Published:Updated:

தாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்?

தாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
தாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்?

புது டைப் ஜெயில் டூரிஸம்

ரிவாளால் கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடிய தாதா பினு ஜாமீனில் வந்த அதே நாளில், சென்னையின் இன்னொரு தாதாவான ‘சி.டி’ மணியைத் துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் தள்ளியதாக அறிவித்துள்ளது சென்னை மாநகர போலீஸ்.

சென்னைப் புறநகரான மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த நாள் கொண்டாடினார் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தாதா பினு. அந்தக் கொண்டாட்டத்தில், எதிர்கோஷ்டி தாதாவான சி.டி மணியும் பங்கேற்பதாக இருந்தது. தகவல் அறிந்த போலீஸார், அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு திரண்டிருந்த ரவுடிகளை மடக்கிய போலீஸார், சுமார் 75 ரவுடிகளைக் கைது செய்தனர். ஆனால், கூட்டாளிகள் சிலருடன் தாதா பினு தப்பியோடிவிட்டார். தனக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த ஆக்‌ஷன் பற்றித் தகவல் சொன்னதால், பாதி வழியிலேயே மணி எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியானது. தனிப்படை அமைத்து பினுவை போலீஸார் தீவிரமாகத் தேடினர். அதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான பினு, போலீஸிடம் சரணடைந்தார்.

தாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்?

இதைத் தொடர்ந்து மணியையும் தேடிவருவதாக போலீஸ் சொன்னது. மணியின் நெருங்கிய கூட்டாளியான ராதாகிருஷ்ணனைப் பிடித்தால், மணியின் இருப்பிடம் தெரிந்துவிடும் என்று தகவல் வெளியானது. அதன்பின் ராதாகிருஷ்ணனும் போலீஸில் சரணடைந்தார். நான்கு மாதங்கள் கழித்து இப்போது சி.டி மணி பிடிபட்டிருக்கிறார்.

“கொலை, ஆள்கடத்தல் உள்பட 28 வழக்குகளில் தொடர்புடைய சி.டி மணிக்கு எதிராக, 16 பிடிவாரன்ட்டுகள் நிலுவையில் உள்ளன. கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன் மற்றும் இணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் குமார் உள்ளிட்டோரைக் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதையடுத்து, மணியையும் அவரின் கூட்டாளிகளையும் போலீஸார் கைதுசெய்தனர். ஸ்ரீபெரும்புதூரி லிருந்து திண்டிவனம் நோக்கி சி.டி.மணியும் அவரின் கூட்டாளிகளும் காரில் செல்வதாகத் தகவல் கிடைத்தது. அவர்களை போலீஸ் டீம் சேஸிங் செய்தது. போலீஸை மணி சுட முயன்றார். ‘சுட்டு விடுவோம்’ என்று போலீஸார் எச்சரித்ததால், அவர் சரணடைந்தார்” என்று ஜூன் 24-ம் தேதி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

சி.டி மணி குறித்து விசாரித்தோம். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன், 1990-ல் பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்தார். தேனாம்பேட்டையில் சி.டி கடை போட்டார். சி.டி விற்பனைப் போட்டியில், தன்னுடன் மோதிய சிலரைக் கத்திமுனையில் ஓடவிட்டார். இதைத் தொடர்ந்து தாதா திண்டுக்கல் பாண்டி தன்னிடம் சி.டி மணியைச் சேர்த்துக்கொண்டார். திண்டுக்கல் பாண்டி, சில அசைன்மென்ட்களை சி.டி மணியிடம் ஒப்படைத்தார். குறித்த நேரத்தில் அவற்றை மணி முடித்துக்கொடுத்தார்.

திண்டுக்கல் பாண்டி என்கவுன்டரில் போட்டுத் தள்ளப்பட்ட பிறகு, சி.டி மணி சுயேச்சையான தாதா ஆகிவிட்டார். 2009-லிருந்து பிரபல தாதாக்கள் பலரை சி.டி மணி தொடர்ச்சியாகப் போட்டுத்தள்ள, அவரது பெயர் பிரபலமானது. போலீஸில் உயர் அதிகாரிகள் பலர், சி.டி மணிக்கு நெருக்கம். சிலர் தங்களால் ‘தீர்த்து வைக்கமுடியாத பிரச்னைகளை’ சி.டி மணிக்கு அசைன்மென்ட்டாக கொடுப்பார்களாம். இந்த போலீஸ் பாசத்தால் சென்னை சிட்டி லிமிட்டுக்குள்ளேயே தன் பெரும்பாலான வேலைகளைப் பார்த்துக்கொண்டார் சி.டி மணி. தன் நடமாட்டத்தை யாரும் கண்காணிக்கக் கூடாது என்பதற்காக, அவர் செல்போனே வைத்துக் கொண்டதில்லை. தன் ஆட்கள் வைத்திருக்கும் போன்களிலிருந்தே எவருக்கும் பேசுவாராம். சொகுசு கார்களில்தான் பயணம். ‘யாரோ பெரிய வி.ஐ.பி போகிறார்’ என நினைத்துக்கொண்டு இந்தமாதிரி கார்களை போலீஸ் சோதனை செய்வதில்லை. அதற்காகவே அவர்  சொகுசு கார்களில் போவார். அவர் வெளியில் போகிறார் என்றால், அவரின் ஆட்கள் முன்கூட்டியே அந்த வழியில் போய், ‘ரூட் க்ளியர்’ என சிக்னல் கொடுத்தால்தான் வெளியில் வருவார். இவ்வளவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போலீஸ் நெருக்கமும் இருந்தும் மணி ஏன் வளைக்கப்பட்டார்? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்?

‘‘சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற குள்ள ஜெகாவைக் கொல்ல முயன்றார் சி.டி.மணி. கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்த குள்ள ஜெகா, உயிர் பிழைத்தார். அந்த வழக்கில் ஜெயிலுக்குப் போய் ஜாமீனில் வந்த சி.டி மணி, அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார். ஆனாலும், மணியின் ‘வழக்கமான’ செயல்பாடுகள் வெளிப்படையாகவே இருந்துவந்தன. வெடிகுண்டு வீசிக் குள்ள ஜெகாவைக் குடும்பத்துடன் கொல்ல முயன்ற மணியைப் பழிதீர்ப்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு கோஷ்டி காத்திருக்கிறது. அவர்களில் ஒருவர் சமீபத்தில் ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம், சி.டி மணியைக் கடைசியா ஒரு தடவை போய்ப் பார்த்துடுங்க’ என்று சொன்னாராம். இதைத் தொடர்ந்தே, பினு ஜாமீனில் வெளிவந்த அதே நாளில், சி.டி மணி உள்ளே தள்ளப்பட்டுள்ளார். குள்ள ஜெகா ஆட்களின் கையில் சிக்காமல், சி.டி மணியைப் பத்திரமாகச் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது போலீஸ்.

சி.டி மணிக்கு உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. ஒரு ஆபரேஷன் செய்துகொள்ள ஒரு மருத்துவமனையில் பேசிவிட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் சிகிச்சை பெறுவதில் பிரச்னைகள் இருந்தன. இப்போது போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார்’’ என்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

‘மெடிக்கல் டூரிஸம்’ என்ற பெயரில் வெளிநாட்டு நோயாளிகள் வருவது போல, இது ‘ஜெயில் டூரிஸம்’ போல!

- ந.பா.சேதுராமன்