அலசல்
Published:Updated:

ஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்!

ஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்!

அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா

திருமண விழாக்களில் எடுக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கிய சம்பவத்தால் கேரளாவே அதிர்ந்துபோயுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் வடகரைப் பகுதியைச் சேர்ந்த பல பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவின. அவை எங்கிருந்து வெளியாகின்றன என்பது தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் தவித்தனர். இந்தப் புகைப்படங்களால், பல குடும்பங்களில் பிரச்னைகள் ஏற்பட்டன. இந்த நிலையில், தன் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக வடகரையில் உள்ள சதயம் ஸ்டுடியோமீது வடகரை போலீஸ் ஸ்டேஷனில் மார்ச் 27-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். அதையடுத்து, சதயம் ஸ்டுடியோவுக்கு எதிராகப் பலர் புகார்கள் எழுந்தன. அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர்களான சதீஷ், அவரின் சகோதரர் தினேஷ் மற்றும் போட்டோஷாப் எடிட்டர் பிபீஸ் ஆகியோர் தலைமறைவாகினர். ‘தலைமறைவாகிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து வேகம் காட்டிய போலீஸார், சதீஷையும் தினேஷையும் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு, ராஜமலைக் காட்டில் வைத்து பிபீஸையும் இடுக்கி போலீஸ் கைதுசெய்தது.

ஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்!

போராட்டத்தை முன்னெடுத்த கர்ம சமீதியைச் சேர்ந்தவர்கள், ‘‘சதயம் ஸ்டுடியோவில் எடிட்டிங் பணி செய்யும் பிபீஸ், தான் மார்ஃபிங் செய்யும் போட்டோக்களை வெளிநாடுகளில் வேலை செய்யும் கேரளத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அனுப்பிவந்தார். உள்ளூர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அழகான பெண்களை விதவிதமாகப் படமெடுத்து இப்படி மார்ஃபிங் செய்திருக்கிறார் அவர். வெளிநாட்டில் இருக்கும் வடகரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த ஆபாசப் புகைப்படங்களை பிபீஸ் அனுப்பியிருக்கிறார். அவற்றில் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் ஆபாசப் புகைப்படம் இருந்ததைப் பார்த்து, அந்த வெளிநாடுவாழ் வடகரை இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் இதுபற்றிக் கூறியவுடன், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சதயம் ஸ்டுடியோவைச் சோதனையிட்டு கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அதில் 45 ஆயிரம் புகைப்படங்கள் இருந்துள்ளன. நூற்றுக்கணக்கான பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் இருந்துள்ளன. அவற்றில் பல சிறுமிகளின் புகைப்படங்களும் இருந்தன’’ என வேதனையுடன் சொன்னார்கள்.

வடகரையைச் சேர்ந்த ஒருவர், “10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இந்த மார்ஃபிங் மாஃபியாக்களின் கேமரா கண்களில் சிக்கியிருப்பார்கள்” என்றார் அதிர்ச்சி விலகாமல்.

கோழிக்கோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ‘‘தினேஷ், சதீஷ் சகோதரர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே, அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் திருமணங்கள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க சதயம் ஸ்டியோவுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிபீஸ் போட்டோ எடிட்டிங் பணிக்காக சதயம் ஸ்டுடியோவில் சேர்ந்திருக்கிறார். பணியில் சேர்ந்ததும் பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்யும் வேலையையும் தொடங்கியுள்ளார். போட்டோ எடிட்டிங் பணிகளை நேர்த்தியாகச் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்ததால், பிபீஸின் தவறுகளை ஸ்டுடியோ உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு அவர்களும் பிபீஸின் குற்றச்செயலுக்கு உதவியுள்ளனர்.

ஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்!

பிபீஸிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதில், ‘அழகான பெண்களின் புகைப் படங்களை மார்ஃபிங் செய்து ரசிப்பேன்’ எனக் கூறினார். சதயம் ஸ்டுடியோவில் சம்பளத்துக்கு வேலை செய்துவந்த பிபீஸ், புறமேரி பகுதியில் புதிதாக ஸ்டுடியோ திறக்கவிருந்தார். அவர் எந்தெந்த வலைத்தளங்கள் மூலம் யாருக்கெல்லாம் போட்டோ அனுப்பியுள்ளார் என்ற விவரங் களைச் சேகரிப்பதுடன், கைது செய்யப்பட்டவர் களின் வங்கிக் கணக்குகளையும் சோதனையிட உள்ளோம். சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்ட புகைப்படங்களை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம்’’ என்று கூறினார்கள்.

“இந்தச் சம்பவம், இந்தப் பகுதி மக்களை மிகவும் அச்சமடைய வைத்துள்ளது. இந்தக் குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார் கள்” என்றார் வடகரா தொகுதி காங்கிரஸ்       எம்.எல்.ஏ-வான சி.கே.நானு. இந்தப் பிரச்னை குறித்துத் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கேரள மாநில மகளிர் ஆணையம், இது குறித்து விசாரிக்கச் சிறப்புப்படை ஒன்றை அமைக்குமாறு கோழிக்கோடு எஸ்.பி-க்கு உத்தரவிட்டுள்ளது.

‘‘பெண்களே, சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றாதீர்கள். அவற்றைச் சமூக விரோதிகள் ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் உலவவிடலாம்’’ என சைபர் க்ரைம் போலீஸார் அடிக்கடி எச்சரிப்பது வழக்கம். ‘திருமண வீடுகளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதில்கூடக் கவனமாக இருங்கள்’ என அறிவுறுத்தும் காலம் வந்துவிட்டது.

- ஆர்.சிந்து