Published:Updated:

சாப்பாடு... சிகரெட் வாங்கிக்கொடுத்து காவல் துறையை வளைக்கும் யுவராஜ் தரப்பு!

நீதிமன்றத்துக்குள் சென்று கூண்டுக்குள் நின்றுகொண்டு நீதிபதியையே கமென்ட் அடிக்கிறார்கள். சாட்சிகளைப் பார்த்து மீசையை முறுக்குகிறார்கள்.

சாப்பாடு... சிகரெட் வாங்கிக்கொடுத்து காவல் துறையை வளைக்கும் யுவராஜ் தரப்பு!
சாப்பாடு... சிகரெட் வாங்கிக்கொடுத்து காவல் துறையை வளைக்கும் யுவராஜ் தரப்பு!

``கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்காக யுவராஜ் மற்றும் அவர் தரப்பு குற்றம்சாட்டப்பட்டவர்கள், சிறையிலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக பிக்னிக் வருவதைப்போல நாமக்கல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். மதிய உணவு இடைவேளைவிட்டதும் நடிகர்கள் கேரவனுக்குள் சென்று ஆடை மாற்றுவதைப்போல வேனுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொள்கின்றனர். பாதுகாப்புக்கு வரும் காவல் துறையினருக்கு சிகரெட் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்கள் முகத்திலேயே ஊதுகிறார்கள். யுவராஜ் தரப்பினர் வாங்கிக் கொடுக்கும் உணவுக்காகவும், சிகரெட்டுக்காகவும் போலீஸார் சேவகம் செய்கிறார்கள். யுவராஜ் தரப்பினருக்கு சிகரெட் பற்றவைத்துக் கொடுப்பதுதான் பாக்கி'' என்கிறார்கள், நீதிமன்றத்துக்கு வரும் நடுநிலையாகப் பேசக்கூடிய வழக்கறிஞர்கள்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ், 23.6.2015 அன்று கல்லூரிக்குச் செல்வதாகக் காலையில் சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அடுத்த நாள் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
அதையடுத்து காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், ``கோகுல்ராஜும், ஸ்வாதியும் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குச் சென்றார்கள். அவர்களிடம் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், `நீங்க என்ன சாதி, இருவரும் காதலிக்கிறீர்களா' என்று மிரட்டி ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை கூட்டிச் சென்றுள்ளார். அதன்பிறகு, கோகுல்ராஜ் உயிரற்ற சடலமாகப் பார்க்கப்பட்டதால் இந்தக் கொலையை யுவராஜ் செய்திருக்கக்கூடும்" என அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு போட்ட போலீஸுக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டுத் தலைமறைவாக இருந்ததோடு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் வாயிலாகக் காவல் துறைக்குச் சவால்விட்டார், யுவராஜ். இதனால் தமிழகக் காவல் துறைக்குக் களங்கம் ஏற்பட்டதே தவிர, அவரைப் பிடிக்க முடியவில்லை. இறுதியாக யுவராஜ் தானாக வந்து சரணடைந்தார். அதையடுத்து யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்கு விரிந்தது. பிறகு, இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தற்போது நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் அம்மா சித்ரா தரப்பில் வழக்கறிஞர் நாராயணனும், யுவராஜ் தரப்பில் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜுவும் வாதாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், யுவராஜ் தரப்பில் இறந்துபோன ஜோதிமணியும், தலைமறைவாக உள்ள அமுதரசு தவிர யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், யுவராஜ் கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ரவி என்கிற ஶ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு,கிரி, சந்திரசேகரன் ஆகிய 15 பேரும் ஒவ்வொரு வாய்தாவின் போதும் நீதிமன்றத்தில் ஆஜராக வரும்போதுதான் இப்படி அலப்பறை செய்வதாகத் தெரிவிக்கிறார்கள்.

இதுபற்றி சில நடுநிலைமையாகப் பேசக்கூடிய வழக்கறிஞர்கள், ``கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன், அம்மா சித்ரா மற்றும் குடும்ப உறவினர்கள் அவர்களுடைய விசாரணையின்போது வந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் நீதிமன்றம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர் முதல் இரண்டு நாள்கள் வந்தார்கள். அதன்பிறகு அவர்களும் யாரும் வருவதில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன் இந்த வழக்கில் சாட்சியமாகவும் இந்த வழக்கையும் முன்னெடுத்துச் செல்கிறார்.

ஆனால் யுவராஜ் தரப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட கார்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள், குடும்ப உறுப்பினர்கள் சகிதமாகக் கூடுகிறார்கள். யுவராஜ் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கட்சிக் கூட்டத்துக்கு வருவதைப்போல வருவதும், நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் பேசுவதும், கட்சியின் புதிய உறுப்பினர்களைத் தலைவர் யுவராஜுக்கு அறிமுகம் செய்துவைப்பதும், கட்சித் தீர்மானம், வரவு - செலவு கணக்குகளைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கிறார்கள்.

நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் கூப்பிட்டதும், நீதிமன்றத்துக்குள் சென்று கூண்டுக்குள் நின்றுகொண்டு நீதிபதியையே கமென்ட் அடிக்கிறார்கள். சாட்சிகளைப் பார்த்து மீசையை முறுக்குகிறார்கள். பிறகு, நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு உணவு இடைவேளைவிட்டதும் நடிகர்கள் சூட்டிங் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ஆடை மாற்றி வருவதைப்போல யுவராஜும் வேனுக்குள் சென்று டீ சர்ட் மாற்றிக்கொண்டு வருகிறார். பிறகு, கட்சிக்காரர்களிடம் ஜாலியாகப் பேசிவிட்டு உணவு அருந்துகிறார். கட்சிக்காரர்களும் யுவராஜ் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்வதுமாக இருக்கிறார்கள்.

யுவராஜ் டிரைவர் அருண் மற்றும் அவர் பாதுகாப்புக்கு வரும் போலீஸாரும் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள ஹோட்டலில்  நுழைந்து முழுச் சாப்பாட்டுடன் நாட்டுக் கோழி ஃபிரை, ஆம்லேட் என வகைவகையாகச் சாப்பிட்டுகின்றனர். சிகரெட் பாக்கெட்டிலிருந்து நான்கை உருவி, கூட இருக்கும் போலீஸாருக்குக் கொடுக்கின்றனர். அதில், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து போலீஸார் மீதே புகைவிடுகின்றனர். காவல் துறையினர் யுவராஜ் தரப்பினருக்கு இன்னும் சிகரெட் பற்றவைத்துக் கொடுப்பதுதான் பாக்கியாக இருக்கிறது. அவர்கள் வாங்கிக்கொடுக்கும் சாப்பாட்டுக்கும், சிகரெட்டுக்கும் மித மிஞ்சிய சேவகம் செய்கிறார்கள்'' என்று குமுறுகிறார்கள்.

காவல் துறையினரின் சேவகம் இப்படியா இருக்க வேண்டும்?