Published:Updated:

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

‘தேவன் அன்புள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார்’ என்பது கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என அறிவிக்கும் பைபிள், பாவ மன்னிப்பு என்ற வழியையும் காட்டியிருக்கிறது. ஆனால், பாவ மன்னிப்பு பெறப்போன ஒரு பெண்ணுக்கு அதுவே மீளமுடியாத நரகத்தை அளித்திருக்கும் கொடூரம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார் அந்தப் பெண்.  திருவல்லா அருகிலுள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்த அவர், திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார். திருமணத்துக்குப் பின்பு அந்தக் குற்ற உணர்வு மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்ததால், இரு குழந்தைகளுக்குத் தாயானபிறகு திருவல்லா மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார்.

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

ஆசிரியையின் கதையைக் கேட்ட பாதிரியார், ‘‘இந்தச் சம்பவத்தை உன் கணவனிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் என் இச்சைக்கு இணங்க வேண்டும்” என மிரட்டிப் பணியவைத்திருக்கிறார். அந்த ஆசிரியையுடன் தனிமையில் இருந்தபோது மிரட்டிப் புகைப்படங்களும் எடுத்து, தன் நண்பர்களான நான்கு பாதிரியார்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அவர். திருவனந்தபுரம், டெல்லி சபைகளைச் சேர்ந்த அந்தப் பாதிரியார்களும் ஆசிரியைமீது ஆசைகொண்டு அந்தப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டித் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.

அதில் ஒருவர் செய்ததுதான் உச்சபட்சக் கொடூரம். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து ஆசிரியையுடன் தனிமையில் இருந்துவிட்டு, அறை வாடகைக்கு அந்த ஆசிரியையே பணமும் செலுத்தச் சொல்லியிருக்கிறார். ஆசிரியை தன் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியிருக்கிறார். அந்த டெபிட் கார்டு ஸ்டேட்மென்ட்தான் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமையை அவரின் கணவனுக்குக் காட்டிக்கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சர்ச் நிர்வாகத்துக்கு ஆசிரியையின் கணவர் புகார் அனுப்பியதால், பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சர்ச் நிர்வாகம் இப்போது புகாருக்கு ஆளான ஐந்து பாதிரியார்களை சஸ்பெண்டு செய்திருக்கிறது. இதுபற்றி விசாரிக்கத் தனிக் குழுவும் அமைத்திருக்கிறது. விசாரணைக்குழு முன் ஆஜரான அந்தப் பெண்ணின் கணவர், ‘பாதிரியார்களுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸில் மட்டுமே ஒப்படைப்பேன்’ என்றார். இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். ஆசிரியையின் கணவரிடமும், பாதிக்கப்பட்ட ஆசிரியையிடமும் வாக்குமூலம் பெற்று, பாதிரியார்கள் ஜோபு மேத்யூ, ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஜான்சன் பி.மேத்யூ ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஆசிரியையின் கணவர், சர்ச் நிர்வாகி ஒருவரிடம் போனில் பேசிய ஆடியோ இப்போது வெளியாகிப் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதில் பேசும் ஆசிரியையின் கணவர், “ஆர்த்தோடக்ஸ் காரனாகப் பிறந்த நான் இறக்கும்வரை அந்தச் சபையில் இருப்பேன். பூரண இறை நம்பிக்கையுடன் வாழ்ந்துவருகிறேன். நான் பிறந்தது, எனக்கு வழிகாட்டியது எல்லாம் இந்தச் சபைதான். அதுதான் என்னை ஒழுக்கமாக வளர்த்தது. ஆனால், பாதிரியார்கள் சபையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொந்தளிப்புடன் சொல்கிறார்.

‘பாவ மன்னிப்புக்காக வரும் பலரும் சொல்லும் ரகசியங்களை வைத்து அவர்களைப் பாதிரியார்கள் மிரட்டுவதால், பாவ மன்னிப்பு முறையையே ஒழிக்க வேண்டும்’ என்கிறார் அவர். ‘‘வருமானவரி செலுத்துவதற்காக எல்லா டாகுமென்ட்களையும் எடுத்தபோதுதான், எனக்கு இந்தக் கொடூரம் தெரியவந்தது. என் மனைவியின் பெயரில் சில இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்ததால், வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்தேன். அவளது இமெயிலுக்கு வந்த வங்கி ஸ்டேட்மென்ட்டைப் பார்த்தபோது, ஹோட்டலில் அறை வாடகைக்கு எடுத்ததற்காகப் பணம் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது, நடந்த சம்பவங்களைக் கூறி எனது மார்பில் சாய்ந்து அழுதாள். ஹோட்டலில் பணம் செலுத்தப்பட்ட அந்தத் தேதியில் பள்ளியிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதாகக் கூறி எர்ணாகுளத்திலிருந்து ரயிலில் போயிருக்கிறாள். ‘தெரியாமல் தவறு செய்து விட்டாள்’ என்று நான் அவளை மன்னித்து விட்டேன். ஆனால், அவளுக்கு நேர்ந்த கதையைக் கேட்ட எனக்குப் பாதிரியார்கள்மீது இருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. பாவமன்னிப்பு கேட்கச்சென்றவளை மிரட்டி ஐந்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் எட்டுப் பேர். ஐந்து பேர் செய்த கொடூரங்களுக்கு மட்டுமே என்னிடம் ஆதாரம் உள்ளது. அதனால், அவர்கள்மீது புகார் கொடுத்திருக்கிறேன்.

இந்தப் பாதிரியார்களைச் சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும். விஷயம் வெளியே தெரிந்துவிட்டதால், ஒரு பாதிரியார் எனக்கு போன் செய்து அழுகிறார். என் மனைவிக்குப் பாதிரியார்களைக் கண்டால் பயமாக உள்ளது. இந்தப் புகாரை நான் வாபஸ் பெறவேண்டும் என்று பலர் என்னிடம் மிரட்டலாகப் பேசுகிறார்கள். என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினரை வைத்து எனக்கு எதிராகப் புகார் கொடுக்க வைக்கிறார்கள்.

என்னிடம் அனைத்து டாக்குமென்ட்களும் உள்ளன. இவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்காமல் இருந்தால், பல பாதிரியார்களும் இதைத்தான் செய்வார்கள். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு 40 வயது இருக்கும். மனைவியின் உறவினரான அவர்தான் இதைத் தொடங்கி வைத்தவர். பாவமன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மனைவி, மகள், மருமகள் ஆகியோரைப் பாவ மன்னிப்பு கேட்க இனி நம்பி அனுப்ப முடியுமா? எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இந்த உலகத்தில் ஒரு மனிதர்கூட எனக்கு உதவி செய்யாமல் இருந்தாலும், நான் கடைசிவரை போராடுவேன். இனி வேறு யாருக்கும் இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது. பாவ மன்னிப்பு முறையை முற்றிலும் ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்’’ என்கிறார் அந்த ஆசிரியையின் கணவர்.

மன்னிப்புச் சுலபமானதாக இருக்கிறது; அதைப் பெறும் வழிதான் மோசமானதாக இருக்கிறது.

- ஆர்.சிந்து

13  முறை பலவந்தத்துக்கு இரையானேன்!

பா
வ மன்னிப்பு விவகாரம் கேரளாவை உலுக்கிய அதே நேரத்தில், பிஷப் ஒருவர்மீது கன்னியாஸ்திரி கொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை புகாரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘இந்த விவகாரத்தை போப் ஆண்டவர் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் மறைக்கப் பார்த்தார்; சமாதானம் பேசினார்’’ என கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரியும் சர்ச்சையில் சிக்கியிருப்பது யாரும் எதிர்பாராத விஷயம்.

புகார் கொடுத்த அந்தக் கன்னியாஸ்திரி, கோட்டயம் அருகேயுள்ள குருவிலாங்காடு மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ் கான்வென்ட்டில் பணிபுரிகிறார். புகாருக்கு ஆளாகியிருப்பவர், ரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆஃப் ஜலந்தர் பிஷப் ஃபிராங்கோ முலக்கல். இதில் சுவாரசியம் என்னவென்றால், இவர்களில் முதலில் புகார் கொடுத்தவர் பிஷப்தான். ‘அந்தக் கன்னியாஸ்திரியை ட்ரான்ஸ்ஃபர் செய்ததால், அவரும் இன்னும் ஐந்து பேரும் சேர்ந்து என்னை மிரட்டுகிறார்கள்’ என போலீஸில் பிஷப் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அந்தக் கன்னியாஸ்திரி கொடுத்த புகார், கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ‘நாங்கள் இருவரும் ஜலந்தர் டயோசிஸில் இணைந்து பணிபுரிந்தோம். அப்போது,    2014-ம் ஆண்டு குருவிலாங்காடு விருந்தினர் மாளிகைக்கு வந்த பிஷப் முலக்கல், என்னைப் பலவந்தமாக மிரட்டிப் பணியவைத்து வன்புணர்வு செய்தார். அதன்பின் 2016-ம் ஆண்டுவரை இப்படி 13 முறை பலவந்தமாகவும் இயற்கைக்கு முரணாகவும் வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்டேன்’ என்று அந்தப் புகாரில் கன்னியாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

கோட்டயம் போலீஸ் விசாரித்தபோது, அவர் ஆறு மணி நேரம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 72 பக்கங்களில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ள போலீஸ், ‘‘நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது அந்தக் கன்னியாஸ்திரி பலமுறை உடைந்து அழுதார். ஆனால், உடனே சமாளித்துக்கொண்டு எல்லாவற்றையும் சொன்னார். சில ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் அவர் தடுமாறவில்லை’’ என்கிறது. குருவிலாங்காடு கான்வென்ட்டில் இருக்கும் வேறு சிலரிடமும் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.

அந்தக் கன்னியாஸ்திரி இத்தனை ஆண்டுகளாக ஏன் புகார் செய்யவில்லை? ‘கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரியே இதற்குக் காரணம்’ என்று புகார் சொல்கிறார் கன்னியாஸ்திரி. ‘‘நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். அவர் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுக்கச் சொன்னார். அதையும் கொடுத்தேன். ஆனால், குற்றம் செய்த பிஷப்பைக் காப்பாற்றவே அவர் முயற்சி செய்தார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி நான் மிரட்டப்பட்டேன்’’ என்கிறார் அவர்.

பிஷப் ஃபிராங்கோ முலக்கல் இவை எல்லாவற்றையும் மறுக்கிறார். ‘‘அந்த கன்னியாஸ்திரியை ட்ரான்ஸ்ஃபர் செய்ததால், என்மீது இப்படிப் பழி சுமத்துகிறார்கள். என்னைக் கொன்றுவிடுவதாக அந்தக் கன்னியாஸ்திரியின் சகோதரர் மிரட்டினார். இது, பொய்ப் புகார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது’’ என்கிறார் அவர்.

திருச்சபைக்கு இன்னொரு தலைக்குனிவாக ஆகிவிட்டது இந்த விவகாரம்.