Published:Updated:

``விஷ்ணுப்ரியாவிடம் எஸ்.பி என்ன பேசினார்?’’ - நீதிமன்றம் விதித்த 6 மாத கெடு

``விஷ்ணுப்ரியாவிடம் எஸ்.பி என்ன பேசினார்?’’ - நீதிமன்றம் விதித்த 6 மாத கெடு
``விஷ்ணுப்ரியாவிடம் எஸ்.பி என்ன பேசினார்?’’ - நீதிமன்றம் விதித்த 6 மாத கெடு

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கைக் கைவிடுவதாக சிபிஐ  தாக்கல்செய்திருந்த அறிக்கையை ஏற்க மறுத்த கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மீண்டும் தொடர் விசாரணைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

'கோகுல்ராஜ் கொலை வழக்கின்' விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, கடந்த 2015-ம் ஆண்டு தனது முகாம் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில், உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்து, பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி, இந்த வழக்கை கைவிடுவதாக, கடந்த மே மாதம் கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்தது. இதை எதிர்த்து பதில் மனு தாக்கல்செய்த விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி,  "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம், சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை.  ஆதாரங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆகையால், நீதிமன்றமே அவர்களை  விசாரிக்க  வேண்டும்" என்று வாதம்செய்துவந்தார்.
 

இந்த பதில் மனுவைத் தொடர்ந்து, " சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். சிபிஐ தாக்கல்செய்திருந்த அறிக்கையில், விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு 32 நொடிகள் எஸ்பி செந்தில்குமாரோடு பேசியுள்ளார். அதில் என்ன பேசினார் என்ற விவரம் அறிக்கையில் இல்லை. அதை ஆராய வேண்டும். சிபிசிஐடி அறிக்கையில் உள்ள வாக்குமூலங்களுக்கும் சிபிஐ அறிக்கையில் உள்ள வாக்குமூலங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், 'எங்களிடம் கொடுத்த வாக்குமூலமே உண்மை' என்று  சிபிஐ தெரிவிக்கிறது. அதை அறிக்கையாக மட்டுமல்லாமல்,  வீடியோவாகவும் பதிவுசெய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மற்றும் எஸ்பி செந்தில்குமார் ஆகியோரது செல்போன் அழைப்புத் தகவல்களை ஆராய வேண்டும். டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை ஆராய வேண்டும்."  இந்த விசாரணையை 6 மாதங்களுக்குள்ளாக முடித்து, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி, " நிச்சயம் நீதி வெல்லும். எனது மகள் தற்கொலைக்கு எஸ்பி செந்தில்குமார்தான் காரணம். அவரை நான் சும்மா விடமாட்டேன். நீதிமன்றத்தின் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஜனாதிபதி வரை சென்று புகார் கொடுக்கத் தயாராக உள்ளேன்" என்றார் ஆதங்கம் குறையாமல்.