Published:Updated:

நான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...
நான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...

ஆண்களிடம்தான் அடிப்படைக் கோளாறு!

பிரீமியம் ஸ்டோரி

ஹாசினி, காஷ்மீர் கத்துவா சிறுமி, இப்போது சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி... 

‘குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை’ குறித்த செய்திகள் இல்லாமல், நாளிதழ்களையும் செய்தித் தொலைக்காட்சிகளையும் கடந்துசெல்ல முடிவதில்லை. நாடு முழுக்க பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய காஷ்மீர் சம்பவத்தையடுத்து, ‘12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை’ என்ற அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது மத்திய அரசு. ஆனால், அந்தச் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை சென்னை சிறுமிக்கு நிகழ்ந்திருக்கும் கொடூரம் உணர்த்துகிறது. 

‘குழந்தைகள் உரிமைகள்’ தொடர்பாக இயங்கிவரும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் தேவநேயன், ‘‘வீட்டுச் சூழலில் உறவினர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தினராலேயே குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதால், பெரும்பான்மையான பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை. வெளியே தெரியவரும் பிரச்னைகளும் வழக்காகப் பதிவுசெய்யப்படாமல், காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்துகளாகவே முடிந்துவிடுகின்றன. இதையெல்லாம் தாண்டிப் பதிவாகும் வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

நான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...

2016-ம் ஆண்டில் மட்டும் ‘குழந்தைகளுக்குப் பாலியல் தீங்கிழைத்தல்’ என்ற பிரிவின் கீழ் 1,583 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 199 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது. 214 பேர் தண்டனை பெற்றுள்ளனர். சட்டப்படி இந்த வழக்கில் போலீஸார் விசிட், நீதிமன்ற விசாரணை எல்லாம் ஆறு மாதங்களுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், 2014-ம் ஆண்டில் பதிவான 1,065 வழக்குகளில்கூட  73 வழக்குகளில் மட்டுமே தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. சிறுமி ஹாசினி வழக்கில்கூட, குழந்தையைக் கொடூரமான முறையில் சிதைத்து, தீவைத்துக் கொன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகும்கூட, குற்றவாளி தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் வெளியே வந்து அடுத்த கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவானார். அவரைத் தேடிக் கைது செய்தனர். இதன் மூலம் நடைமுறையில் நமது சட்ட திட்டங்களில் எவ்வளவு கோளாறுகள் உள்ளன என்பதை அறிய முடியும்.

இது மட்டுமல்ல... ‘குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்’தான் இதுபோன்ற வழக்குகளைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், இந்த ஆணையத்தில் தனியாக நிரந்தர வழக்கறிஞர் கிடையாது; நிரந்தர ஆவணக் காப்பகம் கிடையாது; நிரந்தர ஆய்வாளர்கள் கிடையாது; ஆன்லைனில் புகார்களைப் பதிவுசெய்யும் வசதியும் கிடையாது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன மாதிரியான முன் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தின் இன்றைய தேவை. குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகள் ‘குடும்பம் - பள்ளி - அரசு’ என அடிப்படைத் தளத்தில் இருந்தே செய்யப்பட வேண்டும். பெண்களைச் சக மனுஷியாகப் பார்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் கல்வியில் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே நல்லெண்ணத்தை வளர்க்கும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆண் - பெண் பாகுபாடுகள் குறித்து அறிவியல்ரீதியில் தெளிவு ஏற்படுத்தும் ‘பாலியல் கல்விமுறை’ அமல்படுத்தப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யாமல், ‘ஆடை விஷயத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்வதும், பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக் கொடுப்பதுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கே பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். நான்கு மாதக் குழந்தையில் ஆரம்பித்து 80 வயது மூதாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்றால், அடிப்படைக் கோளாறு ஆண்களிடத்தில் இருக்கிறது.

அரசு சார்பில், குழந்தைப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகளின் ஊழியர்களாக மாவட்டம்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகிறார்கள். பாதிப்பு ஏற்பட்ட பிறகு குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்தல் என்பதாக இவர்களின் பணி இல்லாமல், பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பதே இவர்களின் வேலையாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

நான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...

‘‘குழந்தைகள்மீது பாலியல் வன்முறை நிகழ்த்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதாலேயே குற்றங்கள் குறைந்துவிடாது. நிர்பயா வழக்கில்கூடத் தூக்குத் தண்டனைதான் கொடுத்தார்கள். அதன்பிறகுக் குற்றங்கள் குறைந்துவிட்டனவா? பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களேகூட சரிவரப் புகார் கொடுப்பதில்லை. ‘நாம் குற்றவாளிகள் அல்ல; பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற உண்மை நிலையை அவர்கள் தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

மனநல மருத்துவர் ஷாலினி, ‘‘ஆண்களுக்கு ‘கலவியல் வேட்கையை எப்படிக் கையாள வேண்டும்’ என்ற விஷயத்தைச் சொல்லித் தராமல், குற்றம் செய்தால் தண்டித்துவிடுவேன் என்று மிரட்டுவது பயனளிக்கும் என்று தோன்றவில்லை. ஏனெனில், இந்த விஷயத்தைப் பற்றி ஆண்களிடம் பேசினாலே, பதிலுக்கு அவர்கள் பெண்களைக் குற்றம் சுமத்திப் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆண் குழந்தைகள் வளர்க்கப்படும் விதம், சமுதாயத்தில்  அவர்களுக்குச் சொல்லித்தரப்படும் விஷயங்கள் என அனைத்துமே பெண்களுக்கு எதிரானவையாகவே உள்ளன. பிரச்னை, ஆண்களிடம்தான் உள்ளது. ‘அவர்களின் இயலாமை என்ன... இதை எப்படிக் கையாள வேண்டும்?’ என்பதையெல்லாம் அவர்களின் சிறுவயதிலிருந்தே தோழமையுடன் சொல்லித் தரவேண்டியது அவசியம்’’ என்கிறார்.

குற்றங்களுக்கான தண்டனை பற்றி விவாதிப்பதைவிட, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதே சரியான வழியாக இருக்கும்.

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு