அலசல்
Published:Updated:

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்
பிரீமியம் ஸ்டோரி
News
“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

திருச்சி பெண்கள் சிறையில் கைதிகள் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மிதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகுதேவி நம்மிடம் பேசினார். ‘‘தமிழகத்திலுள்ள பெண்கள் சிறைகளிலேயே திருச்சியில் உள்ளது கொடூரமான சிறை. இங்கு பெண் கைதிகளைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. வழக்கறிஞர்களான நாங்களே போராடித்தான் பார்க்க வேண்டியுள்ளது, சாதாரண மக்களின் நிலைமை மிக மோசம். மாவோயிஸ்ட் கைதிகளான சந்திரா, கலா இருவரும் திருச்சி பெண்கள் சிறையில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். மே 10-ம் தேதி சந்திராவை, சிறை ஏட்டு வளர்மதி என்பவர் செருப்பால் மிருகத்தனமாகத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதே சிறையில் இருக்கும் கலாவுக்குக்கூட இதைப்பற்றித் தெரிவிக்கவில்லை.

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

மே 12-ம் தேதி வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நான் சந்திராவைப் பார்க்கச் சென்றபோது, நடந்த சம்பவத்தைக் கூறினார். ‘சந்திரா, சிறை நிர்வாகத்திடம் கொடுத்து வைத்திருந்த  தன்னுடைய நகவெட்டியை எடுத்துத் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு ஏட்டு வளர்மதி, ‘கேட்டவுடன் எடுத்துத்தர நான் உன் வேலைக்காரியா’ என்று திட்டிக்கொண்டே, சந்திராவை செருப்பால் அடித்திருக்கிறார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்துபோன சந்திரா மயக்க மடைந்துள்ளார். ஏட்டு வளர்மதிக்கு சீஃப் வார்டன் பாக்கியலட்சுமி உடந்தையாக செயல்பட்டுள்ளார். ‘வளர்மதிமீது நடவடிக்கை எடுங்கள்’ என்று புகார் தெரிவித்த சந்திராவிடம், ‘இதை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் உன்மீது மற்றொரு வழக்குப் போட்டு விடுவோம்’ என்று ஜெயிலர் பேபி மிரட்டியிருக்கிறார். சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கைது செய்யப்பட்டபோது சந்திராவையும் கலாவையும் தனிமைச்சிறையில் வைத்திருந்தார்கள். இதுதொடர்பாக நான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தபின்பு, நீதிமன்றம் ஓர் ஆணையரை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இருவரும் தனிமைச்சிறையில் இருப்பதை நீதிமன்ற ஆணையர் உறுதிப்படுத்தினார். அதன்பின் இருவரையும் மற்ற கைதிகளுடன் அடைத்தனர்.

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

எவ்வளவு மோசமான குற்றவாளி என்றாலும், அவர்களுக்குச் சிறை விதிகளின்படி அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும். ஆனால், அதை திருச்சி பெண்கள் சிறையில் கொஞ்சமும் சட்டை செய்வதில்லை. இங்குள்ள சிறை அதிகாரிகள் பெண்களாக இருந்தும் மிகக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்.

“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்!” - திருச்சி சிறை திடுக்

சந்திராவைத் தாக்கிய ஏட்டு வளர்மதி, ‘உன் கதையை முடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணக்குக் காட்டி விடுவோம். என்னுடைய சட்டையிலுள்ள ஒவ்வொரு பட்டனுக்கும் அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று மிரட்டியுள்ளார். இதைவிடக் கொடுமை, பெண்கள் சிறைக்குள் எந்த ஆண் அதிகாரியும் செல்லக் கூடாது. ஆனால், கியூ பிரிவினர் இங்கு சர்வ சாதாரணமாகச் சென்று வருகிறார்கள். இதையெல்லாம் குறிப்பிட்டுத்தான் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் கேட்டோம். ‘‘சந்திராவின் வழக்கறிஞர் சொல்வது தவறு. இங்கு தனிமைச்சிறை என்பதே இல்லை. சந்திராவையும் கலாவையும் தனிமைச்சிறையில் அடைத்து வைக்கவில்லை. அவர்களை சிறையில் யாரும் தாக்கவில்லை. சிறை அதிகாரிகளிடம் சந்திரா தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறார். நாங்கள் ஏதாவது கேட்டால், ‘உங்கள்மீது வழக்குப் போட்டுவிடுவோம்’ என்று அவர் மிரட்டுகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். நாப்கினுக்கு முன்பு பற்றாக்குறை இருந்தபோது கைதிகளுக்குத் தர முடியவில்லை. இப்போது போதுமான ஸ்டாக் இருக்கிறது. கைதிகளுக்குக் கேட்கும்போது தருகிறோம்’’ என்றார்.   

- செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: வீ.சதீஷ்குமார், ராஜமுருகன்

‘‘19 மாதங்களாக ஏன் வழங்கவில்லை?’’

தி
ருச்சி பெண்கள் சிறையின் அவலம் குறித்து, 18-4-18 ஜூ.வி இதழில் “தினமும் நாப்கின் பயன்படுத்து வீங்களா?” எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் சிறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதிகள் ‘‘எங்களுக்கு உணவு, தண்ணீர் முறையாக வழங்கப்படுவதில்லை; கழிப்பிட வசதிகூட முறையாக இல்லை’’ எனப் புகார்கள் அடுக்கினர். ‘‘கடந்த இரண்டு வருடங்களாக நாப்கின் வழங்கப்படுவ தில்லை. உறவினர்கள் பார்க்க வரும்போது அவர்களை வாங்கி வரச் சொல்லிப் பயன்படுத்துகிறோம்’’ என்றனர். நீதிபதி இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரிக்க, ‘‘நாப்கின் தேவைக் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநருக்குப் பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை’’ எனக் கூறி தப்பித்துக்கொண்டனர்.

இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமிக்கு சம்மன் அனுப்பினார். நீதிபதி முன் ஆஜரான அவர், ‘‘மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கும் நாப்கின் உற்பத்தி குறைந்துவிட்டது, இதனால் நாப்கின் விலை அதிகரித்துள்ளது. அதனால்தான் தரமுடியவில்லை’’ என்றார். அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், ‘‘நாப்கின் விலை சமீபத்தில்தான் மாறியுள்ளது. ஆனால், 19 மாதங்களாக ஏன் வழங்கவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு நாப்கின் வழங்குவது குறித்த அறிக்கையைத் தருமாறு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.