Published:Updated:

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

``ரவிச்சந்திரன் சார் நல்லவர் என்று  நம்பினோம். ஆனால், எங்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார். மலைக் கிராமங்களில் வசிக்கும் நாங்கள், பத்தாம் வகுப்புத் தாண்டினாலே பெரிய விஷயம். ஆனால், ரவிச்சந்திரனின் நடவடிக்கையால் எங்களால் எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட முடியவில்லை. எங்களுடன் படித்த ஒரு மாணவியைப் பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டாமென பெற்றோர் நிறுத்திவிட்டனர். இப்போது அவள் மில் வேலைக்குப் போகிறாள். ரவிச்சந்திரன் செய்த கொடுமைகளை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை. ஹாசினி தங்கச்சிக்கு மட்டும்தான் நீதி கிடைக்குமா? எங்களுக்குக் கிடைக்காதா?’’ என்று கண்ணீருடன் கதறுகிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது காமன்கல்லூர் கிராமம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 60 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அங்கு தலைமையாசிரியராகப் பணியாற்றிய ரவிச்சந்திரன், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்துக்காகப் பள்ளிக்கல்வித் துறையால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ‘குற்றம் நிரூபிக்கப்பட்டப் பிறகும், அவர் கைது செய்யப்படவில்லை’ என்பது பெரும் சர்ச்சையாக உள்ளது.  

கிராம கமிட்டி துணைத்தலைவர் ஆண்டவர், ``இரண்டு வருடங்களுக்கு முன் ரவிச்சந்திரன் தலைமையாசிரியராக வந்தார். யோகா வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என்றெல்லாம் நடத்தினார். சுற்றுலா கூட்டிச் சென்றார். அக்கறையாக இருக்கிறார் என சந்தோஷப்பட்டோம். ஆனால், இப்படி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது. கிராமத்தினர், மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது புகார் கொடுத்தனர். புகாரை வாங்க போலீஸார் மறுத்துவிட்டார்கள். எனவே, 1098 என்ற சைல்டு லைன் நம்பருக்கு போன் செய்தோம். அவர்கள் விசாரணை செய்து ரவிச்சந்திரன்மீது காவல்நிலையத்தில் புகார் செய்தார்கள்.அந்தப் புகாரும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

அடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் புகார் கொடுத்தோம். ஜனநாயக மாதர் சங்கத்தினர், ரவிச்சந்திரன்மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்கள். அதையடுத்து, மாணவிகளிடம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சரஸ்வதி விசாரணை செய்தார். அதில், ரவிச்சந்திரன் தவறு செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 2017 நவம்பர் 20-ம் தேதி, பணியிலிருந்து ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் சத்தியநாராயணன் தலைமையிலான அதிகாரிகளும் விசாரணை செய்து, மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பிறகுதான், அவர்மீது வழக்குப்பதிவு செய்தார்கள். ஆனால், இப்போது வரை அவரை போலீஸார் கைதுசெய்யவே இல்லை’’ என்றார்.

மயிலாடும்பாறை காவல்நிலைய ஆய்வாளர் சக்திவேலிடம் பேசினோம். ``ரவிச்சந்திரன் தவறு செய்திருப்பார் என்று தெரியவில்லை. கிராம மக்கள் பொய் சொல்வதாகத் தெரிகிறது. அதனால்தான் ரவிச்சந்திரனைக் கைது செய்யவில்லை” என்றார்.

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் சத்தியநாராயணனிடம் பேசினோம். ``எங்களுக்குப் புகார் வந்ததும் விசாரணையில் இறங்கினோம். மாணவிகளிடம் ரவிச்சந்திரன் தவறாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. எனவே, மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் செய்தோம். போக்ஸோ சட்டத்தின்படி, ரவிச்சந்திரன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கேட்டபோது, ``எந்த ரவிச்சந்திரன்? எனக்கு ஞாபகம் இல்லை. வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி-யிடமோ, இன்ஸ்பெக்டரிடமோதான் கேட்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று முடித்துக்கொண்டார்.

“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா?”

ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெண்மணியிடம் பேசியபோது, ``தலைமையாசிரியர் ரவிச்சந்திரன்மீது, அவர் பணிபுரிந்த பள்ளிகளிலெல்லாம் பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, அவர் தப்பித்துவருகிறார். இப்போதுகூட, எங்களுடைய அழுத்தத்தால்தான் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இல்லையென்றால், அந்த மக்களை மிரட்டி அமைதியாக்கியிருப்பார்கள்’’ என்றார்.

ரவிச்சந்திரனின் கருத்தைக் கேட்பதற்காகப் பலமுறை அவரைத் தொடர்புகொண்டோம். “பேச விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

ஒட்டுமொத்த கிராமமும், சம்பந்தப்பட்ட மாணவிகளும் குற்றச்சாட்டு சொல்லி, கல்வித்துறையும் அந்தக் குற்றத்தை உறுதிசெய்துள்ளபோது, காவல்துறைக்கு மட்டும், அவர்மீது கரிசனம் ஏன் என்பது புரியவில்லை.

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி