அலசல்
Published:Updated:

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

சுற்றிச் சுழன்று சூடு கிளப்பிக்கொண்டி ருக்கிறது நிர்மலாதேவி விவகாரம். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என விசாரணை வளையம் விரிந்துகொண்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை என இரண்டுமே சூடாகவும் ஸ்பீடாகவும் நடக்கின்றன.

சி.பி.சி.ஐ.டி விசாரணை

எஸ்.பி மகேஸ்வரி தலைமை யில் இரண்டு டி.எஸ்.பி-க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் கொண்ட டீம் ஒரே நேரத்தில் பல இடங்களில் விசாரணையை நடத்தி வருகிறது. ஏப்ரல் 20-ம் தேதி நிர்மலாதேவியை ஐந்து நாள்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க விருதுநகருக்குக் கூட்டிவந்த சி.பி.சி.ஐ.டி-யினர், கொஞ்சம்கூடத் தாமதப் படுத்தாமல் விசாரிக்கத் தொடங்கினர். போலீஸ் விசாரணைபோல் இருக்கும் என நினைத்த நிர்மலாவுக்குப் பெரும் ஏமாற்றம். இங்கு ட்ரீட்மென்ட் வேறு மாதிரி இருந்துள்ளது. நான்கு மாணவிகள் தவிர்த்து இதற்கு முன்பு எத்தனை மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியுள்ளார், எத்தனை மாணவி களைத் தன் நோக்கத்துக்குப் பயன் படுத்தியுள்ளார், கவர்னர் மாளிகை யிலும் காமராசர் பல்கலைக் கழகத்திலும் யார் யாரிடம் நெருக்கம்... எனக் கேள்விகளை அடுக்கியுள்ளனர். நிர்மலா முதலில் மறுக்க, உடனே அவரது செல்போன்களின் கால் லிஸ்ட்டை எடுத்துக்காட்டி உண்மையை வரவழைத்துள்ளனர்.

அதேநாளில் காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையாவிடம், அவர் அறையில் வைத்தே நீண்டநேரம் விசாரணை நடத்தினர். அந்த அறையைச் சோதனையிட்டு சில ஆவணங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாவின் வீட்டை இன்ஸ்பெக்டர் ஷாஜிதா தலைமையிலான டீம் 21-ம் தேதி சோதனையிட்டது. கம்ப்யூட்டர், சி.டி-க்கள், போட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், பர்சனல் டைரி என ஒன்றுவிடாமல் எடுத்துக்கொண்டு, அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். பிறகு, நிர்மலாதேவியின் தம்பி ரவியையும் மாமனார் பாண்டியனையும் அழைத்து விசாரித்தனர். கம்ப்யூட்டரில் நிர்மலாவால் அழிக்கப்பட்ட பல டேட்டாக்களை சி.பி.சி.ஐ.டி-யினர் ரெக்கவரி சாஃப்ட்வேர் போட்டு எடுத்ததில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம். சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்களும் உள்ளனவாம்.

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

தலைமறைவான நண்பர்கள்!

‘தான் இப்படிப் பேசியதற்குப் பல்கலைக்கழக நண்பர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர்தான் காரணம்’ என நிர்மலாதேவி கூறிய நிலையில், அந்த நண்பர்கள் செல்போனை ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகினர். அவர்களை விசாரணைக்குக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்தது போலீஸ்.  ஏப்ரல் 23-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு  வந்தபோது, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.

22-ம் தேதி நடத்திய விசாரணையில், ‘இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலருக்குத் தொடர்பு உண்டு’ எனக் கூறிய நிர்மலாதேவி, அவர்களின் பெயர் விவரங்களைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. நிர்மலாதேவியுடன் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியையிடம் விசாரித்தனர். கரூர் ரயில்வேயில் பணியாற்றும் நிர்மலாதேவியின் நண்பர்களான திவான், திவாகர் ஆகியோரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

சந்தானம் விசாரணையும் சர்ச்சைகளும்!


விசாரணைக்குழு அதிகாரி சந்தானம், ஏப்ரல் 19-ம் தேதி மதுரைக்கு வந்தவுடன் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் சர்க்யூட் ஹவுஸுக்கு வந்துவிட்டனர். சந்தானத்துக்குத் துணையாக விசாரணை செய்ய தெரசா பல்கலைக்கழகப் பேராசிரியர் கமலியும், வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் தியாகேஸ்வரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

அன்று இரவே அருப்புக்கோட்டை சென்ற சந்தானம் குழு, தேவாங்கர் கல்லூரியில் 20-ம் தேதி காலை விசாரணையைத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும் அவர்களின் பெற்றோருடன் காரில் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆடியோவில் நிர்மலா குறிப்பிடும் கணிதத் துறைத் தலைவர் நாகராஜ் உள்பட மற்ற ஆசிரியர்களும் விசாரிக் கப்பட்டனர். பொது மக்கள் சார்பில் ஒருவர் வந்து, கல்லூரியில் பல முறைகேடுகள் நடப்பதாகவும், நிர்வாகி கள் ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்வதாகவும் புகார் தந்தார்.

ஏப்ரல் 21-ம் தேதி, காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரணையைத் தொடங்கினார் சந்தானம். அங்குள்ள விருந்தினர் விடுதியில் பதிவாளர் சின்னையா உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் என 14 பேரிடம் விசாரணை நடத்தினார். பலரும் மழுப்பலாக விளக்கம் கொடுத் துள்ளனர். அதில் கூடுதல் தேர்வாணை யர் ராஜராஜன் மட்டும், நிர்மலாதேவி இங்கு வந்து தங்கியதற்கும் அவர் தொலைநிலைக்கல்வி தேர்வுத்தாள் களைத் திருத்தியதற்கும் ஆவணங்க ளைக் கொடுத்துள்ளார். ‘நிர்மலா தேவிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை’ என்ற துணைவேந்தர் தரப்புக்கு இது பெரிய ஷாக்.

சந்தானத்தின் விசாரணைக் குழு பயணம் செய்ய காமராசர் பல்கலைக்கழகம் வாகனம் வழங்கியுள்ளது. ‘குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழகமே விசாரணைக் குழுவுக்கு உதவி செய்வது சரியா?’ என, சந்தானத்திடம் கேட்ட தற்கு, ‘‘அது ஒன்றும் தவறில்லை’’ என்றார். சந்தானம் குழு விசாரணை தொடர்பாக முறைப்படி அரசாணை வெளியிடப்படவில்லை. அதனால், ‘இந்த விசாரணைக்கு அரசு அங்கீகாரம் உள்ளதா, இது கவர்னருக்காகத் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் விசாரணையா, சி.பி.சி.ஐ.டி கஸ்டடியில் இருக்கும் நிர்மலாதேவியை சந்தித்து விசாரிக்க அவருக்கு உரிமை உள்ளதா’ என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

துணைவேந்தரின் சந்தேக நடவடிக்கைகள்!

துணைவேந்தர் செல்லத்துரை, இந்தச் சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பொன்னான மத்திய அமைச்சரிடமும் அன்பான மாநில அமைச்சரிடமும் முறையிட்டுள்ளாராம். பேராசிரியர் சீனிவாசன் கொலை முயற்சி வழக்கிலி ருந்து செல்லத்துரை பெயரை மதுரை  போலீஸ் இப்போதுதான் நீக்கியது. இந்த நிலையில், நிர்மலாதேவி விவகாரம் செல்லத்துரையை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. ‘விசாரணைக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்போம், எங்களிடமுள்ள ஆவணங்கள், வீடியோ பதிவுகளைக் கொடுப்போம்’ என்று கூறிக் கொண்டி ருந்தவரின் பேச்சில், இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது. ‘‘துணைவேந்தர் பதவி கிடைக்காதவர்கள் பொறாமையால் செய்த வேலை இது’’ என்று அவர் பேசி வருகிறார்.

‘நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டனை பெற வேண்டும்’ என்ற உறுதியுடன் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், மூட்டா உள்பட பல ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கூட்டியக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளன. இது துணைவேந்தர் செல்லத்துரைக்கு கிலியை ஏற்படுத்தியதால், தனக்கு ஆதரவான ஆசிரியர்களை வைத்து, ‘நிர்மலாதேவிக்கும் பல்கலைக்கும் சம்பந்தமில்லை, பல்கலைக்கழக ஆசிரியர்களை இழிவுபடுத்து கிறார்கள். அதனால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிக்கைவிட வைத்தார். அப்படி அறிக்கைவிட்ட கலைச்செல்வன் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியது. அப்போது, நிர்மலாதேவி விடுதியில் தங்கியதை ஒப்புக்கொண்டவர், ஒன்பது நாள்கள் அவர் தங்கியதற்குச் செலுத்திய பில்லையும் கொடுத்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!

விவாகரத்து வழக்கு!

நிர்மலாதேவியின் கணவர் சரவண பாண்டி, நகராட்சி ஒப்பந்ததாரர். அவருடன் சில காலம் வரை அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கும் சென்று வந்துள்ளார் நிர்மலா தேவி. அங்கும் யார் பெயரையாவது சொல்லி முறைகேட்டில் ஈடுபட்டாரா என்று அங்குள்ள அலுவலர்களிடம் விசாரித்து வருகிறார்கள். நிர்மலாதேவியின் நடவடிக்கை பிடிக்காமல் சில வருடங்க ளுக்குமுன் சரவணபாண்டி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவரைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தனர். தற்போது, மீண்டும் அவர் விவகாரத்துக்கு மனு செய்திருக்கிறார்.

தேவாங்கர் கல்லூரியின் தேர்வுக் கட்டுப் பாட்டுத் துறை அலுவலராக இருந்த இசக்கிதுரை, பாடத்திட்டக்குழுத் தலைவர் பூவை ஆகியோர் தங்கள் கூடுதல் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலாதேவி சார்பில் ஆரம்பத்தில் ஆஜரான பாலசுப்ரமணியன், இரண்டு நாள்கள் கழித்து வழக்கிலிருந்து விலகினார். இந்த நிலையில், நிர்மலாதேவியை நான்கு வழக்கறிஞர்கள் சந்தித்து, இந்த வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்தனர். அவர்களில் மணிமாறன் என்பவரை நிர்மலாதேவி தேர்வு செய்துள்ளார்.

எப்படிப் போகும் விசாரணை?

நிர்மலாதேவியின் நண்பர்களான பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி சொல்கிற தகவல்களை வைத்தே இந்த வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று சொல்லப்படுகிறது. கவர்னர் மாளிகையை எந்தவகையிலும் இழுத்துவிடாமல் காப்பாற்றும் வகையில் சந்தானம் விசாரணையும், கவர்னர் மாளிகைத் தொடர்பை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் சி.பி.சி.ஐ.டி விசாரணையும் விரைந்துகொண்டிருக்கின்றன.

- செ.சல்மான், அருண் சின்னதுரை
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வி.சதீஷ்குமார், ஈ.ஜெ.நந்தகுமார்