அலசல்
சமூகம்
Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்!”

“அதாவது கண்ணுங்களா!” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்!”

ஜான்ஸி ராஜா

க்கத்து மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவள் லத்திகா. எம்.ஃபில் முடித்திருந்தாள். தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணி. ‘‘ தலைநகரில் அமைந்துள்ள பழம்பெருமைமிக்க அந்தப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி வாங்கிவிட்டால், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதன்பின் தம்பியின் படிப்பை நான் பார்த்துக்கொள்வேன்’’ என வீட்டில் சொல்லிக்கொண்டிருந்த லத்திகா, அதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டி ருந்தாள்.

லத்திகாவின் அறையெங்கும் சக மாணவர்களின் ‘ரெஃபரன்ஸ்’ நோட்ஸ்கள், ஜெராக்ஸ் எடுத்த புத்தகங்கள், பேப்பர்கள்தான் அதிகமாகக் கிடக்கும். பிஹெச்.டி கனவு, மாதக்கணக்கில் பல இரவுகளைக் கரைத்தது. ஒருநாள், “எல்லாம் தயாராகிவிட்டது, இந்த வாரத்தில் யூனிவர்சிட்டியில் ‘தீஸிஸ்’ சப்மிட் பண்ணப் போறேன். குரூப் ‘வைவா’ ஒன்றும் தனி ‘வைவா’ ஒன்றும் இருக்கின்றன. எல்லாமே தரோவா ஸ்டடி பண்ணி வைத்துவிட்டேன்” என அந்த நள்ளிரவு நேரத்தில் அம்மாவை அணைத்துத் துள்ளிக்குதித்தாள் லத்திகா.

எப்போதுமே ஏழு மணிக்குள் வீட்டில் ஆஜராகிவிடும் லத்திகா, மறுநாள் வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி. வரும்போதே, ‘‘ஃப்ரண்டு வீட்ல சாப்பிட்டுட்டேன், டயர்டா இருக்கும்மா. படுத்துக்கறேன், காலையில பேசிக்கலாம்’’ என்று, யார் பதிலையும் எதிர்பார்க்காமல் அறைக்குள் போய்விட்டாள்.

“அதாவது கண்ணுங்களா!” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்!”

மறுநாள் காலை 10 மணி...

லத்திகா வீடு பரபரப்பாகக் காணப்பட்டது. வீடு முழுக்க போலீஸ் தலைகள். பக்கத்து வீடுகளிலும் விசாரிப்புகள். பாதிக் கதவை மட்டும் திறந்துவைத்து, பாதி முகத்தை வெளியில் காட்டியபடி, பக்கத்து வீட்டுப் பெண்மணி சொன்னதை சப்- இன்ஸ்பெக்டர் பேப்பரில் குறித்துக்கொண்டார். ஒன்பதாவது படிக்கும் லத்திகாவின் தம்பி, ‘‘அக்கா கையில இந்தப் பேப்பர் இருந்தது’’ என்று சொல்லி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்தான். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கடுமையான வயிற்றுவலி காரணமாக இந்த முடிவை எடுத்துவிட்டேன். அம்மா, அப்பா, தம்பி என்னை மன்னித்துவிடுங்கள். குட்டி பப்பிம்மா (செல்ல நாய்க்குட்டி), நீயும் என்னை மன்னித்துவிடு’ என்று எழுதப்பட்டிருந்தது.

லத்திகாவின் போர்வையிலேயே அவள் உடலை போலீஸார் இறக்கிவைத்திருந்தனர். அப்போது, சப்- இன்ஸ்பெக்டரின் செல்போனில் யாரோ வந்தார்கள். உயர் அதிகாரியாக இருக்கக் கூடும். ‘‘ஆமா சார்... ஹேங்கிங்தான். சூஸைட் நோட் இருக்கு. வீட்லயும் கன்ஃபார்ம் பண்றாங்க. லவ் மேட்டர்லாம் இல்லை. வயிற்றுவலியாம். அப்ஜெக்‌ஷன் வர்றமாதிரி எந்த மோட்டிவும் தெரியலை சார். ஆம்புலன்ஸ் இப்ப வந்துடும். எப்படியும் போஸ்ட்மார்ட்டம் முடிக்கறதுக்கு ஈவ்னிங் ஆகிடும்’’ என்றபடி போன் இணைப்பைத் துண்டித்தார்.

அதற்குள் தகவல் கிடைத்து, சக தோழிகள், மாணவர்கள், மாணவிகள் அங்கு வந்து சேர்ந்துவிட அழுகைக்குரல்கள் மொத்தமாகி, அந்த இடத்தையே இறுக்கமாக்கின. தோழிகளில் ஒருத்தி, ‘‘நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படிப் பண்ணிட்டியே’ என்று கத்த, அந்த எஸ்.ஐ. செல்போனை எடுத்து, “ஏதோ விவகாரம் இருக்கு சார். கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க போலிருக்கிறது. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விசாரணையை முடிச்சுட்டே வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, தகவலுக்குக் காரணமான அந்தப் பெண்ணைத் தேடினார்.

அந்தப் பெண் துணிச்சலாக வந்தாள். ‘‘யெஸ் சார். எனக்கொண்ணும் பிரச்னை இல்லை. எங்கே கூப்பிட்டாலும் வந்து சாட்சி சொல்றேன். என் அப்பா போலீஸ் டிபார்ட்மென்ட்லதான் இருக்காரு. லத்திகாவும் நானும் ஒண்ணாத்தான் யு.ஜி., பி.ஜி முடிச்சோம். பிஹெச்.டி முடிச்சுட்டா, லைஃப்ல செட்டில் ஆகிடுவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, அவகிட்டே கொடுக்கறதுக்கு அஞ்சு லட்சமும் இல்லே; அவளையே கொடுக்கற அளவுக்குக் கேவலமான துணிச்சலும் இல்லே. நேற்று காலையில் பேசினபோதுகூட ‘என் திறமை மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா எல்லா டெஸ்ட்லயும் தேறிடுவேன்’னு உறுதியா சொன்னா.’’

‘‘ஈவ்னிங் பேசுனாங்களா?’’ என்றபடி அடுத்த கட்டத்துக்கு எஸ்.ஐ நகர்ந்தார்.

“ஆமா சார், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா ஓகே பண்றோம். வைவாவும் வேணாம், எதையும் சப்மிட் பண்ணவும் வேணாம்’னு சொல்லி யிருக்காங்க. கோபப்பட்டு இவ சத்தம் போட்டிருக்கா. ‘நீ இனிமேல் எங்கே போனாலும், நெகட்டிவ் ரிசல்ட்தான் வரும். உன்னால் லைஃப்ல இனிமே பிஹெச்.டி-யே பண்ண முடியாதுன்னு மிரட்டியிருக்காங்க. வெளியே வந்துட்டு எனக்குப் போன் செய்தா. ‘நீ வீட்டுக்குப் போயிடு, யார்கிட்டேயும் இது பத்திச் சொல்ல வேண்டாம். காலையில நான் வீட்டுக்கு வரேன்’னு சொன்னேன். இப்படிப் பண்ணிட்டா...’’ என்று அந்தப் பெண் அழ ஆரம்பித்துவிட்டார்.

‘‘லத்திகாவிடம் அப்படிக் கேட்டது யாருன்னு தெரியுமா?’’ எஸ்.ஐ-யின் கேள்வியில் கோபம் தூக்கலாக இருந்தது.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட அந்தப் பெண், “நீங்க நினைக்கிற மாதிரி பெரிய லெவல்ல யாரும் கேட்கலை சார். அவளைக் கமிட் பண்ணதே ஒரு ரெக்கார்டு கிளார்க்தான். அந்த லேடி கிளார்க்குக்கு இதுதான் வேலை. ‘என்னம்மா பொண்ணு நீ? செல்போனுக்கு ரீசார்ஜ் பண்றதுக்கெல்லாம் பெத்தவங்களைத் தொல்லை பண்ணுவியா? இந்த வயசுக்கு மேல நம்ம தேவையை நாமதான் பாத்துக்கணும். சிறகு முளைச்சுட்டா சிட்டுக்குருவி இரை தேடிக்குது. கண்ணைத் திறந்துட்டா நாய்க்குட்டி இரை தேடிக்குது. இந்த மனுஷப்பிள்ளைகளுக்குத்தான் கடைசி வரைக்கும் பெத்தவங்க கூடவே துணையிருக்க வேண்டியிருக்கு’ன்னு வசனம் பேசுவார்.

புதுசா கேக்கும்போது, ‘பெண்கள்லாம் சொந்தக்கால்ல நிக்கணும்’னு அறிவுரை சொல்றாப்லதான் இருக்கும். அந்தம்மா வார்த்தை களுக்கு அர்த்தம் அப்புறம்தான் விளங்கும். ‘ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்’னு மெல்ல கையைப்பிடிச்சுப் பேசுவாங்க. யூனிவர்சிட்டியில டாப் லெவல் வரைக்கும் அந்த அம்மா பேச்சைக் கேட்டுத்தான் ஆடுவாங்க. இந்த டீலிங்கை யெல்லாம் செய்யறதால, அவ்வளவு செல்வாக்கு.

லத்திகா கிட்ட அதெல்லாம் நடக்கலை. ‘இந்தப் பொண்ணு செட் ஆகும்னு நான் உள்ளே போய்த் தகவல் சொன்னாத்தான், நீ உள்ளயே போக முடியும். என்ன சொல்றே? அதெல்லாம் முடியாது, நான் ரொம்ப யோக்கியம்னு சொன்னா அஞ்சு லட்ச ரூபா கொண்டுவா. இந்த டீல் எதுவும் தேவை இல்லை’ன்னு சொல்லியிருக்கா பாவி.’’

“அந்த ரெக்கார்டு கிளார்க்கை உடனே உள்ளே தூக்கி வெச்சிடலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேம்மா” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் எஸ்.ஐ.

அவர் கூப்பிட்டபோதெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல், லத்திகாவின் தோழி ஸ்டேஷனுக்குப் போய் விசாரணைக்கு உதவினார். ‘‘ரெக்கார்டு கிளார்க்கிடம் ஸ்டேட்மென்ட் வாங்கிவிட்டோம். இன்னும் இரண்டொரு நாளில் ஹெச்.ஓ.டி-யைத் தூக்கிடலாம்’’ என்று வழக்கில் அதிக ஆர்வம் காட்டிய எஸ்.ஐ., அடுத்த நாளே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டார். இது பெரிய இடத்து விவகாரம் என அப்போதுதான் தெரிந்தது. அதன்பின் அந்த வழக்கின் ஃபைல் எங்கோ பதுங்கிவிட்டது.

லத்திகாவின் தோழி அலைந்து அலைந்து ஓய்ந்துபோனார். ஆண்டுதோறும் லத்திகா நினைவு நாளில் விரதம் இருந்து, அதன் மூலம் லத்திகாவின் ஆத்மா சாந்தியடைவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் தோழி. அந்த ரெக்கார்டு கிளார்க் இப்போது ஹெட் கிளார்க்காக உயர்ந்து, மாணவிகளுக்கு ‘வாழ்க்கைப்’ பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள். வெளியில் தெரியாத லத்திகாக்கள் எத்தனை பேரோ, தீர்ப்பைச் சொல்லப் போவதுதான் யாரோ?

(அடுத்து யார்?)