு செய்திருக்கிறது.

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

இந்த நிலையில், முத்திருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் சென்னைக்கு வந்து மாயக்கண்ணனுடன் சேர்ந்து விட்டார்கள் என்ற தகவல் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. மேலும், ராஜபாண்டியின் ஆதரவாளர்களான இவர்கள், சென்னையில் தங்கியிருக்கும் வி.கே.குருசாமியை மாயக்கண்ணன் உதவியுடன் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. எனவே, அவர்கள் மூவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடியுள்ளனர். ஆனால், அவர்கள் மதுரைக்கு வந்துவிட்டதாகவும், சிக்கந்தர் சாவடியில் மாயக்கண்ணனின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தனிப்படை போலீஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாயக்கண்ணன் வீட்டுக்குள் செல்லூர் போலீஸார் திடீரென நுழைந்துள்ளனர். ஆனால், அங்கே இருந்த மாயக்கண்ணன், போலீஸார் தேடிய மாயக்கண்ணன் அல்ல. அதனால்,போலீஸாருக்கு அதிர்ச்சி.இந்த மாயக்கண்ணன் மீது பெரிய வழக்குகள் எதுவும் இல்லை என்பதால், அவரை விட்டுவிட்டு அங்கிருந்த முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீஸார் என்கவுன்டரில் போட்டுத் தள்ளினர்.

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

இந்த என்கவுன்டர் கொலை களை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். ‘‘எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் தண்டனைகளை நீதிமன்றங்கள்தான் வழங்க வேண்டும், காவல்துறையே தண்டனை வழங்குவது தவறு. உச்ச நீதிமன்ற, தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவுகளைக் காவல்துறை மீறியுள்ளது” என்று மக்கள்  சிவில் உரிமைக்கழகம் (பி.யூ.சி.எல்)  கூறியுள்ளது.

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

வி.கே.குருசாமி Vs ராஜபாண்டி...

ரத்த சரித்திரம்!

துரையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, தனிப்பட்ட ஈகோ காரணமாக தி.மு.க-வைச் சேர்ந்த வி.கே.குருசாமியும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜபாண்டியும் நிகழ்த்தி வந்த ரத்த விளையாட்டுகளை மதுரை மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, காவல்துறையினர் இந்த என்கவுன்டரை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

மாயக்கண்ணனுக்கு டார்கெட்... மாறிய என்கவுன்டர்?

இந்த இரு கோஷ்டிகளும் மாறி மாறிப் போட்டுத் தள்ளுவதில் தீவிரமாக இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்திலிருந்து பிழைப்புக்காகப் பல ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த பலர் கீழ்மதுரை, முனிச்சாலை, கீரைத்துறை, வாழைத்தோப்பு, மாகாளிப்பட்டி, காமராஜபுரம், பாலரெங்கபுரம், யாகப்பா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் குடியேறினர். வி.கே.குருசாமி குடும்பமும், ராஜபாண்டியன் குடும்பமும் அப்படி வந்தவைதான். மதுரை மாநகர வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் வேலுச்சாமியின் உறவினர் என்பதால், அவரை வைத்து தி.மு.க-வில் சேர்ந்தார் வி.கே.குருசாமி. அழகிரியின் நட்பைப் பெற்ற அவர், மாநகராட்சி உறுப்பினராகி கிழக்கு மண்டலத் தலைவராக உயர்ந்தார். அரசு ஒப்பந்தங்கள், பஞ்சாயத்துகள் என வருமானமும் மரியாதையும் கூடியது.

இன்னொரு பக்கம் ராஜபாண்டி, அ.திமு.க-வில் சேர்ந்து அரசியலில் வளர்ந்தார். வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகிய இவரும் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ஆயினர். அரசியல் போட்டி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மற்றொரு புறம் இரண்டு தரப்பினரும் மாறி மாறி கொலைகளைச் செய்துவந்தனர். இதுவரை இரண்டு தரப்புகளிலும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குருசாமியைப் போட்டுத் தள்ள ராஜபாண்டி ஆட்களும், ராஜபாண்டியைத் தீர்த்துக்கட்ட குருசாமி ஆதரவாளர்களும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் ராஜபாண்டியின் மகன் முனியசாமியை மதுரையிலிருந்து கடத்திக்கொண்டுபோய், கமுதி அருகே செங்கல்சூளையில் வைத்து எரித்துக்கொன்றனர் குருசாமி தரப்பினர். அந்த வழக்கில் வி.கே.குருசாமி உள்ளிட்டோரைக் கைதுசெய்தது போலீஸ். அதற்குப் பழிவாங்க, குருசாமியின் உறவினர் ஒருவரை சாயல்குடி அருகே வைத்துக் கொலை செய்தது ராஜபாண்டி தரப்பு. இப்படிப் பழிக்குப்பழி படுகொலைப் பட்டியல் முடிவின்றிப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், மதுரை முனிச்சாலை, காமராஜபுரம், கீரைத்துரை ஏரியாக்கள் எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே உள்ளன.

நிலைமை மோசமானதால், ‘மதுரையில் இருக்க வேண்டாம். வெளியூரில் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்’ என்று வி.கே.குருசாமியைக் காவல்துறை அறிவுறுத்தியதாம். ராஜபாண்டியும் உடல்நலமில்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இருந்தாலும் இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் அமைதியாக இல்லை. அவர்கள், நாள் குறிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை எப்படி இரு கட்சிகளின் தலைமைகளும் முக்கியப் பொறுப்புகள் கொடுத்து கட்சியில் வைத்துள்ளன?