Published:Updated:

உடலைத் தேடும் போலீஸார்..! - சென்னை க்ரைம் திகில்

கைரேகையை வைத்து, ஆதார் மூலமாக விவரமறிய போலீஸார் முயற்சித்தனர். அதற்கான அனுமதி கிடைக்காதது ஒருபுறமிருக்க, வெட்டப்பட்டு பலமணிநேரத்துக்கு பிறகே கை கண்டெடுக்கப்பட்டதால், கைரேகை எடுக்கும் அளவுக்கு ரேகைகளும் இல்லை.

உடலைத் தேடும் போலீஸார்..! - சென்னை க்ரைம் திகில்
உடலைத் தேடும் போலீஸார்..! - சென்னை க்ரைம் திகில்

சென்னை பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட க்ரைம் வழக்கில் 10 நாள்களாகியும், கொலை செய்யப்பட்ட பெண் யார், குற்றவாளி யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்யப்பட்ட உடல் மற்றும் தலையைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 20-ம் தேதியன்று அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகளால் சென்னை மாநகரமே பீதியில் உறைந்தது. அன்று மாலை ஐந்து மணியளவில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் ரத்தக் கறையுடன் அரிசி மூட்டைப் பை ஒன்றைக் குப்பை பொறுக்கும் இளைஞர்கள் சிலர் கண்டெடுத்தனர். அதில் ஒரு கை, இரண்டு கால்கள் உறைந்த ரத்தத்துடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அதுபற்றி பள்ளிக்கரணை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக, இவ்வழக்கை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு 10 நாள்களாகியும் குற்றவாளியையும் நெருங்க முடியவில்லை. தலை மற்றும் உடலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னை மாநகர போலீஸாரின் புலன்விசாரணைக்கு மிகப்பெரிய சவாலாக இந்த வழக்கு மாறியுள்ளது.

போலீஸ் விசாரணையில் 'இரண்டு கால்களும், வலது கையும் ஒரு பெண்ணுடையது' என்பது உறுதியாகியுள்ளது. வலது கையில் டிராகன், இரண்டு பொம்மைகள் டாட்டூவாகப் பச்சை குத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் குப்பை சேகரிப்புக் கிடங்கிலிருந்து, குப்பையோடு, குப்பையாக உடல் பாகங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்குக் கொட்டப்பட்டு, பின்னர் பெருங்குடி கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

'அந்த உடல் பாகங்கள், கண்டெடுக்கப்படுவதற்கு 20 மணிநேரத்துக்கு முன்னதாக வெட்டப்பட்டிருக்கலாம்' என்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி ஜனவரி 19-ம் தேதி இரவு 10 மணிவாக்கில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்பது புலனாகிறது. இதனடிப்படையில், குப்பைத் தொட்டிகளில் 19-ம் தேதி இரவிலோ, 20-ம் தேதி அதிகாலையிலோ யாராவது சந்தேகப்படும்படியான வகையில் குப்பை கொட்டினார்களா என்று போலீஸார் விசாரணையில் இறங்கினர். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையிலும் உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே மீட்கப்பட்ட உடல் பாகங்கள் மின்சார ரம்பத்தால் அறுக்கப்பட்டிருக்கலாம் என்றும், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் வயது 30 முதல் 35 வயதுக்குள் இருக்குமென்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வயதில் தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களின் பட்டியலின் அடிப்படையிலும் போலீஸார் துப்பு துலக்கினர். என்றாலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கர்நாடகா, ஆந்திராவில் காணாமல் போன பெண்களின் பட்டியல் தற்போது எடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காலில் அணிந்திருக்கும் மெட்டியை வைத்து, கொல்லப்பட்டிருக்கும் பெண் திருமணமானவர் என்கிற கோணத்திலும் விசாரணை செல்கிறது. கைரேகையை வைத்து, ஆதார் மூலமாக விவரமறிய போலீஸார் முயற்சித்தனர். அதற்கான அனுமதி கிடைக்காதது ஒருபுறமிருக்க, வெட்டப்பட்டு பலமணிநேரத்துக்கு பிறகே கை கண்டெடுக்கப்பட்டதால், கைரேகை எடுக்கும் அளவுக்கு ரேகைகளும் இல்லை.

சென்னை மாநகரில் பெரும்பாலும் குப்பைகள் இரவு நேரத்தில்தான் சேகரிக்கப்படுகின்றன. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இதன்படி பார்த்தால், 10 மணிக்குக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அறுத்து, அதை ஒரு மூட்டையில் கட்டி, குப்பைத் தொட்டியில் போட கொலையாளிகளுக்கு இருந்த அவகாசம் 4 மணி நேரம் மட்டுமே. கொலையாளிகள் உடல் பாகங்களை நிதானமாக வெட்டியிருப்பதை கை, கால்களை ஆய்வுக்கூறு சோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், வடபழனி ஏரியாவில்தான் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலும் வெட்டப்பட்டிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

கை, கால்கள் அடைத்துவைக்கப்பட்ட பை எங்கேயிருந்து வந்தது, உடலை அறுக்க மின்சார ரம்பம் பயன்படுத்தப்பட்டதா அல்லது மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் கத்திப் பயன்படுத்தப்பட்டதா என்ற அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருநங்கைகள் பெரும்பாலும் தங்களது கை மற்றும் முதுகுகளில் டாட்டூ குத்திக் கொள்வது வழக்கம். அவர்களுக்கு சொந்தபந்தங்களிடம் தொடர்பு இருக்காது. அவர்களில் யாராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை செல்கிறது. கொலை நிகழ்ந்து 10 நாட்கள் ஆகியும், இன்று வரை உடலோ அல்லது  தலையோ கண்டெடுக்கப்படவில்லை. எனவே, கொலையாளிகள் எப்படி இந்தக் கொலையைச் செய்தனர் என்கிற குழப்பமும் போலீஸாரிடையே எழுந்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக தென்சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "எந்தத் தடயமும் இருக்கக் கூடாது என்று கச்சிதமாக இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இக்கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் நிச்சயம் ஒரு சைக்கோவாகத்தான் இருக்க முடியும். கொல்லப்பட்ட பெண் வசதி படைத்தவர் போல் தெரிகிறது. எங்களுக்கு ஒருசில தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வெளியே சொன்னால், குற்றவாளிகள் உஷாராகி விடக்கூடும். காத்திருங்கள், விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம். இந்தக் கொலை வழக்கு ஒரு சவால் தான்" என்றார்.

பெருங்குடி குப்பைக் கிடங்கு கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் சமயத்தில், பல அதிர்ச்சிகள் காத்திருக்கும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.