அலசல்
Published:Updated:

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

களிமண் தெரியும் அளவுக்கு சுரண்டப்பட்ட காவிரி

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

ணல் கொள்ளை என்றதும் உங்கள் மனத்திரையில், அசுர வேகத்தில் லாரிகள் வரிசையாக ஓடும். ஆனால், கரூர் மாவட்டத்தில் இப்போது மணல் மாஃபியாக்கள் வேறு வழிகளுக்கு மாறி விட்டார்கள். டிராக்டர் முதல் டூவீலர் வரை தங்களுக்குத் தெரிந்த பிற எல்லா வழிகளிலும் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் இவர்கள். இந்தத் தறிகெட்ட கொள்ளையில் காவிரி நதி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறது. 

‘‘இந்தப் பகுதியில் அடுத்தடுத்து குவாரிகளைத் திறந்து மணல் அள்ளியதால், காவிரி ஆற்றுப் படுகையில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்குக் கீழே போய்விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை 10 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்துவந்தது. கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள சுமார் பல லட்சம் மக்களின் தாகத்தைத் தணிக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு இந்தத் தண்ணீர் தான் ஆதாரமாக விளங்கியது. ஆனால், இந்த வருடம் எங்குமே காவிரியிலிருந்து குடிநீர் விநியோகம் சரியாக நடக்கவில்லை. பல அடி ஆழத்துக்கு மணல் அள்ளியதும், இன்னும் அள்ளிக்கொண்டிருப்பதுமே இதற்குக் காரணம். அதனால், இங்கிருக்கும் இரு குவாரிகளையும் அரசு நடத்த அனுமதிக்கக் கூடாது. மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராடும் அமைப்புகள், காவிரி மணலை அள்ளிப் பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்களை எதிர்த்தும் போராட்டம் நடத்த வேண்டும்’’ என எச்சரிக்கிறார் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்மா காமராஜன்.

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

பள்ளி வாகனத்தில் கொள்ளை!

ஸ்பாட் விசிட் அடித்து, காவிரி நிலவரத்தைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினோம். முதலில், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள நஞ்சை புகழூருக்குச் சென்றோம். நான்கைந்து ஆண்களும் பெண்களும் காவிரி ஆற்றில் மணலை அள்ளிப் பெரியப் பெரிய சாக்குகளில் கட்டி, கரையேற்றினார்கள். அப்போது, ஒரு பள்ளி வாகனம் அங்கே வந்து நின்றது. ‘மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்’ என எழுதப்பட்டிருந்த அந்த வாகனத்தில், அவர்கள் மணல் மூட்டைகளை ஏற்ற... நாம் அதிர்ந்து போனோம். பள்ளி நிர்வாகம் தங்களது கட்டடப் பணிகளுக்காக இப்படி பட்டப்பகலிலேயே பள்ளி வாகனத்தில் மணலைக் கடத்தியது.

அடுத்த காட்சி, நமக்கு இன்னும் அதிர்ச்சி தந்தது. காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள அனிச்சம் பாளையம் கரையை ஒட்டிக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டர்களில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது ஒரு கும்பல். ‘‘இரவு நேரத்தில் ஆற்றில் மணலை அள்ளி, கரையில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். அதைப் பகலில் டிராக்டர்களில் கடத்துகிறார்கள். ஆளும்கட்சிப் புள்ளி ஒருவரே இப்படி மணல் கடத்தலில் ஈடுபடுவதால், அச்சத்தில் அதை யாரும் எதிர்ப்பதில்லை’’ என்றார் அங்கே மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர்.

ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்!


அரசு மணல் குவாரி இயங்கி, களிமண் தெரியும் அளவுக்கு மணல் சுரண்டப்பட்ட கடம்பன்குறிச்சிக்குச் சென்றோம். அங்கே மணல் அள்ளுவதற்காகக் காவிரி ஆற்றுக்குள் போட்டிருந்த சாலைகள் இன்னும் அகற்றப் படவில்லை. மணலை சாக்குகளில் அள்ளிக் கட்டிக்கொண்டிருந்தது ஒரு கும்பல். பக்கத்தில், மணல் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மூட்டைகள் இருந்தன. ‘‘ஏற்கெனவே இந்த மணல் குவாரியில் விதிகளைமீறி மணல் அள்ளிய இதே ஊரைச் சேர்ந்த புள்ளி ஒருவர்தான், இப்படி மணலை அள்ளி ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்’’ என்றார் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

ஆட்டம் காணுது அணை!

முன்பு மணல் குவாரி இயங்கிவந்த கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மாயனூருக்குச் சென்றோம். அங்கே 2015-ம் ஆண்டு அணை கட்டி, அந்தப் பக்கம் உள்ள திருச்சி மாவட்ட ஊர்களுக்குப் போகப் பாலமும் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் கீழ்ப்பக்கம் மணல் குவாரி ஏற்கெனவே இயங்கி வந்தது. அங்கே களிமண் வரை மணலைச் சுரண்டி எடுத்ததால், பல இடங்களில் பாறைகள் தெரிந்தன. 20 அடி ஆழம் வரைக்கும் மணல் அள்ளப்பட்டுள்ளதால், மாயனூர் அணையின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் அளவுக்கு இருக்கிறது. காவிரியின் நடுவில் முன்பு குவாரிக்காகப் போடப்பட்ட சாலை இன்னும் அகற்றப்படவில்லை. மணல் கடத்தலுக்கு இது வசதியாக இருக்கிறது.

அணையின் மேற்குப் பக்கம் பொக்லைன் இயந்திரங்கள் இரண்டும், லாரிகள் இரண்டும் இயங்கிக்கொண்டிருந்தன. என்னவென்று விசாரித்தால், ‘‘இப்போது புதிதாக குவாரிகளுக்கு டெண்டர் விட்டிருக்காங்க. கரூர் மாவட்டத்தில் இங்கும், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள மணத்தட்டை என்ற இடத்திலும் மணல் குவாரி அமைக்க முடிவு பண்ணி இருக்காங்க. அதற்காக மராமத்து வேலை நடக்குது. இங்கேயும் மணல் குவாரி வந்தா, மாயனூர் அணை கண்டிப்பாகச் சிதைந்துவிடும்” என்றார்கள் அந்தப் பகுதி விவசாயிகள். காவிரி ஆற்றின் நடுவில் தீவு போல் எருக்கஞ்செடிகளும், சீமைக் கருவேலம் மரங்களும் முளைத்துள்ளன. இவை, கடும் வறட்சியின் அடையாளங்கள். காவிரி என்ன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

மணல் குவாரி வேண்டாம்!

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவரான அக்பரிடம் பேசினோம்.

‘‘ஏற்கெனவே, கரூர் மாவட்டத்தில் தோட்டக்குறிச்சி, கடம்பன்குறிச்சி, நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம், நெரூர், மாயனூர், சிந்தலவாடி, பெட்டவாய்த்தலை என எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை அரசு நடத்தியது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக நாங்கள் கேட்டபோது, ‘கரூரில் மாயனூர், சிந்தலவாடி என இரண்டு இடங்களில்தான் மணல் குவாரிகள் இயங்குகின்றன’ என்று சொன்னார்கள். அப்படியானால், மீதி மணல் குவாரிகளை அனுமதி இல்லாமல்தான் நடத்தியுள்ளனர். விதிமுறைகளை மீறி இந்த மணல் குவாரிகளில் 20 அடி ஆழத்துக்கும் மேலாக, பல கிலோ மீட்டர் நீளத்துக்கு மணலை அள்ளி, ஆளும்கட்சிப் புள்ளிகள் பணம் குவித்தார்கள். அப்படி அள்ளியதால், தேசிய நெடுஞ்சாலை 44-ல் காவிரியில் உள்ள பழைய பாலத்திலும், புதிய பாலத்திலும் தாங்கும் தூண்கள் 15 அடிக்கும் கீழே தெரிய ஆரம்பித்துவிட்டன. அந்தப் பாலங்களின் அஸ்திவாரமே ஆடும் நிலையில் உள்ளது. கரூர் முதல் திருச்சி வரை மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கினோம். அந்த ஆணையை ரத்துசெய்து, புதிதாகக் கரூரில் இரண்டு மணல் குவாரிகளை அமைக்க இப்போது டெண்டர் விட்டுள்ளனர். இன்னொரு பக்கம், டிராக்டர் களிலும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்தலைக் கரூர் மாவட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகள் அரங்கேற்றி வருகிறார்கள். இதில் புதிதாக இரண்டு மணல் குவாரிகள் வந்தால், ஏற்கெனவே வறண்டு கிடக்கும் காவிரி நிரந்தரப் பாலைவனமாகிவிடும்’’ என்றார்.

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

கீழே இறங்கிய ஆறு!

காவிரி ஆறு பாதுகாப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் விஜயன், “பல அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டதால், பாலங்கள் பலவீனம் அடைந்துவிட்டன. மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய ஒன்றியங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குக் காவிரியிலிருந்து பிரிந்து பாசனம் தரும் கிளை வாய்க்கால்களில், தண்ணீர் பாய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நஞ்சை புகழூரிலிருந்து பாசனத்துக்குப் புகழூர் வாய்க்கால் பிரிகிறது. இந்த இடத்தில் காவிரி ஆற்றில் 15 அடி ஆழம்வரை மணல் அள்ளியதால், புகழூர் வாய்க்காலின் உயரம் ஆற்றின் தரைமட்டத்தைவிட 15 அடி உயரே போய்விட்டது. இதனால், இந்த வாய்க்காலில் இனி காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் ஏறிப் பாய்வது கடினம்தான். இந்த வாய்க்காலை நம்பியிருக்கும் விவசாயிகள், இனி விவசாயத்தையே மறந்துவிட வேண்டியதுதான்.

இதேபோன்ற நிலைமைதான், ஜோடார் பாளையத்திலிருந்து பிரியும் ராஜ வாய்க்காலிலும். இது காவிரி ஆற்றிலிருந்து பிரியும் இடத்திலும் ஆற்றில் பல அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டு, அந்த வாய்க்கால் தண்ணீர் ஏறிப் பாயமுடியாத அளவுக்கு உயரமாகிவிட்டது. இதனால் இந்த வாய்க்காலை, தமிழ்நாடு அரசின் காகிதத் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை கழிவுநீரைத் திறந்துவிடும் வாய்க்காலாகப் பயன்படுத்தி வருகிறது’’ என்றார்.

ஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்

சி.சி.டி.வி கண்காணிப்பு!

நாம் பார்த்த காட்சிகளைக் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் முன்பாக வைத்தோம். அதற்கு, ‘‘காவிரியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள்மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மணல் கடத்தப்படும் லாரிகளையும் வாகனங்களையும் கரூர் ஆர்.டி.ஓ பிடித்து வருகிறார். நீங்கள் சொன்ன ‘மணல் திருட்டு’ விஷயங்களை வைத்து, அதிகாரிகளை முடுக்கிவிட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்கிறேன். மாயனூர், மணத்தட்டை புதிய குவாரிகளைப் பொறுத்தவரையில், அவை அறிவியல்பூர்வமான முறையில் ஆய்வுசெய்யப்பட்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் இயங்க உள்ளன. அதற்காக தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். குவாரிகளை சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்க இருக்கிறோம்’’ என்றார்.

மணல் கொள்ளை தொடர்ந்தால், மேலாண்மை வாரியம் வருவதற்கு முன்பாகக் காவிரியே இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன