அலசல்
Published:Updated:

“போலீஸ்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்!”

“போலீஸ்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“போலீஸ்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்!”

மகளின் காதலுக்குத் தீ வைத்த தந்தை

காதலித்த குற்றத்துக்காக(?) பெற்ற மகளையும், மகளின் காதலுக்குத் துணைபோன தன் மனைவியையும் குடும்பத் தலைவனே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் திருச்சியை திகிலடைய வைத்துள்ளது!

திருச்சி கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகர். இவர் திருச்சி எடத்தெரு மார்க்கெட் பகுதியில் பேக்கரி நடத்திவருகிறார். கடையில் உதவியாக அவரின் மனைவி மல்லிகா மற்றும் மகள் சுவாதி ஆகியோரும் இருந்துவந்துள்ளனர். மே 13-ம் தேதி இரவு மல்லிகாவும் சுவாதியும் உடல் கருகிய நிலையில் பேக்கரிக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்துப் பதறிய விஜயசேகர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மல்லிகாவையும் சுவாதியையும் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் மல்லிகா, “கணவர் வெளியில் சென்றிருந்தார். கடையில் நானும் சுவாதியும் இருந்தோம். இரவு 10 மணிக்கு பேக்கரியில் இருந்த ஃபிரிட்ஜ் சுவிட்சை அணைத்தபோது, தீப்பிடித்துவிட்டது” என்று நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்தார். அடுத்த நாள் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். சுவாதியோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்நிலையில் சுவாதியின் தந்தை விஜயசேகர் போலீஸ் விசாரணையில், “என் மகள் சுவாதி, தங்கவேல் என்பவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு என் மனைவி மல்லிகாவும் உதவி புரிந்தார். இது எனக்குப் பிடிக்காததால், மகளையும் மனைவியையும் பெட்ரோல் ஊற்றி எரித்தேன்” எனக் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“போலீஸ்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்!”

திருச்சியை அடுத்துள்ள பனையகுறிச்சியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் போலீஸ்காரராகப் பணியாற்றுகிறார். இவரும், எம்.எஸ்சி வரை படித்துள்ள சுவாதியும் காதலித்து வந்துள்ளனர். வீட்டுக்குத் தெரியாமல் 2017 செப்டம்பர் 22-ம் தேதி பதிவுத் திருமணமும் செய்துள்ளார்கள். இதையடுத்து தங்கவேலு இந்தத் திருமண விஷயத்தைத் தன் பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கியுள்ளார். இதற்கிடையில் சுவாதி கர்ப்பமானார்.

“சுவாதியின் திருமணம் மற்றும் கர்ப்பம் குறித்து என்னிடம் கலந்துபேசாமல், என் மனைவி மல்லிகாவே தன்னிச்சையாக தங்கவேலுவின் குடும்பத்தினரிடம் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, மல்லிகாவையும் சுவாதியையும் தீர்த்துக் கட்ட முடிவெடுத்தேன். அதற்கான தருணத்துக்காகக் காத்திருந்தேன். திட்டமிட்டபடி காரியம் நடக்கவேண்டும் என்பதால் கூடுதலாக மது குடித்தேன். அன்று இரவு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிவந்து, யாரும் இல்லாத நேரம் பார்த்து, கடையில் இருந்த ஃபிரிட்ஜ் அருகே ஊற்றினேன். பின்னர் கடைக்குள் மல்லிகாவையும் சுவாதியையும் இருக்கச் சொல்லிவிட்டு, நான் வெளியில் போவதாகக் கூறிவிட்டுக் கடைக்கு வெளியில் வந்து மறைவாக நின்றுகொண்டேன். என் மனைவி மல்லிகா, ஃபிரிட்ஜைத் திறந்து ஏதோ பொருளை எடுக்க முயன்றார். உடனே, நான் கையில் வைத்திருந்த சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்து பெட்ரோல் கிடந்த இடத்தில் வீசினேன். அடுத்த நொடி மல்லிகாவின் சேலையில் தீப்பற்றியது. உடனே மகள் சுவாதி ஓடிவந்து மல்லிகாவைக் காப்பாற்ற முயன்றபோது சுவாதிமீதும் தீப்பிடித்துக்கொண்டது. வெளியில் நின்றிருந்த நான், சில நிமிடங்கள் கழித்து தற்செயலாகக் கடைக்குள் வருவதுபோலவும், மனைவியையும் மகளையும் காப்பாற்றுவதுபோலவும் நடித்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தேன். ஆனால், லைட்டரைக் கண்டுபிடித்து என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்” என்றார்.

‘தன் கணவர் விஜயசேகரின் திட்டமிட்ட சதியால்தான் தான் இறந்தோம்’ என்ற உண்மை கடைசிவரை மல்லிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபம். இப்போது விஜயசேகர்மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

“போலீஸ்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்!”

சுவாதியின் கணவர் தங்கவேலுவிடம் பேசினோம். ‘‘2015-ம் ஆண்டு இளைஞர் காவல்படையில் சேர்ந்தேன். பாலக்கரை காவல்நிலையத்தில் பணி செய்தபோது, சுவாதியின் கடைக்குச் செல்வேன். அப்போது எங்கள் இருவருக்கும் பழக்கம் உண்டானது. எங்கள் காதலை அவரின் அப்பா ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தார். ‘போலீஸ் காரனுக்கு பொண்ணு தரமாட்டேன். கறுப்பா இருக்கும் உனக்கு, அழகான என் பொண்ணு கேட்குதா?’ என்று திட்டினார். எங்கள் காதலை யாரும் பிரித்துவிடக்கூடாது என்பதால், நாங்கள் முறைப்படி பதிவுத் திருமணம் செய்தோம். எங்கள் காதலை என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். அவளின் அப்பா மனசு மாறுவார் எனக் காத்திருந்தோம்.

இந்நிலையில் சுவாதி கர்ப்பமானார். கல்யாணம் குறித்தும், கர்ப்பம் குறித்தும் தகவலறிந்த அவளின் அப்பா பிரச்னை செய்தார். கடந்த வாரம் வரை எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினாங்க. திருச்சியின் பெரிய பணக்காரர்கள் எல்லாம் பஞ்சாயத்து பேசினாங்க. ‘சில நாள்கள் காத்திரு... சுவாதியை அனுப்பி வைக்கிறோம்’ என்றார்கள். அதை நம்பிக் காத்திருந்தேன்.

எங்க அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுவாதியின் அப்பாவும் காதலித்துத் திருமணம் செய்தவர்தான். ஆனால், எங்கள் காதலை அழிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. சுவாதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவளைக் காப்பாற்றி அவளுடன் சேர்ந்து வாழ்வேன்” என்கிறார் நம்பிக்கையுடன்

நிறைமாதக் கர்ப்பிணியான சுவாதியுடன், அவர் காதலும் உயிர் பிழைக்கப் போராடி வருகிறது!

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்