அலசல்
Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு!

“அதாவது கண்ணுங்களா!” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு!

ஜான்ஸி ராஜா

ரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம். அருப்புக்கோட்டை நிர்மலாதேவியின் லட்சியம், பல்கலைக்கழக உயர் பதவியை அடைவது. அதற்காகத்தான், ஆட்சியின் உயர்மட்டம் வரை நாடிப்போனார். தன்னிடம் படிக்கவந்த மாணவிகளைத் தவறான வழிக்குத் திருப்ப முயன்றார். நிர்மலாதேவிகள் கல்வி நிலையங்களில் மட்டுமல்ல... வேறு பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் டெக்னிக்குகள், வி.ஐ.பி-க்களை வளைக்கும் தந்திரம், கவர்ந்திழுக்கும் வசீகரம்... இப்படி வித்தியாசமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவே இந்தக் குறுந்தொடர். சில அடல்ஸ் ஒன்லி கேரக்டர்களை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.

வாசகர்களே... உங்கள் பகுதியிலும் ஒரு நிர்மலாதேவி இருப்பார்! கவனமாக இருக்க வேண்டியது நாம்தான். அவர்களிடமிருந்து விலகியிருக்க இந்தத் தொடர் உதவும்!

‘‘எ
ன்ன கண்ணு... ஏன் சோகமா இருக்கே? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. உன்னை ஓஹோன்னு கொண்டு வர்றது என்னோட பொறுப்பு. வாழப்போறது ஒரு தடவைதான் கண்ணு. சூதனமா பொழைச்சுக்கோணும்.’’

சந்திக்கும் மாணவிகளிடம் இப்படித்தான் ஆரம்பிப்பார் அந்தப் பேராசிரியை. கீதமாக இசைக்கும் குரல். ஐம்பதிலும் ஆசை வரும் என்கிற பாடலுக்குப் பொருத்தமானவர். ‘ஏங்கண்ணு... என்ன கண்ணு’ எனப் பேசுவதை வைத்தே, தமிழகத்தின் மேற்கு மண்டலவாசி என்பது புரிந்திருக்கும். ‘உழவு’க்கு வந்தனம் செய்து பலமுறை ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் வெளிநாடுகளுக்குப் போய் வந்தவர்.

தன் துறையில் அவர் திறமைசாலி. நன்றாக கார் ஓட்டுவார். எங்கு செல்வதாக இருந்தாலும், விமானப்பயணம்தான் இவரின் முதல் சாய்ஸ். அதற்கு ஏற்ற வசதியுள்ள குடும்பம்தான். விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர். இப்போதும் ஓட்டப்பந்தயம் வைத்தால், அவர் வயதிலிருக்கும் எவரும் அவரை ஜெயிக்க முடியாது. ஐம்பதைத் தாண்டிய வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். ‘‘உங்களைப் பார்க்கிற யாரும் உங்க வயசைக் கணிக்க முடியாது’’ என்று பலரும் இவரிடம் வழிந்து நிற்பார்கள். தன் தனிப்பட்ட திறமைகளைத் தாண்டி, இந்த வழிசல்கள்தான் தன்னை உயர்த்தும் என இவர் நம்பியதுதான் பலருக்கு சிக்கல்களை உருவாக்கியது.

“அதாவது கண்ணுங்களா!” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு!

வி.ஐ.பி-க்கள் யாராக இருந்தாலும், தொட்டுத்தான் பேசுவார். தன்னை அவர்கள் தொட்டுப் பேசவும் அனுமதிப்பார். கையைத் தொடுவது, தோளைத் தொடுவது என்றில்லை... எங்கே வேண்டுமானாலும் தன்னைத் தொட்டுப் பேச உரிமை கொடுப்பார். ‘‘இதையெல்லாம் நான் தப்பா எடுத்துக்க மாட்டேனுங்க’’ என்று சொல்லி கிறக்கமாகச் சிரிப்பார். கட்டிப்பிடி ட்ரீட்மென்டிலும் கில்லாடி. தன்னுடன் அலைவரிசையில் இணைந்துபோகிறவர்களிடம் மணிக்கணக்கில் பேசுவார். தொட்டுத் தொட்டுப் பேசும் இந்த உரையாடல், எல்லா விஷயங்களையும் தொட்டுப் போகும். இந்தப் பேச்சில் உருகிப் போகிற எவரும், இவருக்காக எதையும் செய்ய ரெடி.

அம்மணி பணிபுரியும் நிறுவனத்தில் உயர்பதவிக்கு எந்த அதிகாரி வந்தாலும், இவரின் தயவில்லாமல் செயல்பட முடியாது. அரசிடமிருந்து நிதி வேண்டும் என்றாலும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு உதவி வாங்க வேண்டும் என்றாலும், இந்தப் பேராசிரியையைத் தான் முன்னால் நிறுத்துவார்கள். உற்சாகமாக அதைச் செய்யும் இந்த அம்மணி, அப்படியே தன் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வார். இதனாலேயே மேலிடத்திலிருந்து அங்கு வருபவர்கள், உயர் அதிகாரியைத் தேட மாட்டார்கள்; இந்த அம்மணியைத்தான் முதலில் தேடுவார்கள். 

வெளிநாடுகளிலிருந்து ஆராய்ச்சிக்கு வருகிறவர்களை உபசரிப்பதில் தனிக்கவனம் செலுத்துவார். அவர்களை உல்லாசச் சுற்றுலா அழைத்துச் செல்வார். வெளிநாடு - நம்மூர் கல்வி கலாசாரப் பரிவர்த்தனை என்று சொல்லிக் கொள்வார். தன் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய பெண்களைக் கொண்ட ஒரு குரூப் வைத்திருக்கிறார். தற்காலிகப் பணியில் இருக்கும் பெண்கள், ஆராய்ச்சி செய்பவர்கள், மாணவிகள் எனப் பலரும் இந்த குரூப்பில் உண்டு. ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போனா முன்னுக்கு வந்துடலாம் கண்ணுங்களா!’ என்பது அவர்களுக்கு இவர் சொல்லும் தாரக மந்திரம். வரும் விருந்தினர்களே இந்தப் பெண்களில் சிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். உடனே எல்லோரையும் அழைத்துக்கொண்டு கூர்க், மைசூர் என இன்பச் சுற்றுலா போவார்.

உல்லாச சுற்றுலாத்தலங்களில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகைகள், இவரைப் பார்த்ததும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும். விருந்தினர் களுக்கு அங்கே உபசரிப்புகள் தடபுடலாக நடக்கும். விருந்தினர் களின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிற இளம்பெண்களுக்கு தங்க பிஸ்கட்டுகளைத் தூக்கிப் போடுவார். இவருக்கு ‘பிஸ்கட் ராணி’ என்கிற செல்லப்பெயர் உண்டு.

அந்தப் பெண்மணி சொடக்கு போட்டால்... முன்னால் வந்து போஸ் கொடுக்க கேரளத்து இளம்சிட்டுகள் தயாராக நிற்பார்கள். ‘‘உங்க குரூப்ல இருக்கற ரெகுலர் பெண்கள் வேண்டாம். வெரைட்டி வேண்டும்’’ என எதிர்பார்க்கிற நபர்களுக்கு இவர்கள் உபசரிப்பு செய்வார்கள். இப்படித்தான் இஸ்‌ரேல் நாட்டிலிருந்து வந்திருந்த சொட்டுநீர்ப் பாசன விவசாயக்கருவி நிறுவனத்தினர், இவர்களின் அன்பு உபசரிப்பில் திக்குமுக்காடிப் போய், கேட்ட நிதியைவிடக் கூடுதலாக அள்ளிக்கொடுத்துவிட்டுப் போனார்கள்.

சமீபத்தில் அம்மணியின் பண்ணை வீட்டில் நடந்த நிகழ்ச்சி இது...

மாலையே அவருடைய பண்ணை வீடு விருந்துக்குத் தயாரானது. ‘நாட்டுக்கோழி விருந்து’ என்றதும் அவருடைய வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லோருமே குஷியாகிவிட்டார்கள். ‘இன்று பெரிய ஆபீஸர் வர்றார்’ என்று அர்த்தம். நாட்டுக்கோழியில் விதவிதமான அயிட்டங்களைச் சமைத்தார்கள். தலைவாழை இலையை வெட்டிவந்து டைனிங் டேபிளில் வைத்தார்கள்.

அதிகாரி கோட்-சூட்டில் கெத்தாக வந்து இறங்கினார். ‘‘நம்ம வீட்டுக்கு வர இப்பத்தான் வழி தெரிஞ்சுதா உங்களுக்கு?’’ என ஒரு செல்லக் கோபத்துடன் பாந்தமாக அணைத்து வீட்டுக்குள் அழைத்து வந்தார் அம்மணி.

அதிகாரி கொஞ்சம் நெளிந்து அசடு வழிய சிரித்தார். ‘‘என்னமோ டெல்லி கான்பரன்ஸுக்குப் போகிறாப்ல எதுக்கு கோட்? இங்க வந்தா எல்லாருக்கும் பட்டு வேட்டி பட்டு சட்டைதான்...’’  என கிறக்கத்துடன் சொல்லி, ‘‘கிரிஜா கண்ணு’’ எனக் கூப்பிட்டார். வருகிற வி.ஐ.பி-யை அலங்கரிப்பதற்காகவே நியமிக்கப்பட்டவர் கிரிஜா. அவர் ஓடிவந்து நிற்க, ‘‘சாருக்கு அந்த வேட்டி சட்டை கொடும்மா’’ என வழிகாட்டினார்.

‘‘இருக்கட்டும்... பரவால்ல’’ என்றபடியே கிரிஜாவின் பின்னால் நடந்தார் அந்த அதிகாரி.

வேட்டி அலங்காரம் முடிந்து வந்து அமர்ந்ததும் விருந்து உபசாரம். பேச்சும் தொடங்கும்.

“அதாவது கண்ணுங்களா!” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு!

‘‘பொண்ணுக்கும் ஒரு பக்கம் அலங்காரம் நடக்குது. அப்படியே கல்யாணப் பொண்ணுமாதிரி ரெடியாகி வருவா’’ என இவர் சொன்னதும், ‘‘‘எதுக்குங்க இதெல்லாம்’’ என ஜொள்ளியபடி நெளிந்தார் அவர்.

இதுதான் பிஸ்கெட் ராணியின் அப்ரோச். வி.ஐ.பி-க்கள் முதலில் வந்து சேர்வார்கள். பெரும்பாலும் மாலையிலேயே வந்து விடுவார்கள். இளம்சிட்டுகள் இரவில் வருவார்கள். ஒருபோதும் ஒரே நேரத்தில் இருவரும் வருவதை விரும்ப மாட்டார். மாட்டிக்கொள்ள வழியிருக்காது என்பது ஒரு காரணம். எதிர்பார்ப்பை எகிற வைப்பது இன்னொரு காரணம். சிட்டுகளுக்கு மணப்பெண் போலவும், வி.ஐ.பி-க்களுக்குப் பட்டு ஜரிகை சகிதம் புதுமாப்பிள்ளை அலங்கரிப்பு நடக்கும். மல்லிகை மணக்கும். சரக்குப் பிரியர்களுக்கு அதற்கான ஏற்பாடும் நடக்கும். பிறகு, அறைக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நள்ளிரவே கார்கள் எல்லாம் கிளம்பிவிடும். இரவில் நடந்த நாட்டுக்கோழி விருந்தின் தடயமே காலையில் இருக்காது.

பிஸ்கட் ராணியின் ஒரே லட்சியம்... உயர்கல்வித் துறையில் உச்ச பதவியை அடைவதுதான். அதற்கு எந்த வி.ஐ.பி-யைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்று முதலில் லிஸ்ட் ரெடி செய்வார். அவர்களில் யார் யார் ‘சபலிஸ்ட்’கள் என்பதை ஈஸியாகக் கண்டுபிடித்துவிடுவார். வி.ஐ.பி-க்களைத் தன் பார்வையில் வசியப்படுத்தும் நோக்கு வர்மம் தெரிந்தவர். இவரின் உபசரிப்புக்காகவே அடிக்கடி இங்கு இன்ஸ்பெக்‌ஷன் வரும் அதிகாரிகள் உண்டு.

இந்த அம்மணிக்கும் ஒரு வில்லன் உண்டு. அவர், கல்வித்துறையின் உயர் பதவியில் இருந்தார். பிஸ்கட் ராணியின் வண்டவாளங்களைத் தெரிந்துகொண்டு, அவரை வெகுதூரத்துக்குத் தூக்கியடித்தார். ஆனாலும், ‘விரைவில் முக்கியப் பதவியைப் பிடிப்பேன்’ என்று அவர் சபதம்  எடுத்துள்ள இந்த அம்மணியின் அந்தரங்க கலெக்‌ஷனில் இருக்கும் பெரும்பாலான ஆடியோக்களில், வி.ஐ.பி-க்களின் அசடுவழியல்கள் அதிகம் இருக்கிறது. தனக்கு வில்லனாகச் செயல்படும் அந்த உயரதிகாரி, ஒரு பெண்களிடம் குழைந்துகுழைந்து பேசிய ஆடியோக்களை  ரகசியமாகச் சேகரிக்கிறார். ‘‘நேரம் வரும்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’’ என்றும் சொல்லிவருகிறார் அம்மணி.

விரைவில் தமிழகமே அதைக் கேட்டு பரபரப்பில் ஆழ்ந்தால் ஆச்சர்யமில்லை!

(அடுத்து யார்?)