Published:Updated:

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!
வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

பிரீமியம் ஸ்டோரி

மிழ் சினிமா உலகில் இது பாலியல் குற்றச்சாட்டுகளின் சீஸன் போலிருக்கிறது. ஒருபக்கம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பைப் பற்றவைத்துள்ளன. இன்னொரு பக்கம், வாட்ஸ்அப்பில் ஒரு பாலியல் கும்பல் தனக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக நடிகை ஜெயலட்சுமி புகார் கொடுக்க, இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 தமிழ்ப்படங்கள், நிறைய டி.வி சீரியல்களில் நடித்துள்ள ஜெயலட்சுமிக்கு, ‘ரிலேஷன்ஷிப் சர்வீஸ்’ என்ற ‘வாட்ஸ்அப்’ குரூப்பிலிருந்து ஒரு மெஸேஜ் வந்திருக்கிறது. ‘ஹாய், ஹலோ, எப்படியிருக்கீங்க?’ என்றெல்லாம் இல்லாமல், நேரடியாகவே, ‘உங்கள் ரேட் எவ்வளவு?’ என்றுதான் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அடுத்தடுத்து வந்த மெஸேஜ்களில், ‘நீங்கள் சம்மதித்தால், 30 ஆயிரம் தொடங்கி மூன்று லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்’ என ஜெயலட்சுமியை அலறவிட, அவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் குரூப் மூலம் தூதுவிட்ட பாலியல் தொழில் தரகர்கள் முருகப்பெருமாள், கவியரசு ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

புகார் குறித்து நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி, ‘‘நேபாளி, பிரிவோம் சந்திப்போம், விசாரணை, அப்பா, மாயாண்டி குடும்பத்தார் உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். என் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம், ஆபாசமாக ஒரு மெஸேஜ் வந்தது. முதலில் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்த எண்ணிலிருந்து மெஸேஜ் வருவது நிற்கவில்லை. நான் அந்த நம்பரை பிளாக் செய்த பின்னரும், மெஸேஜ் வருவது தொடர்ந்தது. அதே நபர்கள், வேறு நம்பர்களிலிருந்தும் மெஸேஜ் செய்ய ஆரம்பித்தனர். இதேபோன்ற மெஸேஜ்கள் தங்களுக்கும் வந்துள்ளதாக என் தோழிகள் சிலர் சொன்னார்கள். அந்த நபர்களைச் சும்மா விடக்கூடாது என்று புகார் கொடுத்தேன்’’ என்றார் கோபமாக.
போலீஸ் தரப்பில், “பிடிபட்ட இருவரின் பின்னால், இன்னும் யாரெல்லாம் உள்ளனர் என விசாரணை நடக்கிறது” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த திரையுலகப் பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர், மூத்த அமைச்சர் ஒருவரின் மகன் ஆகியோரின் செல்போன் நம்பர்களும் ஜெயலட்சுமிக்கு வலைவிரித்த வாட்ஸ்அப் குழுவில் இடம் பெற்றிருக்கிறது. இவர்களின் நம்பர்கள் எப்படி அந்தத் தரகர்களால் சேர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை. அவர்களும் அந்தக் குழுவில் மாதக்கணக்கில் இருந்துள்ளனர். இது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அவர்களை போலீஸ் விசாரித்தால், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியில் வரக்கூடும்.

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

நடிகை ஜெயலட்சுமி, போலீஸில் புகார் கொடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் அவரையே குற்றவாளி ஆக்கியிருப்பார்கள். இதேபோல வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து நடிகைகளை வளைக்கும் கும்பல்கள் இப்போது சென்னையில் அதிகரித்துள்ளன. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகைகளின் போன் நம்பர்களை வாங்குவது இப்போதெல்லாம் சிரமமான வேலை இல்லை. நடிகர், நடிகைகளின் முகவரி, புகைப்படம் மற்றும் போன் நம்பருடன் வெளியாகும் ‘சினிமா டைரி’களிலிருந்து தகவல்களை எடுத்துக்கொண்டு இத்தகைய அராஜகத்தில் இறங்கியுள்ளனர். போலீஸாரின் சிலரின் பின்னணியும் இதில் உள்ளது. இதனால், பல நடிகைகளை இவர்கள் மிரட்டுகிறார்கள்.

மூத்த நடிகை ஒருவரின் வீட்டில் புதுமுக நடிகை ஒருவர் வசிக்கிறார். பலமுறை அந்தப் புதுமுக நடிகையை இப்படிப்பட்ட தரகர்கள் கூப்பிட்டுப் பார்த்து, அவர் மறுத்துள்ளார். அடுத்து, அந்த மூத்த நடிகையிடம் தரகர்கள் பேசியுள்ளனர். ‘உன்னை எப்படி கேஸ்ல மாட்டி விடணும்னு எங்களுக்குத் தெரியும். இந்த வயசுல அந்த மாதிரி கேஸ்ல மாட்டினா உன் மரியாதை என்னாகும் என்று யோசித்துப் பார்? நீயே அவளிடம் பேசி அனுப்பி வை’ என்று மிரட்டியுள்ளனர். அந்த மூத்த நடிகை அதிர்ந்துபோய் எங்களிடம் வந்து அழுதார்.சமீபகாலமாக, இப்படிப் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதுபற்றி அவசரமாக விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தச் சம்பவங்கள் மொத்தமாகத் தொகுத்து போலீஸில் புகார் அளிக்கவுள்ளோம்” என்றார்.

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

இந்த ஆண்டு பிப்ரவரியில் கன்னட முன்னணி நடிகை தீப்தி காப்ஸிக்கு இதேபோல் ஒரு சிக்கல் வாட்ஸ்அப் மூலம் வந்தது. ‘பாலியல் தேவைக்கு அழகான இளம்பெண்கள் கைவசம் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும்’ என்று ஓர் எண்ணிலிருந்து மெஸேஜ் வந்தது. உடனே தீப்தி காப்ஸி, ‘நீங்கள் அனுப்பிய மெஸேஜை என் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடுகிறேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளாவிட்டால், உங்கள் குடும்பப் பெண்களை அணுகி ஆக வேண்டியதைப் பாருங்கள். உங்கள் பணமும் மிச்சமாகும்’ என்று பதில் அனுப்பினார். அடுத்து போலீஸிலும் புகார் கொடுத்தார்.

மிரட்டும் தரகர்களுக்கு இந்த முரட்டு வைத்தியம்தான் முற்றுப்புள்ளி வைக்கும்.

- ந.பா.சேதுராமன், படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு