Published:Updated:

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!
பிரீமியம் ஸ்டோரி
படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

அழியாத கறையாக ஆதிவாசி மரணம்

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

அழியாத கறையாக ஆதிவாசி மரணம்

Published:Updated:
படுகொலை செய்து ஒரு செல்ஃபி!
பிரீமியம் ஸ்டோரி
படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

கும்பலாகச் சேர்ந்து ஒருவரைக் கொலை செய்வதும், அதை வீடியோவில் பதிவுசெய்து பெருமையுடன் சமூகவலைதளங்களில் பதிவிடுவதும் என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் ஆறு பேர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது. அரிசி திருடியதாகக் குற்றம் சுமத்தி ஒரு கும்பல் அவரை அடித்தே கொன்றது. மதுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, ‘மதுவின் வயிற்றில் ஒரு சோற்றுப்பருக்கைகூட இல்லை’ என்கிறது. கல்வியில் முன்னோடி, கடவுளின் தேசம், பொதுவுடைமை பூமி எனப் பல அடையாளங்களைக் கொண்ட கேரளா மீது அழியாத கறையாகப் படிந்துள்ளது மதுவின் கொடூர மரணம்.
22 அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் மதுவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். பழங்குடி மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.

‘‘இத்தனை நாள் எங்களின் குறைகளைக் கேட்காத அதிகாரிகள், முதல்வரின் வருகையின்போது மட்டும் எதற்காக வரவேண்டும்’’ என்று பழங்குடி சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!
படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

அட்டப்பாடி பகுதியில் கடுகுமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர், 27 வயது மது. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாய் மல்லி, இரு சகோதரிகள் என எளிமையான குடும்பம். மனநலம் குன்றியதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் குடும்பத்திடமிருந்து விலகி, வனப்பகுதியில் வாழ்ந்து வந்தார் மது. ஒரு சிறு குகைதான் மதுவின் வசிப்பிடம். காட்டில் கிடைப்பதை வைத்து வயிற்றை நிரப்புவார். காட்டில் உணவு கிடைக்காத நேரத்தில், அருகில் உள்ள முக்காலி கிராமத்துக்குச் செல்வதுண்டு.மதுவின் தோற்றத்தைப் பார்த்து இரக்கப்பட்டு, சிலர் உணவு கொடுப்பார்கள். யாரும் எதுவும் கொடுக்காத நேரங்களில், எங்கிருந்தாவது அரிசி எடுத்துச் சென்று தனது குகையில் சமைத்துச் சாப்பிடுவார்.
 
இதையடுத்து, தொடர் திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட கும்பல் அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தியது. கைகளைக் கட்டி, கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்ததும், செல்ஃபி எடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மது உயிரிழந்தார்.

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

மதுவின் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவரின் தாய் மல்லி, ‘‘சின்ன வயசுல கோயிலுக்குப் போறப்ப அவன் கீழ விழுந்துட்டான். அப்ப இருந்து மனநலம் சரியில்ல. காட்டுலதான் இருப்பான். சிவ பக்தன்ங்கறதால விரதம் இருப்பான். தினம் ஒரு வேளைதான் சாப்பிடுவான். அந்த ஒரு வேளை சாப்பாட்டுக்குத்தான் வெளிய வருவான். திருடற அளவுக்கு எல்லாம் அவன் போகமாட்டான். மனநலம் பாதிக்கப்பட்டவனை இரக்கமே இல்லாம அடிச்சு கொன்னுருக்காங்க. அவங்கள மன்னிக்கவே மாட்டேன்’’ என்றார் கண்ணீர் மல்க.

‘‘என் அண்ணன் ரொம்ப அமைதியா இருப்பான். அவனை அடிச்சா யாரும் கேக்க மாட்டாங்கன்னுதான் அடிச்சுருக்காங்க. உயிர் போற நேரத்துல, குடிக்கத் தண்ணி கேட்டிருக்கான். ஆனா, தண்ணிகூட கொடுக்காம சாகடிச்சிருக்காங்க’’ என்று ஆத்திரம் பொங்கச் சொல்கிறார் மதுவின் சகோதரி சரசு.

பழங்குடி மக்கள் சங்கத்தின் கணேஷன், ‘‘அட்டப்பாடியைச் சுற்றி 193 மலைக் கிராமங்கள் உள்ளன. எங்களோட நலனுக்காக கோடிக்கணக்குல பணம் ஒதுக்கறாங்க. ஆனா, ஆட்சியாளர்களின் வயிற்றை நிரப்பத்தான் அது பயன்படுகிறது. இதற்கு எந்த அரசாங்கமும் விதிவிலக்கில்லை. கல்வி அறிவு கொண்டோர் அதிகம் வாழும் கேரளாவில்தான் எங்களது கிராமங்களும் உள்ளன. ஆனா, இங்கு பள்ளிகள் குறைவு. போக்குவரத்து வசதிகளும் கிடையாது. இவற்றையெல்லாம் கடந்து பட்டதாரி ஆனாலும், அதிகபட்சம் ஏழாயிரம் ரூபாய் சம்பளத்துக்குத்தான் வேலை கிடைக்குது. காட்டுக்குள்ள வாழறவங்களுக்கு மதுவோட கதிதான் நேர்கிறது’’ என்றார் ஆதங்கத்துடன்.

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

கேரள பழங்குடி மக்களுக்காகப் போராடி வரும் வஞ்சி, ‘‘ஆதிவாசி மக்களாகிய எங்களுடைய உழைப்பு வேணும். ஆனா, நாங்கள் வேணாம் என்று நினைக்கிறாங்க; அரசும் அப்படித்தான் நினைக்குது. நாட்டு மக்களுக்கு ஒரு சட்டம், ஆதிவாசி மக்களுக்கு ஒரு சட்டம். ஆதிவாசி மக்களை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். செத்தாலும் தடுக்கக் கூடாதுனு ஒரு எழுதப்படாத சட்டமே இருக்கு. அரிசி திருடினார்னு சொல்லி மதுவை அடிச்சுருக் காங்க. ஆனா, காட்டுல சந்தன மரம் வெட்டி விக்கறவங்க எல்லாம் ஊருக்குள்ளதான் இருக்காங்க. அவங்கள இந்தச் சட்டம் என்ன பண்ணிருக்கு?’’ என்றார் வேதனையுடன்.

களங்கமற்ற முகத்துடன் மரணத்தை எதிர்கொண்ட மதுவின் முகம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி எழுப்ப வேண்டும்.

- இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய்