Published:Updated:

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

விதவிதமான போதைகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கஞ்சா, அபின், ஹெராயின், போதை ஊசி, பாம்புக் கடி, மயக்க ஊசி என எத்தனையோ போதைகளைப் பார்த்த பின்பும், அடுத்து என்ன என்று ஓடிக்கொண்டே இருக்கிறது உடல்போதை உலகம். இந்தக் கூட்டத்தை வைத்துச் சம்பாதிக்கிறது பணபோதை உலகம்.

தமிழகத்தின் புது போதைகளாக இப்போது அறிமுகமாகியிருப்பவை ஹஷிஷ் ஆயில் மற்றும் போதை ஸ்டாம்ப். கோவா மற்றும் பெங்களூரு பகுதிகளில் சில ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் போதை ஸ்டாம்ப் தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை சென்னையில் மட்டுமே பிடிபட்டுள்ளது. ஆந்திராவில் பெரிய நெட்வொர்க் வைத்துச் செயல்படும் போதை கும்பல் மட்டுமே ஹஷிஷ் ஆயில் விற்றுவந்தது. தமிழகத்தில் இதுவரை இதன் நடமாட்டம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், போதை ஸ்டாம்ப்கள் மற்றும் ஹஷிஷ் ஆயில் வைத்திருந்ததாகக் கடந்த வாரம் கொடைக்கானலில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

கொடைக்கானலுக்கு ஆண்டு முழுக்க வெளிநாட்டினர் வந்துகொண்டே இருப்பார்கள். இங்குள்ள சூழல் மற்றும் இங்கு கிடைக்கும் கஞ்சா, போதைக் காளான் போன்றவைதான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. மாவட்டக் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைக்குப் பிறகு தற்போது போதைக் காளான் விற்பனை ஓரளவு குறைந்துள்ளது. அதே நேரம் கஞ்சா உள்ளிட்டவை சர்வசாதாரணமாகக் கிடைத்துவருகின்றன. இந்த நிலையில் சிலர், போதைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலையிலான போலீஸார் சந்தேகத்துக்கிடமான சில இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பேத்துப்பாறை அருகேயுள்ள தனியார் காட்டேஜ் ஒன்றில் சோதனையிட்டபோதுதான், போதை ஸ்டாம்ப்கள் மற்றும் ஹஷிஷ் ஆயில் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, அந்த காட்டேஜை லீஸுக்கு எடுத்து நடத்திவந்த கேரளாவைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 820 மி.லி ஹஷிஷ் ஆயில், போதை ஸ்டாம்ப்கள், லேப்டாப், மொபைல் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹஷிஷ் ஆயில் மற்றும் போதை ஸ்டாம்ப் குறித்து விசாரித்தோம். ‘‘கஞ்சா கடத்தல் பல மாநில எல்லைகளைத் தாண்டி நடந்தாலும், வாகனச் சோதனைகளில் இது சிக்கிக்கொள்கிறது. அதனால், இப்போது கடத்தல்காரர்கள் கஞ்சாவைப் பதப்படுத்தி ஹஷிஷ் ஆயிலாக மாற்றுகிறார்கள். இதில் போதையும் அதிகம்; விலையும் அதிகம். ஆந்திராவிலிருந்து பல தென் மாநிலங்களுக்கும் இது போகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

போதை ஸ்டாம்ப் என்பது உயர்தரமான போதைப்பொருள். எல்.எஸ்.டி போதை மருந்தில் ஊற வைத்து இதைத் தயாரிக்கிறார்கள். லைசர்ஜிக் ஆசிட் டைஎத்திலாமைட் (Lysergic acid Diethylamide) என்பதன் சுருக்கம்தான் எல்.எஸ்.டி. இதில் பிளாட்டிங் பேப்பரை ஊறவைத்துப் போதை ஸ்டாம்ப் தயாரிக்கிறார்கள். ஏதாவது உருவங்கள் அச்சிடப்பட்ட, குழந்தைகள் வைத்துக்கொண்டு விளையாடும் ஸ்டாம்ப் போலவே இது இருக்கும். கோவாவில்தான் அதிகம் கிடைக்கிறது. இந்த ஸ்டாம்பை சாதாரணமாக யாரும் போதைப்பொருள் எனக் கண்டுபிடிக்க முடியாது. நாக்குக்கு அடியில் இதை ஒட்டிக்கொண்டால், உடலுக்குள் பெரும் பிரளயமே நடக்கும். ஆனால், வெளியில் எந்த அறிகுறியும் தெரியாது; வாசனையும் இருக்காது. சாதாரணமாக இருப்பதுபோல் இருக்கலாம். ஒரு ஸ்டாம்பை ஒட்டிக்கொண்டால், ஒருநாள் முழுவதும் மிதமான போதை இருக்கும். இந்த ஸ்டாம்பைப் பயன்படுத்துபவர்கள் போதையில் பெரும் ரகளையே செய்வார்கள் என்பதால், ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களில்தான் இந்த போதைக்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

சாதாரண ஆட்களுக்கு இதைக் கொடுத்தால் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால், வெளிநாட்டினர் மற்றும் வி.வி.ஐ.பி-க்கள் மட்டும்தான் இதன் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். நிஷாந்த்தின் காட்டேஜில் வெளிநாட்டினர் மட்டுமே தங்கியுள்ளனர். எனவே, சர்வதேசப் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் போதைத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்’’ எனத் தகவல் சொல்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

ஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

இதுகுறித்து திண்டுக்கல் எஸ்.பி சக்திவேலிடம் பேசினோம். ‘‘கொடைக்கானலைப் பொறுத்தவரைப் போதைக் காளான், கஞ்சாவை ஒழிச்சுட்டு வர்றோம். இது சுற்றுலாப் பகுதிங்கிறதால அப்பப்ப யாராவது வெளிய இருந்து வந்து சப்ளை செஞ்சிட்டுப் போயிடுறாங்க. நிஷாந்த் வளர்ந்தது எல்லாமே குவைத் நாட்டுல. பெங்களூர்ல காலேஜ் முடிச்சிருக்கார். அப்ப சில நண்பர்களோட பழக்கம் ஏற்பட்டு, அவங்க மூலமாத்தான் போதைப் பொருள்கள் அறிமுகமாச்சுன்னு சொல்றார். ‘நான் தயார் செய்யலை. வாங்கிட்டு வந்தேன்’னு சொல்றார். விசாரணையின் முடிவுலதான் முழுமையான விவரங்கள் தெரியும்’’ என்றார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த போதை மறுவாழ்வு மற்றும் நரம்பியல் மருத்துவர் டீன் வெஸ்ட்லியிடம் பேசினோம். ‘‘போதைப் பொருள்களில் அதிக வீரியமானது இந்த எல்.எஸ்.டி ஸ்டாம்ப்தான். இதை உட்கொண்ட பிறகு, வெளியே சாதாரணமாகக் கேட்கும் சத்தங்கள் உள்ளுக்குள் ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும். கண்களை மூடினால் விநோதக் கற்பனைகள் தோன்றும். அவை நிஜம் என்ற பிரமை ஏற்படும். தொடர்ந்து இதைப் பயன்படுத்துபவர்களுக்கு நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். பார்வைக்கோளாறு ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாளடைவில் மனநோயாளியாகி விடுவார்கள்’’ என்றார்.

எங்கே செல்லும் இந்த போதை?

- ஆர்.குமரேசன்

ஃபேஸ்புக் அழைப்பு... வாட்ஸ்அப் குரூப்!

ந்த போதை ஸ்டாம்ப் இப்போது கோவா, பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. மிக அரிதாகவே போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரின் கைகளில் இது சிக்குகிறது. எனவே, தமிழகத்தில் இதன் நடமாட்டம் குறைவு என போலீஸார் நம்பிவந்தார்கள். ஆனால், கொடைக்கானல் வரை இதன் புழக்கம் ஊடுருவியிருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது.

2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையில் ரோஹன் நாயர் என்பவரைப் போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். ஐ.டி துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், பார்ட் டைம் பிசினஸாகச் செய்தது போதைப்பொருள் வியாபாரம். ஐரோப்பிய நாடுகளிலிருந்து ரகசிய நெட்வொர்க் மூலம் போதை ஸ்டாம்ப்கள் அவருக்கு பார்சலில் வரும். அவர், கல்லூரி மாணவர்களுக்கு அவற்றை விற்றுவந்தார். அவரைப் பிடித்தபோது, இரண்டு செ.மீ நீள அகலத்தில் 2,500 ஸ்டாம்ப்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அதுதான் முதல் மற்றும் பெரிய போதை ஸ்டாம்ப் பறிமுதல் சம்பவம். பெரும்பாலும், இந்த ஸ்டாம்ப்கள் வெளிநாடுகளிலிருந்து புத்தகங்களின் உள்ளே மறைத்துவைத்து அனுப்பப்படுவதால், எந்தச் சோதனையிலும் சிக்குவதில்லை என்பது தெரிந்தது. அதன்பின், புத்தக பார்சல்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டதால், கடத்தல் குறைந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 16 ஸ்டாம்ப்களுடன் நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள், கோவாவிலிருந்து ஒரு ஸ்டாம்ப் ஐந்தாயிரம் ரூபாய் விலைக்கு வாங்கி இங்கே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

போதை ஸ்டாம்ப் நெட்வொர்க்கில் இருப்பவர்கள் இதற்காக ஃபேஸ்புக்கில் தனிப் பக்கம் ஆரம்பித்து ஆள் பிடிக்கின்றனர். இப்படிச் சேரும் நபர்களை வைத்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்படும். எங்கே எந்த நேரத்தில் ஸ்டாம்ப் கிடைக்கும் என்பது ஒருநாள் முன்னதாகத்தான் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும். இதற்கெனச் சங்கேத வார்த்தைகள் இந்த குரூப்களில் பயன்படுத்தப்படுகின்றன. நகருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள பங்களாக்கள், ரிசார்ட்கள்தான் இந்தப் போதைக் கொண்டாட்டத்துக்கான இடங்களாக இருக்கின்றன.