Published:Updated:

``சமூக வேறுபாடுகளைக் களைய கருத்தியல்ரீதியிலான போராட்டம் தேவை!" - நீதியரசர் கே.சந்துரு!

``வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே நிலக்கிழார்கள். மேலும், அவர்கள் பணக்காரர்கள். கவுரவம் மிக்க சமூகப் பொறுப்பிருக்கும் அவர்கள், இந்தக் குற்றத்தை இழைத்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

``சமூக வேறுபாடுகளைக் களைய கருத்தியல்ரீதியிலான போராட்டம் தேவை!" - நீதியரசர் கே.சந்துரு!
``சமூக வேறுபாடுகளைக் களைய கருத்தியல்ரீதியிலான போராட்டம் தேவை!" - நீதியரசர் கே.சந்துரு!

``கீழ்வெண்மணி படுகொலைகள் தொடர்பாக ஆய்வுகள் முழுமையாக நடத்தப்படவில்லை” என்று நீதியரசர் கே.சந்துரு தெரிவித்திருக்கிறார்.

``கீழ்வெண்மணி” மறக்க முடியுமா, இந்தப் பெயரை? அரைப் படி நெல் அதிகமாகக் கேட்ட அப்பாவித் தொழிலாளர்கள்மீது அரங்கேற்றப்பட்ட வன்முறை, 44 பேரின் உயிரைக் குடித்தது. பெண்கள், குழந்தைகள் என 39 பேர் உடல் கருகி சாம்பலானதை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாது. தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாள் முறை உச்சம்தொட்டிருந்த காலகட்டம். நிலத்தில் கூலி வேலை செய்யும் தலித் மக்கள், பண்ணை அடிமைகளாக்கப்பட்டுக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். வேலையில் தொய்வு தெரிந்தால் மாட்டுச் சாணத்தைத் தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும். அப்படியும் சரிவரவில்லை என்றால், ஜமீன் அடியாட்களின் சவுக்குத் தடிகளும், சாட்டைகளும்  எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு உடலுக்குள் ஊடுருவும். கல்வி உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு அன்றைய நாள்களில் வழங்கப்பட்ட கூலி, நாளொன்றுக்கு ஒருபடி நெல் மட்டுமே. அதை உயர்த்திக் கேட்டதால், உயிரோடு கொளுத்தப்பட்டனர். தமிழகத்தின் கறுப்பு வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத நாள் 1968 டிசம்பர் 25. இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியதற்காகக் கைதுசெய்யப்பட்ட கோபால கிருஷ்ண நாயுடு உள்ளிட்ட 7 ஜமீன்தார்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டனர்.

அந்தத் தீர்ப்பின் சாராம்சம் இதுதான். ``வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே நிலக்கிழார்கள். மேலும், அவர்கள் பணக்காரர்கள். கவுரவம் மிக்க சமூகப் பொறுப்பிருக்கும் அவர்கள், இந்தக் குற்றத்தை இழைத்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். அதனால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை”. இன்றளவும் அந்தச் சம்பவத்துக்கு நிகராக நினைவுகூரப்படும் மற்றொரு விஷயம் அதன் தீர்ப்புதான். ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய அந்தப் படுபாதகச் செயல் அரங்கேற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

அதை நினைவுகூரும் விதமாக, ``கீழ்வெண்மணி அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு” என்ற நிகழ்வை மணற்கேணி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரியில் நடத்தியது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நீதிபதி கே.சந்துரு, ``கீழ்வெண்மணி போராட்டம் நடந்ததற்கான முக்கியக் காரணம் கூலி உயர்வு கோரிக்கை. இன்றளவும் கீழ்வெண்மணி சம்பவம் தொடர்பாக முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. மக்களின் போராட்டங்களின் மூலமே நீதிமன்றத் தீர்ப்பை மக்களுக்கானதாக மாற்ற முடியும். அதற்கு அவசியமானது ஒன்றுபட்ட இயக்கம். அதன் வழியாகத்தான் கருத்தியல்ரீதியாகப் போராட வேண்டும். 

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தது. அதன் விளைவாக அமைக்கப்பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷனின் அறிக்கையின்படி, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வேண்டும் என்ற சட்டம் தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் இயற்றப்பட்டது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே பலருக்கு தெரியாது. கீழ்வெண்மணி சம்பவம் போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கவும், அதுபோன்று இனியும் நடைபெறாமல் தடுக்கவும் ஒன்றுபட்ட இயக்கம் அவசியம் தேவை. 

சம்பவம் முடிந்து நூறு நாள்கள் கழித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் 25,000 விவசாயிகள் பேரணியாகத் திரண்டனர். அதனை ஏற்று நில உச்சவரம்பை 15 ஏக்கர்களாகக் குறைத்தது, அரசு. அதேபோல மீதமுள்ள உபரி நிலங்களைக் கைப்பற்றி நிலமில்லாதவர்களுக்குக் கொடுப்பது தொடர்பாகக் குழு ஒன்றையும் அமைத்தது. ஆனால், நிலச் சீர்திருத்த சட்டத்தின்படி தமிழகத்தின் ஒருசில கிராமங்களைத் தவிர, உபரி நிலங்களை மீட்டெடுத்ததாகவோ, அப்படி மீட்கப்பட்ட நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் இல்லை. அதேபோல நியாயமான கூலி தொடர்பாக அரசு இயற்றிய சட்டம் தஞ்சை மாவட்டங்களைத் தாண்டி தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்படவில்லை. டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் இன்றளவும் பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அப்படியான போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் விவசாயச் சங்கங்கள் அனைத்தும் சாதிரீதியாகப் பிரிந்து கிடப்பதுதான். சாதி ஒழிப்புக்காகவும், வர்க்க வேறுபாடுகளைக் களைவதற்காகவும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சாதியரீதியான கட்டமைப்புகள் ஒழிந்துவிட்டதாக நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போதும் சமூக வேறுபாடுகள் தெளிவாகப் பின்பற்றப்படுகிறது. அந்த நிலையை மாற்றுவதற்குக் கருத்தியல்ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், ``நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகளான கீழ்வெண்மணி தலித்களைக் குடிசைக்குள் வைத்து எரித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இடதுசாரிகள்மூலம் நாடு முழுவதுமுள்ள மக்களின் கவனத்துக்கு அந்தச் சம்பவம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தக் கோரமான நிகழ்வின் தாக்கத்தால் தமிழகத்தின் அரசியல், சட்டம் மற்றும் நீதி ஆகிய தளங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. தற்போது தலித் மக்களுக்காகப் பல சட்டப் பாதுகாப்புகள் இருந்தாலும் அவர்கள்மீதான கொடுமைகள் கொஞ்சமும் குறையவில்லை. விவசாயச் சங்கங்களும் நிலம் வைத்திருப்பவர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுகின்றதே தவிர, நிலமற்ற விவசாயிகள் குறித்தோ, விவசாயக் கூலிகள் பற்றியோ அவை ஒருபோதும் பேசுவதில்லை. இன்றைக்குத் தமிழகத்தில் எந்தக் குரலுமற்றவர்களாகத்தான் விவசாயக் கூலிகள் இருக்கின்றனர். அதற்குக் காரணம், விவசாயக் கூலிகளாக தலித்களே அதிகமாக இருப்பதுதான். அந்த நிலையை மாற்ற வேண்டும்” என்றார்.