அலசல்
Published:Updated:

“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”

“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”

நூறு முறை சிறை சென்ற பெரிய பூச்சி

‘‘வாழ்க்கையில எதை யாச்சும் சாதிச்சவங் களப் பத்தி பத்திரிகையில எழுதினா நல்லா இருக்கும். நான் என்னத்த செஞ்சிருக்கேன்? ‘நூறு தடவைக்கு மேல ஜெயிலுக்குப் போயிருக்கேன்’னு சொல்லுற தெல்லாம் ஊர் மெச்சுற  சாத னையா? நான் ஒரு திருட்டுப்பய. நூத்துக்கணக்கானவங்களை நடுரோட்டுல தவிக்கவிட்டவன். ஊர்ப் பாவமும் சாபமும் வாங்கிச் சேர்த்த ஆளு. வேணும்னா, ‘இவனைப்போல வாழ்ந்து தொலைச்சிராதீங்க’னு எழுதுங்க. அதுக்கு மட்டும்தாங்க என் வாழ்க்கை யூஸ் ஆகும்’’ என நம்மிடம் பேசிய பெரிய பூச்சியின் குரல் முழுக்க நிரம்பியிருக்கிறது குற்ற உணர்வு.

பெரிய பூச்சி... கடந்த ஆண்டுவரை கோயம்புத்தூரில் மிகப்பெரிய ‘பிக் பாக்கெட்’ ஆக இருந்தவர். எட்டு வயதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றதுமுதல் 58 வயதில் சென்ட்ரல் ஜெயிலுக்குச் சென்றது வரை, பெரிய பூச்சியின் சிறை வாழ்க்கையைக் கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது. வாழ்வின் அதிமுக்கியமான இளமைக் காலமெல்லாம் கரைந்துபோய்விட்ட பிறகு காலம் அவரைத் திருத்தியிருக்கிறது. கோவை 100 அடி சாலையில் ஓர் மரத்தடியில், கிராமத்துத் திருவிழாவின் தற்காலிகக் கடையைப் போல ஒரே ஒரு டேபிள் சேரைக் கொண்டு கடை வைத்திருக்கிறார். இப்போது, அந்தக் கடைதான் அவருக்கு எல்லாமே.

“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”

‘‘என் வாழ்க்கையும் சினிமா போலத்தான்...’’ என்று கரகரக் குரலில் பேச ஆரம்பித்தார் பெரிய பூச்சி. ‘‘வறுமையாலதான் திருடனானேன்னு சொல்லி என்னை நியாயப்படுத்திக்கிறேன்னு நினைக்காதீங்க. நான் செஞ்ச தப்பு எந்தக் காரணத்தினாலும் நியாயமா கிடாதுங்கிறது எனக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு தப்புக்குப் பின்னாலயும் ஒரு காரணம் இருக்கும்ல’’ எனத் தெளிவாகத் தத்துவம் போலப் பேசுகிறார்.

‘‘எம் பேரு பாபு. ரத்தினபுரிலதான் வீடு. அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சினு சந்தோஷமான குடும்பம். பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டிருந்தேன்.  படிப்புல நாட்டமில்ல. அப்பா டெய்லர். அவருக்கு இங்க பெரிசா வேலையில்ல. வேலைக்காக பெங்களூரு போனார். மாசா மாசம் குடும்பதுக்குப் பணம் அனுப்பினார். ‘அப்பாடா... கஷ்டம் தீர்ந்துச்சு’ன்னு நெனச்சோம். ஆனால், அது நாலைஞ்சு மாசம்கூட  நிலைக்கல. அப்பா எங்களுக்குப் பணம் அனுப்புறதை நிறுத்திட்டார். அவர் என்ன ஆனார்னு தெரியலை. எங்களால அவரைத் தொடர்புகொள்ள முடியல. அம்மா எங்களைக் காப்பாத்தறதுக்காக, கிடைக்கிற வேலைக்கெல்லாம் போச்சு. அந்தக் காசுல நாங்க ஒரு வேளை சாப்பிடறதே பெரிய விஷயமா இருந்துச்சு...’’ பழைய நினைவுகளில் மூழ்கியபடி மெளனமான பெரிய பூச்சி, சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்.

‘‘அப்போ நான் ரெண்டாவது படிச்சிக்கிட்டிருந்தேன். பணம் இல்லாம அம்மா புலம்புறது எனக்குள்ள ஆழமா பதிஞ்சிருச்சு. ஒருநாள் எங்க க்ளாஸ் டீச்சர், அவங்க மணி பர்ஸை டேபிள்ல வெச்சிட்டு போயிட்டாங்க. அதைப் பார்த்தப்போ, எங்க அம்மா பணத்துக்காகப் புலம்புறது நினைவுக்கு வந்துச்சு. யோசிக்காம, அந்தப் பர்ஸிலிருந்த பணத்தைத் திருடிட்டேன். 200 ரூபா இருந்துச்சு. அன்னைக்கு ஸ்கூல் முடியுறவரை டீச்சர் பர்ஸைப் பார்க்கல. ‘அப்பாடா... தப்பிச்சோம்’னு வீட்டுக்குப் பறந்துட்டேன். அப்பவே பள்ளிக்கூடத்துக்கு முழுக்கு போட்டுட்டேன். 

கொஞ்ச நாள்லயே கெட்ட சகவாசம். தண்ணி, தம்முனு மொத்தமா தடம் புரண்டுட்டேன். ‘ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? பணம் சம்பாதிக்கிறதுக்கு ஈஸியான வழி திருட்டுன்னு நெனைச்சேன். என்னை மாதிரியே நாலு பசங்க செட்டு சேர்ந்தோம். பஸ் ஸ்டாண்டுல பர்ஸ் அடிக்கிறதுதான் வேலை. ஆரம்பத்துல நாலஞ்சு அட்டெம்ட் சக்சஸ் ஆச்சு. கொஞ்ச நாள்லயே போலீஸ்ல சிக்கிக்கிட்டேன். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில தூக்கிப் போட்டுட்டாங்க. ரெண்டு மாசம் இருந்தேன். ‘இனிமே திருடக் கூடாது’னு சொல்லி, செமத்தியா அடிச்சாங்க.

“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”

வெளியில வந்தபிறகு என்னைப் பார்த்து அம்மா அழுதுச்சு. என்னைத் தோள்ல சாய்ச்சுக்கிட்டு, ‘இனிமேல் இந்தப் பழக்கம் உனக்கு வேணாம்டா... எப்பாடு பட்டாவது நான் உனக்குக் கஞ்சி ஊத்துறேன்’னு அம்மா கெஞ்சிச்சு. அதெல்லாம் என் மண்டையில ஏறல. என் புத்தி மாறல. இன்னொரு தடவை போலீஸ்ல சிக்கினேன். மீண்டும் சீர்திருத்தப்பள்ளியில போட்டாங்க.

வெளியில வந்தப்புறம், புரொபஷனல் பிக் பாக்கெட்டாவே மாறிட்டேன். அப்போ, தொழில்ல இருந்த பெரிய தலைங்க எனக்கு பிக் பாக்கெட் அடிக்கிற டெக்னிக்கைக் கத்துக் கொடுத்தாங்க. பயங்கரமா திருட ஆரம்பிச்சோம். ஆயிரக் கணக்குல பணம் குவியும். அம்புட்டையும் குடிச்சே தீர்த்துருவோம். அந்தச் சமயத்துலதான் ‘டேய்... நீ பூச்சி மாதிரி வேலை செய்யுறடா’னு சொல்லி ஒருத்தன் எனக்கு ‘பூச்சி’ன்னு பேரு வெச்சான். என் தம்பியும் படிக்கப்போகாம சின்னச் சின்னத் திருட்டு வேலைகள்ல இறங்கிட்டான். அவனுக்கு ‘சின்னப் பூச்சி’ன்னும் எனக்கு ‘பெரிய பூச்சி’ன்னும் பேராகிப்போச்சு. வீட்டையே மறந்துட்டேன். அப்பப்போ அம்மாவுக்குப் பணம் கொடுக்கறதுக்கு மட்டும் வீட்டுக்குப் போவேன். நான் கொடுக்கிற திருட்டுக் காசை அம்மா வாங்கவே வாங்காது. என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பிச்சிரும். நான் எதுவும் பேசாம பணத்தை அம்மாவுக்குப் பக்கத்துல வெச்சிட்டு வந்துருவேன்...’’ என அவர் சொல்லச் சொல்ல மனசுக்குள் ஒரு சினிமா விரிய ஆரம்பிக்கிறது.

‘‘போலீஸ்ல என் பேரை பிக் பாக்கெட் திருடங்க லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க. ஊருக்குள்ள எங்கே திருட்டு நடந்தாலும் என்னைப் புடிச்சு உள்ள போட ஆரம்பிச்சாங்க. வெளியில வந்து ஒரு மாசம்கூட ஆகாது, அதுக்குள்ள இன்னொரு கேஸ்ல உள்ள தூக்கி வெச்சிருவாங்க. அஞ்சு ரூபா திருடினேன்னுகூட கேஸ் போட்டு உள்ள தள்ளினாங்க. அப்புறம் திருந்தறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு. ஜெயிலுக்குப் போறமேன்னு பயமே இல்லாமப்போச்சு. ரொம்ப வருஷம் ஜெயில்லயே இருந்துட்டதால வெளில வந்து என்ன பண்றதுங்கிற பயம் வேற என்னை அமுக்கிருச்சு’’ என்று சொல்லும் பெரிய பூச்சி, இதுவரை ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத் தட்ட 100 வழக்குகளில் கைதாகிச் சிறை சென்றதில், சுமார் 35 வருடங்கள் சிறையிலேயே கழித்திருக்கிறார்.

‘‘ஜெயில் தண்டனையையெல்லாம்விடக் கொடுமையான தண்டனைகள் இருக்குங்க...” என உடைந்த குரலில் தொடர்ந்தார் பெரிய பூச்சி. ‘‘இந்த ஒரு வருஷமாதான் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுது. யாரைப் பார்த்தும் பயமில்லாம வாழும்போதுதான், ‘பணத்துக்காக பயந்து நடுங்கிக்கிட்டே வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது’னு தெரியுது. பஸ்ஸுக்கு வெச்சிருந்தது, புள்ளைக்குப் பால் வாங்கிக்கொடுக்க வெச்சிருந்தது, மருந்து மாத்திரை வாங்கக் கொண்டுவந்தது, குடும்பக் கஷ்டத்துக்காக நகையை அடமானம் வெச்சு வாங்கினதுனு எவ்வளவு பேரோட காசை நான் பிக் பாக்கெட் அடிச்சிருப்பேன்! அவங்க எப்படியெல்லாம் என்னைச் சபிச்சிருப்பாங்க. எத்தனை பேர் ரோட்டுல திண்டாடி யிருப்பாங்க! இந்த நினைப்பு இப்போ வந்து, மனசைப்போட்டு அறுத்தெடுக்குது. இதைவிட மோசமான தண்டனையை எந்த ஜெயிலும் கொடுத்துடாது. 

எல்லாத்தையும்விடக் கொடுமை... என் அம்மாவோட சாவுகூட எனக்குத் தெரியாமப் போச்சு. சாகும்வரை என்னால அதை ஜீரணிக்க முடியாது. அப்போ, நான் கோவைச் சிறையில இருந்தேன். உடம்பு சரியில்லாம எங்க அம்மா செத்துப்போயிருக்கு. எனக்குச் சொல்லாமலேயே அடக்கம் பண்ணிட்டாங்க. வெளியில வந்தபிறகு தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. நான் திருட்டுப்பயன்னு தெரிஞ்சும் என் மேல அன்பு வெச்சிருந்த ஒரே ஜீவன், என் அம்மா மட்டும் தான். அவங்களோட முகத்தைக்கூடப் பார்க்க முடியாமல்போனதுதான் எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய தண்டனை.

“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க!”

நினைச்சுப் பார்த்தா எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு. என்னோட சேர்ந்து திருடின ஒருத்தன், இப்ப கட்சியில சேர்ந்து கவுன்சிலர் ஆயிட்டான். இன்னும் சிலர் ஏதேதோ தொழில் ஆரம்பிச்சு செட்டில் ஆகிட்டாங்க. கொஞ்ச பேரு போய்ச்சேர்ந்துட்டாங்க. நான் எல்லாத் தையும் இழந்து இப்படி அநாதையா நிக்கிறேன். தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகிருச்சு. பக்கத்துலதான் குடியிருக்கு. அது என்கிட்ட பேசறது கிடையாது. தம்பியோடவும் பேச்சுவார்த்தை இல்லை. எனக்குன்னு யாருமில்லை. தனிச்சு விடப்பட்டப்பதான் ‘ச்சீ... என்ன வாழ்க்கைடா இது’னு தோணுச்சு. அப்படியே எல்லாத்தையும் விட்டு விலகிட்டேன். பொழப்புக்கு என்ன பண்றதுனு தெரியாமல் தவிச்சப்போ எஸ்.ஐ முருகசாமி ஐயாதான் 5,000 ரூபாய் செலவு செஞ்சு இந்தப் பொட்டிக்கடையை வெச்சுக்கொடுத்து, பொழைச்சுக்கோன்னார். இப்போ, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. இந்த ஒரு வருஷமாதான் நிம்மதின்னா என்னானு தெரியுது. தினமும் 300 ரூபாய்க்குக் குறைவில்லாம வியாபாரம் ஆவுது. சிக்கனமா வயித்த நிறைச்சுக்கிட்டு இங்கயே படுத்துக்குவேன். என் அம்மா இதைப் பார்த்துட்டு சாகாமப் போச்சுங்கிற ஒரே குறைதான் மனசை அறுக்குது!’’ என்று முடித்தவரின் குரலில் ஒட்டியிருந்த குற்ற உணர்வு கடைசிவரை உதிரவே இல்லை.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.விக்னேஷ்வரன்