Published:Updated:

பெண்களைப் பின்தொடரும் மரணம்!

பெண்களைப் பின்தொடரும் மரணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களைப் பின்தொடரும் மரணம்!

ரவிக்குமார்

சென்னையில் மாணவி அஸ்வினி கல்லூரியிலிருந்து வெளியே வந்தபோது அந்தக் கல்லூரி வாசலிலேயே  வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பகல்வேளையில் நடைபெற்றுள்ள இந்தப் படு கொலை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படி அதிர்ச்சியூட்டும் படுகொலைகள் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிக அளவில் நடக்கின்றன. 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சுவாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து ஓரிரு நாள்களிலேயே சேலத்தைச் சேர்ந்த வினுப்ரியா என்ற இளம்பெண், தன்னை ஒருதலையாகக் காதலித்தவன் தன் படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையத்தில் போட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 2017 ஜூலை 30-ம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனா என்ற 12-ம் வகுப்பு மாணவி, செந்தில் என்பவரால் எரித்துக்கொல்லப்பட்டார். 2016 ஆகஸ்ட் மாதத்தில், கரூரில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துவந்த சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் உதயகுமார் என்பவர் வகுப்பறையில் வைத்து கட்டையால் அடித்துக் கொலை செய்தார். தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை, சீகன் கோமஸ் என்பவரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். திருச்சியில் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தினார். புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி, எழிலரசன் என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டார். கோவை அன்னூரைச் சேர்ந்த தன்யா என்ற இளம்பெண், ஜாகீர் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

பெண்களைப் பின்தொடரும் மரணம்!

2017-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இந்துஜா என்ற பொறியியல் மாணவியும் அவருடைய அம்மாவும் எரித்துக்கொல்லப்பட்டனர். 2018 பிப்ரவரி 27-ம் தேதி, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சித்ராதேவியின் முகத்தில் பாலமுருகன் என்பவர் ஆசிட் ஊற்றினார். அதில், சித்ராதேவி உயிரிழந்தார்.

புதுச்சேரியில் நடந்த ஒரு சம்பவம் தவிர, இந்தப் படுகொலைகள் யாவும் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் நடந்திருந்தாலும், இவற்றுக்கிடையே ஓர் ஒற்றுமை உள்ளது. கொலையாளிகள், சம்பந்தப்பட்ட பெண்ணை ஒருதலையாகக் காதலித்துள்ளனர். பல நாள்களாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தி வந்துள்ளனர். அந்தப் பெண்கள் காதலை ஏற்க மறுத்ததால், படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள்.

தங்களைப் பின்தொடர்ந்துவந்து தொந்தரவு செய்கிறார்கள் என்று கொலையுண்ட பெண்களில் சிலர் போலீஸிலும் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல்துறை அந்தப் புகார்கள்மீது சரிவர நடவடிக்கை எடுக்க வில்லை. அதற்குக் காரணம், காவல்துறை அந்த மாதிரியான புகார்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண்ணை அவரது விருப்பமின்றி ஒரு ஆண் பின்தொடர்ந்து வருவதை போலீஸ் மட்டுமல்ல, பொதுமக்களும்கூட தண்டனைக்குரிய ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. அதை அலட்சியம் செய்யப்படக்கூடிய சிறு தவறாகவே கருதுகின்றனர். அது, வன்முறையாக மாறும்போதுதான் கூச்சல் போடுகின்றனர்.

‘இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி?’ என்பதை இந்த நேரத்திலாவது நாம் சிந்திக்கவேண்டும். ‘ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வது (ஸ்டாக்கிங்) தண்டனைக்குரிய குற்றம்’ என்பதே பலருக்கும் தெரிவதில்லை. அதை முதலில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

நிர்பயா, டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, நீதிபதி வர்மா தலைமையில் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனும் பெண்கள்மீதான பாலியல் வன் கொடுமைகளைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, இந்தியக் குற்றவியல் சட்டங்களில் செய்யவேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைத்தது. 

‘‘கிரிமினல் சட்டங்கள் என்பவை குற்றங்களைத் தண்டிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை நடக்காமல் தடுப்பதற்கானவையும்தான்’’ எனக் குறிப்பிட்ட வர்மா கமிஷன், ‘‘நமது சமூகத்தில் பெண்களைக் கேலி செய்வது, பின்தொடர்வது, அவர்கள் அறியாமல் அந்தரங்கமாகப் பார்ப்பது முதலான செயல்கள் சிறு குற்றங்கள் போலவே கருதப்படுகின்றன. ஆனால், இந்தச் செயல்களால் பெண்களின் கல்வியும், அவர்களது சுதந்திரமான நடமாட்டமும் தடைபடுகின்றன. எனவே, அரசாங்கம் இந்தக் குற்றங்களுக்கு எதிராகச் சட்டங்களை இயற்றவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கவும் வேண்டும். அது மட்டுமே போதாது, இந்தச் சிறிய குற்றங்கள் பெரும் பாலியல் வன்முறைகளாக மாறுவதைத் தடுக்க, அவற்றை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். நம் நாட்டின் சிறார்கள் மத்தியில், பரஸ்பரம் மரியாதை செலுத்தும் பண்பாட்டை உருவாக்குவது எப்படி என்பதை நன்கு ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்’’ என வலியுறுத்தியிருந்தது.

பெண்களைப் பின்தொடரும் மரணம்!

‘‘பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களைக் காவல்துறை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தியிருந்த வர்மா கமிஷன், ‘‘பாலியல் தொந்தரவுகள் தொடர்பான ‘வாயுரிசம்’, ‘ஸ்டாக்கிங்’, ‘ஈவ் டீசிங்’ உள்ளிட்ட எந்தவொரு புகாரையும் பாலியல் வல்லுறவுப் புகாருக்கு இணையாகக் கருதி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்தவொரு அதிகாரியாவது வழக்குப் பதிய மறுத்தாலோ, விசாரணையைச் சீர்குலைக்க முயன்றாலோ, அதைக் குற்றமாகக் கருதி அவருக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும்’’ எனவும் கூறியிருந்தது.

ஆசிட் வீசுவது, ஆசிட் வீச முயற்சி செய்வது; பாலியல்ரீதியில் தொந்தரவு கொடுப்பது; பெண்ணின் ஆடைகளைக் களைவது அல்லது அப்படிச் செய்யுமாறு வற்புறுத்துவது; பெண் ஒருவரின் அந்தரங்கமான செயல்களை அவர் அறியாமல் பார்ப்பது, பதிவுசெய்வது (வாயுரிசம்); பெண் ஒருவரை அவர் விருப்பமின்றி நேரிலோ, போன், மின்னஞ்சல் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மூலமாகவோ பின்தொடர்வது (ஸ்டாக்கிங்) முதலான புதிய குற்றங்களை வர்மா கமிஷன் வரையறுத்தது. அவற்றுக்கான தண்டனை கள் என்னென்ன என்பதையும் தனது அறிக்கை யில் முன்வைத்தது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் 354 ஏ, பி, சி, டி ஆகிய நான்கு பிரிவுகளும்; 362 ஏ, பி ஆகிய இரண்டு பிரிவுகளும் புதிதாகச் சேர்க்கப் படவேண்டும் என வர்மா கமிஷன் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டம் ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி, ‘ஸ்டாக்கிங்’கில் ஒருவர் ஈடுபட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. ’வாயுரிசத்துக்கு’ ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை தரப்படும்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன என்றபோதிலும், அவற்றைப்பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக விழிப்பு உணர்வு ஏற்படவில்லை. தமிழகக் காவல் துறையில் இருப்பவர்களுக்கேகூட, அத்தகைய சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டிருப்பது சரிவரத் தெரியவில்லை என்பதே உண்மை. அதனால்தான், அந்தப் பிரிவுகளின்கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களைப் பின்தொடரும் மரணம்!

2016-ம் ஆண்டுக்கான தேசியக் குற்ற ஆவண மைய (NCRB) அறிக்கையின்படி, பெண்ணை அவர் அறியாமல் அந்தரங்கமாகப் பார்ப்பது என்னும் ’வாயுரிசம்’ என்ற குற்றத்துக்காக தமிழகத்தில் ஐ.பி.சி 354 சி செக்‌ஷனின் கீழ் 12 வழக்குகளும், பெண்களைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்யும் ’ஸ்டாக்கிங்’ என்ற குற்றத்துக்காக ஐ.பி.சி 354 டி செக்‌ஷனின் கீழ் 28 வழக்குகளும் மட்டும்தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆனால், ’ஸ்டாக்கிங்’ குற்றத்துக்காக தெலங்கானாவில் 1,096 வழக்குகளும், மகாராஷ்ட்ராவில் 1,587 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில், எந்த அளவுக்குத் தமிழகக் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.

‘ஸ்டாக்கிங்’ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, பின்வரும் நடவடிக்கை களைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்:

2001 -2006 கால கட்டத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி ‘அரசு அதிகாரிகளிடையே பாலின சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்களுக்கான நிரந்தரமான பயிற்சித் திட்டங்களில் ஒன்றாக மாற்றப்படவேண்டும்.

பெண்கள்மீதான மதிப்பை உயர்த்தும் விதமாகவும்; ‘வாயுரிசம்’, ‘ஸ்டாக்கிங்’ முதலானவை தண்டனைக்குரிய குற்றங்கள் என்ற தெளிவை ஏற்படுத்தும் விதமாகவும்; பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே விழிப்பு உணர்வு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்ச் சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீட்டை வடிவமைப்பதிலும், பெண்கள் மீதான வன்முறையை அதிகரிக்கச் செய்வதிலும், சினிமாவுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. பெண்களைக் கவர்ச்சிப் பண்டங்களாகச் சித்திரிப்பது எல்லா மொழிகளிலும் நடந்து வருவதுதான். ஆனால், தமிழ் சினிமா அதையும் தாண்டிச் செயல்படுகிறது. ஒரு பெண்ணை விடாமல் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் அவளது காதலைப் பெற்றுவிட முடியும்; ரௌடித்தனம் செய்பவனைத்தான் பெண்கள் காதலிப்பார்கள்... என்பவை போன்ற ஆபத்தான கருத்தாக்கங்களை தமிழ் சினிமா அண்மைக் காலமாகத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அந்த சினிமாக்களைப் பார்க்கும் பெண்கள் அவற்றால் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ, ஆண்கள் ஊக்கம் பெறுகிறார்கள் என்பது உண்மை. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை எடுத்து ஆராய்ந்தால், இதை நாம் உணர முடியும்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் விக்கிரமனை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, ‘‘இப்படி ‘ஸ்டாக்கிங்’கை ஊக்குவிக்கும் காட்சிகளை வைக்க வேண்டாம் என நீங்கள் ஏன் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தக்கூடாது?’’ என்று கேட்டேன். ‘‘நான் வேண்டுமானால் அப்படிச் செய்யாமல் இருக்கலாம். மற்ற இயக்குநர்களிடம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்’’ என்றார். தாமாகச் செய்யமாட்டார்கள் எனில், சென்சார் போர்டுதான் அதைச் செய்யவைக்க வேண்டும்.

பெருமித உணர்வு எப்படி ஆணவமாக மாறி பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு இட்டுச் செல்கிறதோ, அப்படித்தான் ‘ஜாலி’யான ஒன்றாக ஆரம்பிக்கும் ‘ஸ்டாக்கிங்’ என்பதுதான், விரும்பும் பெண்ணையே கொலை செய்யும் அளவுக்குக் கொண்டுபோகிறது.

கொலைவிழும்போது மட்டும் ’குய்யோ முறையோ’ எனக் கதறுவது... அடுத்த நாளே ஸ்டாக்கிங் காட்சியைப் பார்த்து திரையரங்கில் கை தட்டுவது... என இருந்தால், நம் வீட்டுப் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது. அதை இப்போதாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.