அலசல்
Published:Updated:

கடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்!

கடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்!

பல கோடி ரூபாய் பொருள்கள் அபேஸ்

யிற்றைக் கிழித்து உள்ளே வைத்து, ஆசன வாய்க்குள் அடைத்துவைத்து, ஷூவுக்குள் மறைத்துவைத்து... இப்படி, எந்த மறைவிடத்தில் ஒளித்துவைத்து தங்கத்தைச் சிலர் கடத்தினாலும், கஸ்டம்ஸ் அதிகாரிகளின் பார்வை யிலிருந்து அது தப்புவது கடினம். அப்படிப்பட்ட ‘ஸ்கேன்’ பார்வை கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கன்டெய்னர் களையே கடத்தியுள்ளனர் எத்தன்கள் சிலர். இப்படி, ஏராளமான கன்டெய்னர்கள் கடத்தப்பட்டுள்ள தாகவும், அந்த கன்டெய்னர்களில் இருந்த பொருள்கள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை என்றும் சுங்கத் துறை வட்டாரம் சொல்கிறது.

வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் பலவிதமான பொருள்கள், கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு சென்னைக்கு வருகின்றன. கப்பல்களிலிருந்து இறக்கப்படும் அந்த கன்டெய்னர்களை, கன்டெய்னர் சரக்குச் சேவை (சி.எப்.எஸ் - Container Freight Service) குடோன்களுக்கு சுங்கத் துறையினர் அனுப்பி வைப்பார்கள். அந்தக் கன்டெய்னர்களில் உள்ள பொருள்கள், தடைசெய்யப்பட்டவையோ, கடத்தி வரப்பட்டவையோ அல்ல என்பதை உறுதிசெய்து, அதற்கான சுங்க வரி வசூலிக்கப்படும். அதற்கான சான்றிதழை கஸ்டம்ஸ் அதிகாரிகள் அளிப்பார்கள். அந்தச் சான்றிதழை சி.எப்.எஸ் குடோனில் அளித்தால், சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களை எடுத்துச் செல்லலாம். இதுதான் நடைமுறை.

கடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்!

இப்படி, சி.எப்.எஸ் குடோனில் இருந்த பொருள்களைத்தான், சில மாதங்களுக்கு முன்பு போலி ஆவணங்களைக் கொடுத்துச் சிலர் எடுத்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அப்போது, அபேஸ் செய்யப்பட்ட பொருள்கள் சென்னை சாத்தாங்காடு என்ற இடத்தில் உள்ள குடோன் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. அந்த குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், காணாமல் போன பொருள்கள் எதுவும் அங்கு இல்லை. ஆனாலும், அந்தப் பொருள்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு இருந்தன. அந்த ஆவணங்கள் மற்றும் விதிமுறைப்படி அங்கு இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த குடோனின் மேனேஜர் ரவீந்திரகுமார் மற்றும் ஊழியர்கள் இளவரசன், ஹரிபாபு ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட ரவீந்திரகுமார், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை எதிர்த்து சென்னை சுங்கவரித் துறையின் உதவி ஆணையர் தேன்மொழி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இறக்குமதி டெலிவரி ஆணை, கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் ஆணை, புரோக்கர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் போலியாகக் காண்பித்து, திருவொற்றியூர் சி.எப்.எஸ் குடோனிலிருந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்களைச் சிலர் எடுத்துச் சென்றுள்ள னர். அந்தப் பொருள்களைச் சாத்தாங்காடு குடோனில் வைத்துள்ளனர். பிறகு, அந்த குடோனில் பணியாற்றிய இளவரசன், மனோ ஆகியோரின் உதவியுடன் பொருள்களை இடம் மாற்றியுள்ளனர். ‘வழக்கமா, ரவீந்திரகுமார் இதுபோன்ற பொருள்களை குடோனுக்குக் கொண்டு வருவார்’ என்று அந்த குடோனின் மற்றொரு பொறுப்பாள ரான ராஜேந்திரன், வாக்குமூலம் அளித்துள்ளார். அசோக், ஹரிபாபு உள்ளிட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையிலும் ரவீந்திரகுமாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. கடத்தல் பொருள்களைப் பதுக்கி வைப்பது, அவற்றை இடம் மாற்றுவது ஆகியவற்றுக்கு உதவும் வேலையில் பல ஆண்டுகளாக ரவீந்திரகுமார் ஈடுபட்டு வருகிறார். இது, திருமலை தியாகராஜன், அசோக், மகேஷ் ஆகியோரின் வாக்குமூலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

கஸ்டம்ஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “பல சி.எப்.எஸ் குடோன்களில் இருந்த கன்டெய்னர்களில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை, போலியான ஆவணங்களைக் கொடுத்து சில ஏஜென்டுகள் கடத்தியுள்ளனர். சி.எப்.எஸ் குடோனுக்கு வந்தது ரவீந்திரகுமாரின் குடோன் வாகனம்தான். அந்த வாகனத்தில்தான், பொருள்களை ஏற்றி, பிறகு மாற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில் கைதான திருமலை, ஹரிபாபு போன்றவர்கள் இதேபோல் கடத்தல் தொழிலில் நீண்ட காலமாக இருப்பவர்கள். அவர்களை, இந்த லைனில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள்” என்றனர்.

ரவீந்திரகுமாரின் வழக்கறிஞர் ஜாகீர் உசேனிடம் கேட்டபோது, “ரவீந்திரகுமார் ஒரு குடோனின் மேனேஜர். வாடிக்கையாளர்கள் தங்கள் பொருள்களை குடோனில் வைப்பதற்கு, உரிய ஆவணங்களைக் காட்டினால், வாடகை வாங்கிக்கொண்டு பொருள்களை வைப்பார்; டெலிவரி செய்வார்; பார்சலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. போலியான ஆவணங்களைக் கொடுத்து கஸ்டம்ஸ் அதிகாரிகளை ஏமாற்றிய சிலர், ரவிந்திரகுமாரையும் ஏமாற்றியுள்ளனர். விசாரணைக்காக வந்த அதிகாரிகள், குடோன் ஊழியர்களை இரண்டு நாள்கள் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளனர்.  குடோனில் உரிய ஆவணங்களுடன் இருந்த பொருள்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.  சீல் வைத்துவிடதால் ஆறு மாதங்களாக குடோன் பூட்டிக்கிடக்கிறது’’ என்றார்.

ரவீந்திரகுமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கன்டெய்னர்கள் கடத்தலில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் கிளம்புகிறார்கள். வழக்கறிஞர் ஜாகீர் உசேன், இது தொடர்பாக சி.பி.ஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார். இதை சி.பி.ஐ விரைவில் கையிலெடுக்கும் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

- ஜோ.ஸ்டாலின்