Published:Updated:

``முகத்தில் பெருக்கல் குறி; தலையில் வட்டம்!'- முதல்வர் நாராயணசாமியை பதறவைத்த தம்பதி கொலை

``முகத்தில் பெருக்கல் குறி; தலையில் வட்டம்!'- முதல்வர் நாராயணசாமியை பதறவைத்த தம்பதி கொலை
``முகத்தில் பெருக்கல் குறி; தலையில் வட்டம்!'- முதல்வர் நாராயணசாமியை பதறவைத்த தம்பதி கொலை

முகத்தில் பெருக்கல் குறியிட்டும், தலையில் வட்டமிட்டும் புதுச்சேரி தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (72). இவரின் மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருக்கும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பிள்ளைகள் அனைவரும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் நிலையில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் அடுக்குமாடி வீட்டின் தரை தளத்தில் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். தினமும் காலையில் பாலகிருஷ்ணன் தன் நாய் மற்றும் நண்பர்களுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்படி இன்று காலை வாக்கிங் செல்வதற்காக பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு அவரின் நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டின் முன்புற கேட் திறந்திருந்ததால் வீட்டினுள் சென்று காலிங் பெல்லை அடித்திருக்கிறார். ஆனால், பாலகிருஷ்ணன் வெளியே வராததால் வீட்டினுள் சென்று பார்த்திருக்கிறார். பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் இல்லாத நிலையில், அவர்களின் படுக்கை அறைக் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், படுக்கை அறையைத் திறந்து பார்த்திருக்கிறார். அங்கிருந்த கட்டிலில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் கட்டிலின் இருபுறமும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

உடனே அங்கு வந்த போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். கொலைகள் நடந்த இடம் முதல்வர் நாராயணசாமியின் நெல்லித்தோப்பு தொகுதிக்குள் வருகிறது என்பதால் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அவருடன் காவல்துறை டிஜிபி சுந்தரி நந்தா, டி.ஐ.ஜி சந்திரன், எஸ்.எஸ்.பி அபூர்வா குப்தா ஆகியோரும் ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``அண்ணா நகர் தெருக்கள் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க அவரவரும் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்யும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புதுச்சேரியில் கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. பணம் நகைக்காக கொலை நடைபெற்றதா அல்லது வேறு எதேனும் காரணத்துக்காக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்” என்றார். 

கொலை செய்யப்பட்ட இருவரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் உறவினர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தேனீ ஜெயக்குமாரின் மகளைத்தான் தங்களின் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் நிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ``நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் அப்படியே இருப்பதால் அவைகளுக்காக கொலை நடந்ததாகத் தெரியவில்லை. அதேசமயம் வீட்டில் பல்வேறு இடங்களையும் அலசித் தேடிப் பார்த்தற்கான அடையாளங்கள் தெரிவதால் வேறு ஏதேனும் ஆவணங்களுக்காக கொலை நடந்திருக்கலாம்” என்றார் டி.ஜி.பி சுந்தரிநந்தா.

``ஹேமலதாவை அவர்கள் தலையணை வைத்துக் கொலை செய்துள்ளனர். ஆனால், பாலகிருஷ்ணனை அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளது. அவரது கையை முறுக்கி உடைத்து முதுகின் பின்னால் வைத்ததோடு, அவரின் கழுத்தையும் காலால் மிதித்துக் கொன்றிருப்பதுபோல தெரிகிறது. அவரின் தலையில் பலமாக தாக்கியதற்கு அடையாளமாக ரத்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல பாலகிருஷ்ணன், தன் மனைவி மற்றும் மகன்கள், மருமகளுடன் எடுத்த குரூப் போட்டோ ஒன்று லேமினேட் செய்யப்பட்டிருந்தது. அதை எடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ஹேமலதா முகத்தில் பென்சிலால் பெருக்கல் குறியும், அவர்கள் பின்னால் நின்றிருக்கும் பெண்ணின் தலையில் வட்டமிட்டும், மற்றவர்கள் முகத்தில் டிக்கும் அடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்ட கொலையா அல்லது இது திசை திருப்பும் முயற்சியா என்பது இனிதான் தெரியும்” என்றனர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள்.

மர்மமான முறையில் நடைபெற்றிருக்கும் இந்தக் கொலைகள் புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.