Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 6 - மது, சிகரெட், அவுட்டோர்!

“அதாவது கண்ணுங்களா!” - 6 - மது, சிகரெட், அவுட்டோர்!
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 6 - மது, சிகரெட், அவுட்டோர்!

ஜான்ஸி ராஜா

ல தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நிர்மலாதேவிகள் வைத்ததே சட்டம். கல்வித் துறையிலும், அதிகார மையத்திலும் கோலோச்சும் ‘சரச’ மனிதர்களே நிர்மலாதேவிகளை வளர்த்தெடுக்கி றார்கள். இவர்களுக்கும், இவர்கள் கைகாட்டும் வி.ஐ.பி-களுக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட மாணவிகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய அவலம்.

‘பொலிட்டிகல் சயின்ஸ்’ கல்வித் தந்தையின் வியர்வையில் ஆரம்பிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அது. அவரை ஒரு கல்வித்தந்தை என்பதைவிட, ஒரு கலவித்தந்தை என்றே சொல்லலாம். வயதானாலும்கூட, எஃகு போன்ற உடல் அவருக்கு. அவரது விருப்பம் அறிந்து செயல்பட்டவர்தான், சான்ட்ரோ. அதையும் தாண்டி, பல ‘அசைன்மென்ட்’களை அரங்கேற்றிக் கொடுக்கும் சான்ட்ரோ,  மாணவிகளை மூளைச் சலவை செய்வதில் திறமைசாலி. அதில், அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

“அதாவது கண்ணுங்களா!” - 6 - மது, சிகரெட், அவுட்டோர்!

‘‘அது என்னது சான்ட்ரோ?’’ என்கிற உங்கள் மைண்ட்  வாய்ஸ் கேட்கிறது.

ஏழு சகோதரிகள் மாநிலத்திலிருந்து வந்தவர் சான்ட்ரோ. மங்கோலிய நிறம், முகம் எல்லாம் சேர்ந்து ‘ஜப்பான்காரி’ என்ற தோற்றத்தைத் தந்ததால் இந்தப் பெயர். அவருக்குப் பிடித்த கார் சான்ட்ரோ என்பது கூடுதல் தகவல். மஞ்சள் முகம்... வாளிப்பான உடம்பு... லிப்ஸ்டிக் உதடு, மை பூசப்பட்ட கண்கள் என்று கல்வித் தந்தையின் பி.ஏ-வாக வேலைக்குச் சேர்ந்து, அவருக்கு அனைத்துமாக இருந்தார்.

முதுமை காரணமாக நிர்வாகத்திலிருந்து கல்வித்தந்தை ஓய்வுபெற்றபின், அவரின் மகனுக்குத் துணையாகப் ‘பணி’யாற்ற ஆரம்பித்தார் சான்ட்ரோ. மிட்ஷு, சான்ட்ரோ, சுமோ போன்ற ‘நிக்நேம்’களில் வலம்வரும் இந்த வடகிழக்கு மாநிலப் பதுமையின் கட்டுப்பாட்டில் மட்டுமே மூன்று கல்லூரிகள் உள்ளன.

கத்திரி வெயில் காலத்திலும்கூட குளுகுளு காற்று வீசும் அந்தப் பல்கலைக்கழகத்தில், வட மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிகமாய்ப் பயில்கிறார்கள். கல்லூரிக்குக் காலை 9 மணிக்கே சான்ட்ரோவில் வந்து இறங்கும் சான்ட்ரோ, கல்லூரியிலிருந்து வீட்டுக்குப் புறப்பட, இரவு 7 மணி ஆகிவிடும். வெளியுலகத்துக்குத் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் என்றாலும், சான்ட்ரோவை மறைமுகமாக இயக்குபவர், வேந்தருக்கெல்லாம் வேந்தர். அதனால், பியூன் முதல் பேராசிரியர்கள்வரை அவருக்கு அச்சத்துடன் வணக்கம் வைப்பார்கள்.

ஐந்து செல்போன் எண்களை வைத்துள்ள சான்ட்ரோ, பல வாட்ஸ்அப் குழுக்களுக்கு அட்மின். தேர்வுகள், சிறப்பு வகுப்புகள், கல்லூரி விழாக்கள் போன்ற கல்வி தொடர்பான தகவல்கள் எதுவும் அந்த வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகப் பகிரப்படாது. அந்த குரூப்களில் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டுமே இருப்பார்கள். யாரேனும் ஒரு மாணவியை இதற்கு ‘டீம் லீடர்’ ஆக்குவார். ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, ‘குரூப்-ஸ்டடி நடக்கிறது. அங்கு போங்கள்’ என்று குரூப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுவார். அந்த இடத்துக்கு மாணவிகள் போனதும், அங்கு யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதை டீம் லீடருடன் சாட்டிங் செய்து அறிந்துகொள்வார்.

யாரையும் இவர் கட்டாயப்படுத்தவே மாட்டார். அப்படிச் செய்திருந்தால், எப்போதோ இவர் தலைப்புச் செய்தியாக மாறியிருப்பார். அதில் இவர் ரொம்பவே உஷார் பார்ட்டி. டீம் லீடரின் ஏற்பாட்டில்  குறிப்பிட்ட சில மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார். பில் பற்றி மாணவிகள் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு பில் வந்தாலும், சான்ட்ரோவின் கார்டு தேய்க்கப்படும். 

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், விதவிதமாகப் பரிமாறப்படும் நட்சத்திர உணவகங்கள் என்று டீம் லீடர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளைத் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல வைப்பார். இப்படியே பல ரவுண்டுகள் போகும். அடுத்ததாக, சென்னைக்கு அருகே அல்லது சென்னைக்குக் கொஞ்சம் வெளியே என்ற அளவுக்கு பிக்னிக், டூர் என ஏற்பாடு நடக்கும். டூர் போகும் இடத்தில், டீம் லீடர் மூலம் மது அருந்தவும், புகைக்கவும் கனிவான சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படும். முதலில் மறுப்பார்கள். ஆர்வமும் பயமும் குழப்பிவிட, லேசாகத் தயங்குவார்கள். அப்புறம், ‘பியர் மட்டும் எடுத்துக்கறேன்’ என்பார்கள். கொஞ்சம் போதை ஏறியதும், ‘ஒரே ஒரு சிகரெட்’ என்று போகும். இப்படியாக, மாணவிகளை சரண்டராக வைக்கும் வித்தைக்காரிதான், சான்ட்ரோ.

“அதாவது கண்ணுங்களா!” - 6 - மது, சிகரெட், அவுட்டோர்!

விபரீதத்தை அறிந்து விலகிச் செல்லும் மாணவிகளும் உண்டு. அவர்களைத் தொந்தரவு செய்யமாட்டார். 

‘‘நாளைக்கு நாம ‘ட்ரிப்’ போறோம், வழக்கம் போலவே எல்லாமும் உண்டு. யாருக்கு என்ன தேவைன்னு சொல்லிடுங்க, ரெடி பண்ணிடலாம். மூணு நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ்னு மட்டும் ஹெச்.ஓ.டி-கிட்டே சொன்னாப் போதும்’’ என்று முதல் ட்ரிப், முதல் பேட்ச்சுக்கு எடுத்த வகுப்புகள் அடுத்த முறை தேவைப்படுவ தில்லை. பெற்றோர் அற்ற தனிமை... சக மாணவிகளே, ‘ச்சும்மா ட்ரை பண்ணிப் பாரு, வேண்டாம்னா விட்ரு, நோ கம்பல்ஷன்’ என விடுக்கிற அழைப்பு... இவை அவர்களை அப்படியே மாற்றிவிடுகின்றன. படிப்படியாக அவர்கள் ‘அத்தனைக்கும்’ பழக்கமாகி விடுகிறார்கள்.

இப்போது சான்ட்ரோ, கல்லூரி முதல்வர் சொல்லி, அங்கிருந்து இன்னொரு வி.ஐ.பி சொல்லி மாணவிகளை அனுப்பிக் கொண்டிருந்த நிலை இல்லை. வி.ஐ.பி-க்கள் சான்ட்ரோவிடமே நேரடியாகப் பேசுகிறார்கள். நிறம், வயது, மாநிலம், என வி.ஐ.பி-க்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சப்ளை செய்யக்கூடிய அளவுக்கு செல் வாக்குடன் வலம்வருகிறார் சான்ட்ரோ. காரில் போகும் தூர எல்லைக்குள் மட்டுமே போய்வந்த பெண்கள், இப்போது விமானத்திலும் பறக்கிறார்கள்.

கடந்த வாரத்திலும், அப்படிப் ‘பறக்க’ ஒரு பெண்ணைக் கேட்டு சான்ட்ரோவுக்குப் போன். ‘‘நான்தான் சொல்லிட்டேனே சார், நீங்க அன்னைக்கி போட்டோவுல காட்டுனீங்களே, அந்தப் பொண்ணுதான். ரொம்ப விவரமானவ. பக்காவா கம்பெனி கொடுப்பா. நீங்க காரை அனுப்புங்க, நான் அவளை ஏர்போர்ட்டுக்கு அனுப்பறேன்’’ என்று சொல்லி போனை கட் செய்த மறு விநாடியே... இன்னொரு லைனில் வந்த வி.ஐ.பி., அதே மாணவியைக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘‘சார், இன்னைக்கும் நாளைக்கும் அவளால முடியாது. அவ ஃப்ரீயானதும் நானே சொல்றேன்... வேற யாராவது தரட்டுமா சார்?’’

இப்படி எப்போதும் இவரது அலைபேசிகள் சிணுங்கிக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் கடற்கரை சாலையில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு வசித்த சான்ட்ரோ அதே ஏரியாவில் இப்போது ஒரு பங்களாவைச் சொந்தமாக்கி சொகுசாக வாழ்ந்துவருகிறார்.

(அடுத்தது யார்?)