Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 5 - ‘‘சிட்டிங் ரெடி பண்ணிடலாம்...’’

“அதாவது கண்ணுங்களா!” - 5 - ‘‘சிட்டிங் ரெடி பண்ணிடலாம்...’’
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 5 - ‘‘சிட்டிங் ரெடி பண்ணிடலாம்...’’

ஜான்ஸி ராஜா

யர்கல்வித் துறையின் அதிகாரிகளே, ‘சார்... ராணி மேடம் வந்துட்டாங்களா?’ என்று கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னர் தான், உள்ளே நுழைவார்கள். ‘‘மேடம் வந்துட் டாங்கன்னா, குட்டிக்குரா பவுடர் நெடி ஒரு தூக்கு தூக்கும்ங்கறது தெரியாம இருக்காங்களே?’’ என்று சலித்துக்கொள்வார், முதல் சீட்டில் அமர்ந்திருக்கும் ஆவுடையப்பன்.

ராணி மேடம் என்ற கெத்தான அந்தக் கேரக்டரின் முழுப் பெயர் வேறாக இருந்தாலும், அவரை எல்லோரும் அழைப்பது அந்தப் பெயரில்தான். பி.காம்., டிஸ்கன்டினியூடுதான் கல்வித் தகுதி. ராணியின் வருகை குறித்து விசாரிக்கிற அனைவருக்கும் பதில் சொல்லக்கூடிய முதல் இருக்கையாகத் தன் இடம் அமைந்துவிட்டதில், ஆவுடையப் பனுக்கு ஒரு பக்கம் பேரானந்த மாகத்தான் இருந்தது. ராணியும் உள்ளே வந்ததும், “வணக்கம் மிஸ்டர் ஆவூ... என்னைத் தேடிட்டு யாராவது வந்தாங்களா?” என ஆவுடையப்பனிடம் கேட்டு விட்டுத்தான், தன் கையிலிருக்கும் அரை அடி நீளக் குடையை அவரிடம் நீட்டுவார். பிரபலமான கோயிலில் கிடைக்கும் பிரசாதம் போல அதை மிஸ்டர் ஆவூ, பவ்யமாய் வாங்கிச் சிறு சத்தமும் வராதபடி டிராயரில் வைப்பார்.

அலுவலகத்தில் ராணியின் ‘ரேங்க்’ என்ன என்பதுகூட அங்கு வேலைபார்க்கும் பலருக்குத் தெரியாது. லேட்டஸ்ட் டிசைனில் ஒரு தோள் பை, கையில் குடை... இதுதான் ராணியின் அடையாளம். உதடு நிறைய லிப்ஸ்டிக்கும் உடம்பு தெரிய வெங்காயச் சருகு சேலையுமாக அவர் உள்ளே நுழையும்போதே, தலைநகரத்தின் அந்தப் பல்கலைக்கழக அலுவலகம் பரவசமாகிவிடும்.

ராணி உள்ளே வரும்போது பின்னாலேயே வரும் ஊழியர், அர்ஜென்ட், ஆர்டினரி என்று அடையாள ரிப்பன் கட்டிய ஃபைல்களைத் தூக்கிக்கொண்டு வருவார். ராணி சொல்கிற இடத்தில் அந்த ஃபைல்களை இறக்கி வைத்துவிட்டு, ஓர் அதிகார சல்யூட்டை அடித்துவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார். இது அன்றாடம் நடக்கிற காட்சி. ராணிக்குக் கல்வி வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கு, எவரையும் மிரட்டும்; அவர் அணிந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டின் கச்சிதம், முனிவரையும் மயக்கும்.

“அதாவது கண்ணுங்களா!” - 5 - ‘‘சிட்டிங் ரெடி பண்ணிடலாம்...’’

அன்று ஆவுடையப்பனிடம் குடையை நீட்டிய ராணி, ஹாலில் அமர்ந்திருக்கும் எல்லோரையும் கண்களைச் சுழற்றிப் பார்த்தார். ஹாலின் மூலையில் அமர்ந்திருந்த ஒரு மனிதர்மீது அவர் பார்வை பிரேக் அடித்து நின்றது. “மிஸ்டர் சீத்தாராமன், கொஞ்சம் வாங்க” என்று அந்த நபருக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, அறைக்குப் போய்விட்டார். சீத்தாராமனும் அதே வேகத்தில் பின்னால் போனார்.

‘‘என்ன ஆச்சு சீத்தாராமன்? நீங்க போன் பண்ணுவீங்கன்னு நேத்து சாயங்காலத்துல இருந்து எதிர்பார்த்துட்டே இருந்தேன். ஆனா, நீங்க சைலன்ட்டா இருக்கும்போதே எங்கியோ சொதப்பல் ஆயிடுச்சுன்னு புரிஞ்சுக்கிட்டேன். சொல்லுங்க... எதுவா இருந்தாலும் நான் க்ளியர் பண்றேன். டி.டி., ஜே.டி-ன்னு நேத்து ராத்திரியிலிருந்து லைன்ல வந்துக்கிட்டே இருக்காங்க. என்ன ரிப்ளை பண்றதுன்னே தெரியலை சீத்தாராமன். நீங்கதான் சொன்னீங்க... ‘அந்த மல்லிகா கிராமத்துப் பொண்ணு. சொன்ன பேச்சைக் கேக்கும். வெளியே சொல்லாது’ன்னு. பார்வையாலேயே யாரையும் எடை போட்டுடற அனுபவசாலி நீங்க. உங்க கணக்கு தப்பாதுன்னு நம்பினது என்னோட மிஸ்டேக்தான்’’ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்ன ராணியின் செல்போன் மென்மையாக சிணுங்கியது.

‘‘இவன் வேற பிரச்னை தெரியாம இப்ப கூப்பிடறான்’’ என முணுமுணுத்தபடி போனை எடுத்து, ‘‘சார், ஆபீஸ்லதான் சார் இருக்கேன். அது விஷயமாதான் பேசிக்கிட்டிருக்கேன் சார்! இன்னைக்கு முடிஞ்சுடும் சார்... இடம் மட்டும் நான் அப்புறம் சொல்றேன் சார்’’ என ஏகப்பட்ட ‘சார்’களைப் போட்டு பேசி முடித்தார்.

நிமிர்ந்து சீத்தாராமனைப் பார்த்து, ‘‘கேட்டீங்க இல்ல! அவர்தான். சரி... சரி... அந்தப் பொண்ணு சரியா வருவாளா, மாட்டாளா? அதை மட்டும் சொல்லுங்க. பாருங்க சீத்தாராமன், இந்த விஷயத்துல கூச்ச நாச்சத்துக்கு வேலையே இல்லை. வெளியே இருக்குற அத்தனை பேரும் என்னைப் பத்தித்தான் இப்போ பேசிக்கிட்டிருப்பாங்க. நான் வெளியில போனா சைலன்ட் ஆயிடுவாங்க. காரணம், என்னோட செல்வாக்கு. நான் நினைச்சா, மொத்தப் பேரையும் எங்கே வேணா தூக்கியடிப்பேன்னு அவங்க அத்தனைப் பேருக்கும் தெரியும்... உங்களுக்கும் தெரியும். இப்ப சொல்லுங்க, என்ன ஆச்சு?” என்றார்.

‘‘இல்ல மேடம், அந்த மல்லிகாவோட டாகுமென்ட்ஸ், தீஸிஸ் எல்லாமே எங்கிட்டதான் இப்பவும் இருக்கு. அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லிப் புரிய வெச்சிட்டேன். ‘மொத்தம் மூணு பேரும்மா’ன்னு சொன்னேன். முதல்ல சம்மதம் சொல்லிட்டா. அப்புறம் திடீர்னு போனைப் போட்டு, ‘சார், ஒருத்தர்ன்னா மட்டும் சரி சார்’ன்னு அழுவறா மேடம். அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம குழப்பத்துல இருக்கேன்.’’ தயங்கித் தயங்கிச் சொன்னார் சீத்தாராமன்.

“அட, மேட்டர் இவ்வளவுதானா? ஒருத்தருக்கு ஓகேன்னு சொல்லிட்டா இல்ல... அது போதும். அதை வெச்சே, மூணு என்ன, முப்பது சிட்டிங் ரெடி பண்ணிடலாம். சொதப்பிட்டீங்கன்னு நினைச்சேன். இவ்வளவு சூப்பரா பேசி முடிச்சிருக்கீங்களே, குட்... குட்... அவளுக்கு நான் போன்ல பேசறேன்னு மட்டும் சொல்லுங்க. மத்ததை நான் பாத்துக்கறேன். உங்களுக்குச் சேரவேண்டிய அமௌன்ட் காலையில வந்திடும். ஓகே... ‘சார்’ ரூமுக்குப் போயிட்டு வந்திடறேன். மல்லிகா மேட்டரை அவருக்கு கன்வே பண்ணிட்டா, ஆள் குஷியாயிடுவாரு. கையெழுத்தாக வேண்டிய ஃபைலுங்க நிறைய பெண்டிங்ல இருக்கு. விஷயத்தைக் காதுல போட்டதுமே சைன் பண்ணிடுவாரு... எனக்கும் அமௌன்ட் வந்து சேர்ந்திடும்” என்றபடி ராணி அடுத்த அறைக்குள் நுழைந்ததும் சீத்தாராமன் எழுந்து அவர் சீட்டுக்குப் போனார்.

‘சார்’ ரூமுக்குப் போய் விஷயத்தைச் சொன்ன கையோடு அங்கிருந்தபடியே மரத்தடிக்கு வந்தார் ராணி. மல்லிகாவுக்குப் போனைப் போட்டார்.

“என்னம்மா... சீத்தாராமன் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு. உன் லைஃப் நல்லா இருக்கணும்னுதான் நாங்கல்லாம் பாடுபடுறோம். சரியா? சார் கிட்டே சொல்லிட்டேன். சரின்னு சொல்லிட்டார். இனிமே உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. செலவே இல்லாம பட்டம் வாங்கப் போற... வைவா முடிஞ்சதும் உனக்கு நீ கேட்ட காலேஜ்லயே வேலைக்கும் ரெடி பண்றதா சொல்லிட்டார். இப்ப சந்தோஷம்தானே? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கு. சாயந்திரமா ஒரு நாலரை மணிக்கு மெரினா பீச் வந்துட்டு, எங்கே நிக்கறேன்னு போன்ல சொல்லு. அங்கேயே கார் வரும். உன்னை மாதிரி கஷ்டப்படற வேற புள்ளைங்க இருந்தாலும் சொல்லு கண்ணு. நான் ஹெல்ப் பண்ணச் சொல்றேன்” என்றார் கொஞ்சும் குரலில்.

மல்லிகாவைத் தூண்டிலாக்கிக் கையெழுத்து வாங்கிய ஃபைல்கள் மூலம் கிடைக்கப் போகும் பணத்தை அவர் மனம் கணக்குப் போட்டது. நிம்மதியாக சீட்டுக்குப் போய் கைநிறைய கோப்புகளும், முகம் நிறைய மல்லிகைப்பூ சிரிப்புமாய் ‘சார்’ அறைக்குள் நுழைந்தார். சில நிமிடங்களில் வெளியே வந்த ராணி, சீத்தாராமனைப் பார்த்து ‘சக்ஸஸ்’ என்பது போல புருவத்தை உயர்த்திக் காட்டினாள். அந்தப் பூரிப்புப் புருவ உயர்த்தலுக்கு அர்த்தம்... அவர் அக்கவுன்டுக்கு உரிய தொகை வந்துவிழும் என்பதுதான்.

(அடுத்தது யார்?)