Published:Updated:

3 தோட்டாக்கள், அம்மா - அண்ணனின் இரட்டைக்கொலை... சிறுமியின் வன்முறையும் `ஷாக்' பின்னணியும்

துப்பாக்கி
துப்பாக்கி

ஒரு புத்தகம் ஒருவரைக் கொலையாளியாகக் கூட மாற்ற வாய்ப்பிருக்கிறது என்று திகிலூட்டுகிறது லக்னோவில் நடந்துள்ள ஒரு `பகீர்' சம்பவம்.

``புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், `கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்' என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது” என்றார் எலன் எக்ஸ்லே.

ஆம்! ஒரு புத்தகம் உங்களைச் சிறந்த அறிவாளியாகவோ, பெரும் புரட்சியாளராகவோ, சூழலியல் ஆர்வலராகவோ, வெற்றிகரமான தொழில்முனைவோராகவோ மாற்றலாம்... அதற்கு நிறைய உதாரணங்களைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு புத்தகம் ஒருவரைக் கொலையாளியாகக் கூட மாற்ற வாய்ப்பிருக்கிறது என்று திகிலூட்டுகிறது லக்னோவில் நடந்துள்ள ஒரு `பகீர்' சம்பவம்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ... கெளதம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பங்களா 29-ம் தேதி மாலை மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. காரணம், அந்த பங்களாவுக்குள் நடந்திருந்த இரட்டைக் கொலை. உள்ளே உள்ள படுக்கை அறையில் தாயும் மகனும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கொலையைச் செய்தது வேறு யாருமில்லை. கொலையுண்ட தாயின் 14 வயது மகள்தான் எனத் தெரியவரத் திடுக்கிட்டது போலீஸ்.

சிறுமியை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், ``சிறு வயதிலிருந்தே அந்தச் சிறுமி படிப்பில் படு சுட்டியாக இருந்துள்ளார். பள்ளியில் சிறந்த மாணவி என்று பெயரெடுத்த அவர் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும்கூட. தனது பயிற்சி துப்பாக்கியைப் பயன்படுத்தித்தான் இந்தச் சம்பவத்தைச் செய்துள்ளார். அந்தச் சிறுமியின் தந்தை ரயில்வே அமைச்சகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரின் பெயரில்தான் அந்தத் துப்பாக்கி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

crime
crime

துப்பாக்கியிலிருந்து மொத்தம் மூன்று தோட்டாக்கள் பாய்ந்திருக்கின்றன. தன் அம்மாவைக் கொல்ல ஒரு தோட்டாவும் அண்ணனைக் கொல்ல ஒரு தோட்டாவும் பயன்படுத்தியிருக்கிறார். இன்னொரு தோட்டாவால் அவரது பாத்ரூமில் உள்ள கண்ணாடியில் சுட்டிருக்கிறார். அங்கே `தகுதியற்ற மனிதன்’ என்று தக்காளி சாஸைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதென வீட்டிலிருந்த உறவினர்கள், பணியாட்களை மிரட்டிய அந்தச் சிறுமி, தன் மணிக்கட்டையும் ரேஸரால் அறுத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். ஒரு சின்ன பெண் தன் அம்மாவையும் அண்ணனையும் கொலைசெய்யும் அளவுக்குப் போக வேண்டிய காரணம் என்னவாக இருக்கும்? என எங்களுக்கு ஆரம்பத்தில் மிகவும் குழப்பமாக இருந்தது.

அந்தச் சிறுமிக்கு ஏதேனும் மனநலப் பாதிப்பு இருக்குமோ என ஆரம்பத்தில் சந்தேகப்பட்டோம். அந்தச் சந்தேகத்தை வலுவாக்கும் வகையில் அந்தச் சிறுமியின் அறையிலிருந்து செயற்கை மண்டை ஓடு மற்றும் கோரமான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. பெண் போலீஸார் முன்னிலையில் மனநல ஆலோசகர் அந்தச் சிறுமியிடம் நடத்திய விசாரணையில்தான் உண்மை வெளிவந்தது. ஜப்பானிய எழுத்தாளரான `ஒசாமு தசாய்' அந்தச் சிறுமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்துள்ளார். ஒசாமு எழுதிய புத்தகங்களை விரும்பிப் படித்து வந்த சிறுமி, சமீப நாள்களாக அவரின் `நோ லாங்கர் ஹ்யூமன்’ என்ற புத்தகத்தை ஆழ்ந்து படித்துள்ளார்.

ஒருகட்டத்துக்கு மேல் அந்தப் புத்தகத்தில் உள்ள `ஒபா யோசோ’ என்ற கேரக்டராகவே தன்னை பாவித்துக்கொண்டு வாழ ஆரம்பித்த அந்தச் சிறுமி, தனது டைரியில் அந்தக் கதாபாத்திரம் கூறும் மனிதர்கள் பற்றிய கருத்தியல் குறிப்புகளைத் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். அதில் `தகுதியற்ற மனிதன்' என்ற வாசகமும் அடக்கம். தன் அம்மாவையும் அண்ணனையும் சுடுவதற்கு முன்பாக முதல் தோட்டாவை பாத்ரூமில் உள்ள கண்ணாடியில்தான் சுட்டிருக்கிறார். அங்கும் இதே வசனம்தான் எழுதப்பட்டிருந்தது. ஒரு நாவல் ஒருவரை இந்தளவுக்கு உளவியல் ரீதியாகப் பாதித்து கொலையாளியாக மாற்றும், அதுவும் அம்மாவையும் அண்ணனையுமே கொலை செய்ய வைக்கும் என நினைக்கும்போதே பகீரென இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு