அரசியல்
Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 2 - மினிஸ்டர் கோட்டா

“அதாவது கண்ணுங்களா!” - 2 - மினிஸ்டர் கோட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 2 - மினிஸ்டர் கோட்டா

ஜான்ஸி ராஜா

வள் பேச்சு ஏதோ போதை உளறல் போலத்தான் இருந்தது. மகேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. சைலஜாவா இப்படி? ப்ளஸ் டூ தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தவள். படிப்பு... படிப்பு... படிப்பு... இதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாது. அவள் எப்படி போதையில்..?

‘‘என்ன பேசுற... எனக்கு ஒண்ணுமே புரியலை. எங்க இருக்க? அதைச் சொல்லு!’’

‘‘வீட்ல.’’

‘‘என்ன சாப்பிட்ட இப்போ?’’

‘‘டூக்கமாட்ர.’’

‘‘பிராந்தி பேரா?’’

‘‘இல்ல. டூக்கமாட்ர.’’

சுரீரென உறைத்தது. ‘‘என்னது... தூக்க மாத்திரையா?’’

‘‘ஆமா.’’

உடனே போனை கட் பண்ணிவிட்டு, சைலஜாவின் அப்பாவுக்கு போன் போட்டான். ‘‘வீட்ல சைலஜா தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டு உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா. நீங்க எங்க இருக்கீங்க அங்கிள்? உடனே காப்பாத்துங்க... நான் இதோ வந்துடுவேன்.’’

பைக்கைத் திருப்பி, அவள் வீட்டுக்குப் போனபோது அவசர அவசரமாக ஹாஸ்பிடலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடிய செய்தியைச் சொன்னார்கள். அங்கே ஓடினான். ஐ.சி.யூ-வில் வைத்திருந்தார்கள். உயிருக்கு ஆபத்தில்லை.

“அதாவது கண்ணுங்களா!” - 2 - மினிஸ்டர் கோட்டா

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

சைலஜாவுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க கட் ஆஃப் 1.3 மதிப்பெண்கள் மட்டுமே குறைவாக இருந்தது. மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோதே, ‘‘படிச்சு என்ன ஆகப் போறே?’’ என யாராவது கேட்டால், பிஞ்சு மொழியில் அவள் சொல்வது, ‘‘டாக்டர் ஆகப் போறேன்’’ என்பதாகத்தான் இருக்கும். தன் வாழ்நாள் கனவு, வெறும் 1.3 மதிப்பெண்களில் நொறுங்கிச் சரிவதை நினைத்து அழுதாள். இனி என்ன ஆகும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அழுதால் மெடிக்கல் சீட் கிடைத்துவிடாது. இதுதான் விதியென்று கெமிஸ்ட்ரி படிக்க அப்ளிகேஷன் வாங்கக் கிளம்பிவிட்டாள்.

அப்ளிகேஷனோடு வீடு திரும்பியபோது, சென்னையிலிருந்து அத்தை வந்திருந்தார். தூரத்துச் சொந்தம். கொடைக்கானலைக் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்க வந்தவர், திரும்பிப் போக தட்கல் டிக்கெட்டும் ஏமாற்றியதால் ஒருநாள் தங்குவதற்காக வந்திருந்தார்.

கலைந்த கனவுக்கு மீண்டும் உருவம் கொடுத்தார் அந்த அத்தை. ‘‘நல்ல மார்க்கா இருக்கே... மெடிக்கல் போகலாமே?’’ என்றார்.

‘‘கிடைக்காது அத்தை. கட் ஆஃப் 1.3 மார்க் கம்மியாகிடுச்சு.’’

‘‘இது ஒரு மேட்டரா? மினிஸ்டர் கோட்டாவுல ஈஸியா உள்ள போயிடலாம். என் கிளாஸ்மேட் ஒருத்தி இருக்கா. இந்த ஊர்லதான் புரொஃபஸரா இருக்கா. அவளுக்கு எல்லா இடங்கள்லேயும் செல்வாக்கு உண்டு. அவ நினைச்சா நடக்காதது எதுவுமே இல்லை’’ என நம்பிக்கை கொடுத்தார் அத்தை.

அன்றைக்கே அத்தையோடும் அம்மாவோடும் அந்தக் கல்லூரிக்குப் போனாள் சைலஜா. பூட்டுக்கு பெயர்பெற்ற மாநகரில் அந்தக் கல்லூரி நல்ல பெயர் இருந்தது. கல்லூரியைவிட பிரபலம் அந்தப் பேராசிரியை. எதையும் ‘ஜெய’மாக்கிக்காட்டும் செல்வாக்கு மனுஷி. அத்தையோடு அவர் நெருக்கமாகப் பேசுவதைப் பார்த்ததும், சைலஜாவின் கனவில் ஸ்டெதஸ்கோப் மிதந்தது.

சைலஜாவின் மார்க் லிஸ்ட்டைப் பார்த்தவர், சைலஜாவையும் கண்களால் அளவெடுத்தார். ‘‘உங்க பொண்ணை டாக்டர் ஆக்குவது என் வேலை. என் தோழிக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா?’’ என்றார்.

கொஞ்ச நேரத்தில் சைலஜாவையும் அவள் அம்மாவையும் வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு, அத்தையும் அந்தப் பேராசிரியையும் அரை மணி நேரம் பேசினார்கள்.

ஒரு வாரத்தில் சென்னையிலிருந்து அத்தை அழைத்தார். சைலஜாவும் அம்மாவும் போனார்கள். அத்தை வீட்டில் அந்தப் பேராசிரியை அதற்குமுன்பாகவே வந்து காத்திருந்தார்.

அவசரமாக ரெடியானார்கள். அந்தப் பேராசிரியை யாரிடமோ நீண்ட நேரமாக போனில் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்தார். கடைசியில் போனை வைத்தவர், ‘‘மினிஸ்டர் வரச் சொல்லிட்டாரு’’ என்றார். சைலஜாவின் அத்தையிடம் கண்களால் ஜாடை காட்டினார். சைலஜாவின் அம்மா பக்கம் திரும்பிய அத்தை, ‘‘அண்ணி! நீங்க வீட்ல இருந்து சமைச்சு வெச்சிடுங்க. நானும் புரொஃபஸரும் சைலஜாவைக் கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துடறோம்’’ என்றார்.

சைலஜாவை நெருங்கிய பேராசிரியை, ‘‘நம்ம ஊர் பொண்ணு மாதிரி வராதேம்மா... சிட்டி கேர்ள் மாதிரி வா! சென்னையில மெடிக்கல் படிக்கப் போறே. அதுக்கு ஏற்றமாதிரி மாறிக்கோ’’ என்று சொல்லி மேக்கப் செய்துவிட்டார். கால் மணி நேரம் கழித்தே திருப்தியானார். அவர் அங்கே இங்கே தொட்டு மேக்கப் போட்டது சைலஜாவுக்கு சங்கடமாக இருந்தாலும், ‘டாக்டர் சீட்’ கனவில் வந்து சகித்துக்கொள்ளச் சொன்னது.

கிளம்பி டாக்ஸி பிடித்து ஏதோ ஒரு ஹோட்டல் பெயரைச் சொன்னார் பேராசிரியை. மினிஸ்டர் என்றால் வீட்டிலோ, தலைமைச் செயலகத்திலோ இல்லாமல் ஹோட்டலில் இருப்பாரா? சைலஜா சந்தேகமாகக் கேட்க, பேராசிரியை ‘உஷ்’ என உதட்டில் கைவைத்தார். டிரைவருக்கு எதுவும் தெரியக்கூடாது என சைகை செய்தார்.

ஹோட்டலில் இறங்கி ஓர் அறைக்கு அழைத்துச் சென்றனர். ஆடம்பரமான அறை. காத்திருக்கும்போது அத்தைக்கு போன் வர, ‘‘ஒரு நிமிஷம்’’ என்று சொல்லிவிட்டு வெளியில் போனார். பேராசிரியை சைலஜாவைத் தீர்க்கமாகப் பார்த்தார். ‘‘உங்க அப்பாவுக்கு பல லட்சம் செலவு வைக்காம டாக்டர் சீட் வாங்கப் போறே! மினிஸ்டர் கோட்டான்னா சும்மாவா? இப்ப மினிஸ்டர் வந்துடுவாரு. அவர் கொஞ்சம் கோபக்காரர். அவர் மனசு புரிஞ்சு நடந்துக்கோ’’ என எழுந்தார் அந்தப் பேராசிரியை.

‘‘எனக்குப் புரியலை மேடம்... நீங்களும் இருங்க!’’

‘‘சொன்னா கேளும்மா... புரிஞ்சுக்க! நான் இங்க இருக்கக்கூடாது.’’

பேராசிரியை வெளியேறும்போது, மினிஸ்டர் உள்ளே வந்தார். இருவரும் கண்களால் பேசிக்கொண்டார்கள்.

வந்த வேகத்திலேயே சட்டையைக் கழற்றினார் மினிஸ்டர். ‘‘சார்’’ எனப் பதறி எழுந்தாள் சைலஜா. ‘‘உட்காருமா...’’ பனியனைக் கழற்றினார். ‘‘எனக்கு அவசர மீட்டிங் இருக்கு அரை மணி நேரத்தில கிளம்பிடுவேன்’’ என்றபடி சைலஜாவைப் பார்த்தார் அவர்.

இரண்டு நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. வேகமாக வெளியே வந்தார் மினிஸ்டர். ‘‘என்னம்மா நினைச்சுக்கிட்டு இருக்கே? அந்தப் பொண்ணு கடிக்க வருது... ஓடிப்பிடிச்சு விளையாடுற வயசா எனக்கு? சரியா சொல்லிக் கூட்டிட்டு வர மாட்டியா? செல்லாத நோட்டுக்கு எவன் கொடுப்பான் சீட்டு?’’ என வேகமாகப் போய்விட்டார்.

உள்ளே இருந்து வெளியே வந்த சைலஜா பேயறைந்த மாதிரி இருந்தாள். அத்தை, பேராசிரியை யாரும் அவள் கண்ணில் படவில்லை. நேராக நடந்தாள். ஹோட்டலை விட்டு வெளியே வந்தாள். சென்னையில் அவளுக்கு எந்த இடமும் தெரியாது. திசை தெரியாது. அவள் பாட்டுக்கு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

சைலஜா தூக்க மாத்திரை சாப்பிட்டதன் பின்னணி இதுதான். ‘‘இதெல்லாம் சகஜம்’’ என நிர்மலாதேவி டயலாக்கை வைத்தே பல பெண்களின் வாழ்வைக் கெடுத்து இன்னமும் செல்வாக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார்  அந்தப் பேராசிரியை. அவர் ஒருவழியாக பிரின்சிபல் ஆகிவிட்டார். சைலஜா இப்போதும் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

(அடுத்தது யார்?)