Published:Updated:

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

Published:Updated:
சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

டுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்குப் பிறகு, சாதிக்கு எதிராக களமாடிக்கொண்டிருக்கும் அவரின் காதல் மனைவி கௌசல்யா தற்போது மறுமணம் செய்துகொண்டிருப்பது... ஒருபக்கம் கொண்டாட்டம்... மறுபக்கம் ஏராளமான சர்ச்சை எனப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சங்கர் கொலை செய்யப்பட்ட நிமிடம் தொட்டே... துணிச்சலாகச் சாதி ஆதிக்கக் கும்பலுக்கு எதிரான தன் போராட்டத்தை ஆரம்பித்துவிட்ட கௌசல்யாவை, கட்டம் கட்டி விமர்சித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆதிக்கச் சாதியினரால் இதுநாள் வரை முன்வைக்கப்பட்டுவந்த அந்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில், கௌசல்யா கரம் பிடித்திருக்கும் ‘நிமிர்வு கலையகம்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை முன்வைத்து வேறுவிதமாகச் சர்ச்சைகள் வெடித்திருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது. ‘இந்த சக்தி, ஏற்கெனவே நிறையப் பெண்களை ஏமாற்றியுள்ளார்... அந்தப் பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டிய இடத்தில் உள்ள கௌசல்யா, அவரையே  திருமணம் செய்திருக்கிறார்’ என்பது தான் சர்ச்சைகளின் மையப்புள்ளி.

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

2016-ம் ஆண்டு மார்ச்  13-ம் தேதி, சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காக சங்கர்-கௌசல்யா தம்பதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் விரட்டி விரட்டி வெட்டப்பட்டனர். இதில் சங்கர் மரணமடைந்தார். உயிர் பிழைத்த கௌசல்யா, ‘சங்கர் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டேன்’ என்று சபதம் போட்டு, தன் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்குத் தண்டனை பெற்றுத் தந்தது, அவரை சாதி ஒழிப்புப் போராளியாக தமிழகம் முழுக்க அறியச் செய்தது. சாதி எதிர்ப்புப் போரை மேற்கொண்ட கௌசல்யா, பறை இசைக்கக் கற்றுக்கொண்டு, ‘சங்கர் தனிப் பயிற்சி மையம்’ என்ற பெயரில் பறை பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். ‘சங்கர் சமூக நீதி அறக்கட்டளை’யைத் தொடங்கி முழுவீச்சில் சமூகச் செயல்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

இந்நிலையில்தான், டிசம்பர் 9 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், எவிடன்ஸ் கதிர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் முன்னிலையில் சக்தியைத் திருமணம் செய்துள்ளார் கௌசல்யா. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், பா.இரஞ்சித் உள்ளிட்டோர் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்த சூழலில்தான், சமூக வலைதளங்களில் சக்தியைப் பற்றிய சர்ச்சைகளும் சுழன்றடிக்க ஆரம்பித்தன.

‘சங்கர் சமூகநீதி அறக்கட்டளை’யை நிர்வகித்து வந்த ஜீவானந்தமும், இது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்துள்ளார். அவரிடம்  கேட்டபோது, “கௌசல்யா மறுமணம் செய்துகொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் யாரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சங்கரின் இடத்தில் யாரை வைத்துள்ளார் என்பதைத்தான் தாங்க முடியவில்லை. கௌசல்யாவின் அரசியலுக்கு நான் உடனிருந்து உதவி வந்தேன். அறக்கட்டளையின் வேலைகளையும் கவனித்து வந்தேன். பறை கற்க வந்த ஒரு பெண்ணை பல வருடங்களாக சக்தி காதலிக்கும் விஷயம், கலையகத்துக்குள் இருக்கும் பெண் தோழர்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தது. அந்தப் பெண்ணும் சக்தியை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்கைப் மூலம் தன்னிடம் பறை இசை பயின்று வந்த வெளிநாட்டுப் பெண்ணோடும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் சக்தி. விவாகரத்தான அப்பெண்ணுக்கு குழந்தை இருக்கிறது. இன்னொரு பெண்ணுடனும் பழகிக் கொண்டே, வெளிநாட்டுப் பெண்ணையும் சக்தி ஏமாற்றுகிறார் என்பது கலையகத்தில் உள்ள சில பெண்களுக்குத் தெரிந்து, பிரச்னையாக வெடித்தது. இது தெரிந்ததும் பறை கற்க வந்த பெண், சக்தியிடம் சண்டையிட்டு விலகிவிட்டார். உண்மை தெரிந்து வெளிநாட்டுப் பெண்ணும் நாடு திரும்பிவிட்டார். பிறகு, எப்படியோ போராடிப் பறை கற்க வந்த பெண்ணிடம் மீண்டும் ஒட்டிக்கொண்டார் சக்தி.

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!

இந்தச் சூழலில்தான், கலையகத்தில் இருந்த ஒரு பெண்ணை, அவர் தூங்கும்போது சக்தி பாலியல் ரீதியாகத் தீண்டினார் என்று சர்ச்சை வெடித்தது. ஆனால், அந்தப் பெண் மீதே பழியைப் போட்டுப் பிரச்னையைத் திசை திருப்பிவிட்டார்கள். ‘பெண் விடுதலைதான்.. மண் விடுதலை’ என்று மேடையில் முழங்கும் சக்தி.. பெண்களை இப்படி ஏமாற்றுவது தெரிந்ததும், கலையகத்திலிருந்து பலரும் வெளியேற ஆரம்பித்தார்கள். இதையடுத்து, இந்தப் பிரச்னையை மறைக்கும் வகையில், சில மாதங்களுக்கு கலையகத்திலிருந்து சக்தியை நீக்கிவிட்டு, மீண்டும் சேர்த்துக்கொண்டார்கள் நிர்வாகிகள் சிலர்.

இந்தச் சர்ச்சையான தருணத்தில் சக்தியை கௌசல்யா காதலிக்கும் விஷயம் எங்களுக்குத் தெரியவர, கௌசல்யாவைக் காப்பாற்ற கலையகத்திலிருந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் போராடினோம். அப்போதுதான், திருநங்கை ஒருவரிடம் வீடியோ சாட்டிங் மூலமாக சக்தி ஆபாசமாக நடந்துகொண்டது ஆதாரத்துடன் கலையகத்தில் உள்ளவர்களுக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அதை சக்தியிடமே கொடுத்துவிட்டார்கள். அவர் கௌசல்யாவிடம் கொடுக்க, சம்பந்தப்பட்ட திருநங்கைக்கே திருப்பி அனுப்பி, ‘இந்தப் பிரச்னையை வெளியில் சொல்லாதீர்கள்’ என்று கூறியுள்ளார் கௌசல்யா.

இது சம்பந்தமாக கௌசல்யாவிடம் நான் பேசியபோது, ‘எனக்கு சக்தி முக்கியம்’ என்றார். ‘அரசியல் நிலைப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு காலம் பணியாற்றினோம். அதுவே இல்லையெனும்போது எதற்கு அங்கு இருக்க வேண்டும்’’ என்றபடி அங்கிருந்து வெளியேறி விட்டேன். இப்போது, ‘பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், சாதி ஆணவத்துடன் நடந்து கொண்டார். அதனால்தான் சக்தி அவரைவிட்டு விலகினார். எல்லாம் தெரிந்தே நான் சக்தியைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் கௌசல்யா. அந்தப் பெண்ணும் கௌசல்யாவுக்கு நெருக்கமானவர்தான். தன் காதல் பிரச்னையைப் பற்றி கௌசல்யாவிடமே ஆரம்பத்தில் அவர் பேசியபோது, ‘ஏற்கெனவே சக்தியை பதிவுத் திருமணம் செய்துவிட்டேன்’ என்று சொல்லியிருக் கிறார் கௌசல்யா. ஆனால், அது பொய். ஒரு பெண்ணின் காதலைக் கொச்சைப்படுத்தி, தன் காதலை நியாயப்படுத்தும் கௌசல்யா, நிச்சயம் ஒருநாள் உண்மையை உணர்வார்’’ என்று விரிவாகச் சொல்லி முடித்தார் ஜீவானந்தம்.

சக்தியிடம் பேசியபோது, “இது தொடர்பாக எதையும் பேசுவதற்கே நாங்கள் விரும்பவில்லை. எங்கள் தரப்பு நியாயத்தைச் சொன்னால், அவர்கள் இன்னொரு நியாயத்தைச் சொல்வார்கள். நாங்கள் செய்ய வேண்டிய சமூகப் பணிகள் நிறைய இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தவே விரும்புகிறோம்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது,  “அவர்கள் இருவரும் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் வந்து எங்களிடம் புகாரைச் சொல்ல வில்லையே. யார் இந்த ஜீவானந்தம்... ஆர்.எஸ்.எஸ்-காரரா? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.? இதை யோசித்தாலே அவருடைய உள்நோக்கம் தெரிந்துவிடும்” என்று சூடாகச் சொன்னார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்பதால் அவற்றை மறைத்துள்ளோம். அவர்கள் தரப்பிலும் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் தரப்பின் கருத்துகள் கிடைத்ததும் வெளியிடுவோம்.

கௌசல்யா சாதி ஒழிப்புப் போராளி மட்டுமல்ல, பெண் விடுதலைக்கான அடையாளம் என்பதற்காகவும்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் திருமணம் செய்திருக்கும் சக்தி மீதே பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பாய்ந்திருக்கும் நிலையில், தன் தரப்பை கௌசல்யா வெளிப்படையாகப் பேசித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எப்போதுமே உயிர்ப்புடன்தான் இருக்கும். அது, அவருடைய எதிர்காலப் போராட்டங்களின்போது எதிர் விமர்சனங்களைக் கிளப்பி, அவரை முடக்கிப் போடும் ஓர் ஆயுதமாகவும் மாறும் என்பதுதான் உண்மை.

- எம்.புண்ணியமூர்த்தி