Published:Updated:

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?
பிரீமியம் ஸ்டோரி
‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

Published:Updated:
‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?
பிரீமியம் ஸ்டோரி
‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?
‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘ஆண்கள் பாலியல் தொல்லை கொடுத்தாலும், அதை வெளியே சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம்’ என்று பெண்களை மூளைச்சலவை செய்துவைத்திருந்த சமூகத்தின் தலையில் ஓங்கியடித்த சுத்தியல்... ‘மீ டூ’! ‘நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்’ என்ற அர்த்தத்தில் ‘மீ டூ’ என்று ஓங்கி ஒலித்த குரல்கள் சமீபத்திய காலகட்டத்தில் மிக முக்கியமான சமூக அதிர்வு. ‘மீ டூ’ எங்கிருந்து ஆரம்பித்தது? இந்தியாவில் அதன் விளைவுகள் என்ன? தமிழகத்தின் ‘மீ டூ’ கதைகள், இந்த இயக்கத்தால் நிகழ்ந்த மாற்றங்கள், இதற்குக் கிடைத்திருக்கும் சட்டரீதியான பலம், இதன் எதிர்காலம் என்ன? கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஹெவன் உருவாக்கிய #MeToo

2006-ம் ஆண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த தரானா புர்கே என்பவர், கறுப்பின இளம்பெண்களின் நலவாழ்வுக்காக ‘ஜஸ்ட் பி’ என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தினார். அந்த விடுதியில் இருந்த ஹெவன் என்ற சிறுமிதான், பின்னாளில் புர்கே, ‘மீ டூ’ இயக்கத்தை உருவாக்கக் காரணம். எப்போதும் கோபமும் எரிச்சலுமாக இருக்கும் ஹெவன், புர்கேவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ஒருநாள் கூறினாள். தன் அம்மாவின் இரண்டாவது கணவன், தன்னை எப்படி ஒவ்வொரு நாளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விவரித்தாள். ஒருகட்டத்துக்கு மேல், புர்கேவால் அவள் கூறுவதைக் கேட்க முடியவில்லை. அவளை மனநல ஆலோச
கரிடம் அனுப்பிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அந்தச் சிறுமியிடம் புர்கே கூற நினைத்தது இதுதான்... ‘மீ டூ’! தானும் அத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பதை அவர் ஹெவனிடம் மட்டும் தெரிவிக்கவில்லை. ‘மீ டூ’ என உலகத்துக்கே தெரிவித்தார்.

அன்றிலிருந்து புர்கேவின் ‘மீ டூ’ செயல்பாடுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, அமெரிக்க சமூக ஆர்வலரும் நடிகையுமான அலிசா மிலானோ, தன் சமூக வலைதளத்தில், ‘நீங்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால், இந்த ட்வீட்டுக்கு ‘me too’ என்று பதிலளியுங்கள்’ என்று பதிவிட்டார். 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மில்லியன் ட்வீட்கள் பதிவிடப்பட்டன. இந்த ட்வீட்கள் வைரலாகிப் பரவுவதற்குச் சில நாள்கள் முன்பே, இன்னொரு ‘மீ டூ’ கதை ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபல அமெரிக்க இதழான ‘தி நியூயார்க் டைம்ஸை’ச் சேர்ந்த கண்டார் மற்றும் டூஹே ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள், ஹாலிவுட்டில் நடக்கும் பாலியல்  துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டனர். இந்தக் கட்டுரை ஹாலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஹார்வி வின்ஸ்ட்டன் மீது கிட்டத்தட்ட 70 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். அது, தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்திலிருந்தே பதவி விலகும் அளவுக்கு வின்ஸ்ட்டனைத் தள்ளியது. மேலும், அமெரிக்காவில் மருத்துவம், ஊடகம், இசை, ராணுவம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் இதுகுறித்த விழிப்பு உணர்வும் தாக்கமும் எழுந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி சீன அதிபர் ஷி ஜின்பிங் வரை குற்றம்சாட்டப்பட்டனர். இவற்றின் ஆரோக்கியமான விளைவாக, ‘மீ டூ காங்கிரஸ் ஆக்ட்’ என்ற பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்தியாவில் ‘மீ டூ’!

2017-ம் ஆண்டு முதலே, அமெரிக்காவில் நடந்த ‘மீ டூ’ இயக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் ஆங்காங்கே இருந்துவந்தாலும், நடிகை தனுஸ்ரீ தத்தா 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனக்கு பத்து வருடங்களுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேச, பாலிவுட்டில் அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படப்பிடிப்பின்போது, பிரபல நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று புகார் தெரிவித்தார் தனுஸ்ரீ தத்தா. அதன் பிறகு,  இயக்குநர்கள் சஜித் கான் மற்றும் விகாஸ் பாஹல், பாடகர்கள் கைலாஷ் கேர், அனு மாலிக், நடிகர்கள் அலோக் நாத், ரஜத் கபூர், எழுத்தாளர் சேத்தன் பகத் எனப் பல பிரபலங்கள் மீது பெண்கள் பாலியல் புகார்களைச் சுமத்தினர்.

இந்திய ஊடகத்துறையில் ‘மீ டூ’-வின் தாக்கம் மிகப்பெரிய அளவில் எழுவதற்கு, பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன், பத்திரிகை ஆசிரியர் கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் மீது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகார் அடித்தளமிட்டது. தொடர்ந்து, பத்திரிகை ஆசிரியர்களான வினோத் துஹா, பிராஷாந்த் ஜா ஆகியோர் மீது பாலியல் புகார் எழுந்தது. குறிப்பாக, முன்னாள் பத்திரிகையாளரான அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மீது பத்திரிகையாளர் ப்ரியா ரமணி அளித்த பாலியல் புகார் வழக்கில், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது இந்தியாவில் ‘மீ டூ’-வுக்கான முக்கிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

தமிழகத்தின் ‘மீ டூ’ மௌனம்!

தமிழ்த் திரைப்படத் துறையில், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் எழுப்பினார். அதைத் தொடர்ந்து, இன்னும் சில பெண்களும் அவர்மீது அதே குற்றச்சாட்டை வைத்தனர். பாடகர் கார்த்திக், நடிகர் ராதாரவி, நடிகர் அர்ஜுன், இயக்குநர் சுசி கணேசன் உள்ளிட்ட பிரபலங்கள் மீது ‘மீ டூ’ புகார்கள் எழுந்தன. இப்படி, தமிழகத்தின் முதல் ‘மீ டூ’ குரல்கள் சினிமாவிலிருந்துதான் ஒலித்தது என்றாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, சீனியர் மோஸ்ட் கலைஞர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் மௌனம் சாதித்தனர். கமல், ஏ.ஆர்.ரஹ்மான், பிரகாஷ்ராஜ், சித்தார்த், வரலட்சுமி, சமந்தா, இயக்குநர் அமுதன் உள்பட, ‘மீ டூ’-வுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத் துணிச்சலாகவும் குரல் கொடுத்தவர்கள் இங்குக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

கர்னாடக சங்கீத உலகில் கலக்கம்!

திரையுலகுக்கு அடுத்தபடியாக கர்னாடக சங்கீத உலகிலும், ‘மீ டூ’ புகார்கள் கலக்கத்தை ஏற்படுத்தின. கர்னாடக சங்கீதப் பாடகியும், அந்தத் துறைக்கான விசாகா கமிட்டி உறுப்பினருமான சுதா ரகுநாதன், ‘‘ ‘மீ டூ’-ன்னு ஓர் இயக்கம் எழுந்ததால்தான், பல ஆண்களுக்கு, ‘நம் எல்லைக்கோட்டுக்குள் நிற்க வேண்டும்’ அப்படீங்கிற ஓர் எச்சரிக்கை உணர்வு வந்திருக்கு. இது எல்லா ஆண்களுக்குமே வரணும். இந்த உணர்வு சொல்லிக்கொடுத்து வர்றது எல்லாம் சாத்தியம் இல்லை. ஆனா, பெண்களைச் சீண்டிப் பார்க்கலாம்ன்னு நினைச்சிட்டிருந்தவங்களின் மனதில், ‘அப்படிச் செய்தால் மாட்டிக்குவோமோ... சமூகத்தில் மரியாதை குறைந்துடுமோ’ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கு ‘மீ டூ’ குரல்கள். கர்னாடக சங்கீத உலகில், குருவாக, ஆளுமையாக தங்களை நிலை நிறுத்திட்டிருந்த பலரின் முகமூடிகள் ‘மீ டூ’-வால் கிழிஞ்சிருக்கு. இது தொடரணும்” என்கிறார் அழுத்தமாக.

தமிழ்நாட்டின் முதல் ‘மீ டூ’ குரல் பின்னணிப் பாடகி சின்மயியுடையது. கவிஞர் வைரமுத்துவை பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய இவர், தன்னைப் போலவே பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களின் குமுறல்களை, தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிரங்கப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, ஆபாச கமென்ட்ஸ்முதல் டப்பிங் யூனியனிலிருந்து நீக்கம்வரை பல்வேறு எதிர்விளைவுகளை இன்றுவரை சந்தித்துவருகிறார் சின்மயி.  சின்மயியின் அம்மா பத்மஹாசினி, “ ‘மீ டூ’-ன்னு எத்தனையோ பெண்கள் அவங்க மனக்குமுறல்களைச் சொல்ல, சின்மயியும் மனக்கொதிப்போடு இதில் என்ட்ரி ஆனாள். இவகிட்ட, தங்களுக்கு நடந்ததை எல்லாம் சொன்னவங்க அச்சத்தில், ‘எங்க பேரைச் சொல்லிடாதீங்க’னு கேட்டுக்கொண்டதால், இன்னைக்கு வரைக்கும் சின்மயி யார் பெயரையும் வெளியே சொல்லலை. அந்தக் குணத்துக்கு அவ நல்லா இருப்பா. யார் யாருக்காகவோ ஆரம்பிச்சு, இப்போ எங்கேயோ போய் நிக்குதுன்னு மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, எங்க வாழ்க்கையில் எப்போ எல்லாம் பெரிய பிரச்னை வருதோ, அப்போ எல்லாம் நாங்க பெரிய உயரத்துக்குத்தான் போயிருக்கோம். சின்மயி இப்போகூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சர்வம் தாளமயம்’ படத்துல பாடியிருக்கா. அவ செய்துக்கிட்டிருக்க பிசினஸ்களும் நல்லபடியா போயிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் மேல, அவளுக்குத் துணையா அவளோட கணவர் இருக்கார். ஒரு பொண்ணுக்கு அதைவிட வேற என்ன பெரிய சப்போர்ட் வேணும்?’’ என்கிறார்.

புகார் சுமத்தப்பட்டவர்கள் என்ன கூறுகிறார்கள்?

‘மீ டூ’ புகார் சுமத்தப்பட்ட பிராமண சங்கத்தின் தலைவர் நாராயணன், தன் தரப்புக் கருத்துகளை தற்போதைக்குச் சொல்ல விருப்பமில்லை என்று மறுத்துவிட, புகைப்படக் கலைஞர் பிரித்திகா மேனனால் குற்றம்சுமத்தப்பட்ட நடிகர் தியாகராஜன் பேச முன்வந்தார். “அந்தப் பொண்ணு ஏன் என் மேல புகார் கொடுத்தாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியலைங்க. என் மனைவிக்கும் மகன் பிரசாந்த்துக்கும் என்னைப் பத்தி நல்லா தெரியும்ங்கிறதால என் குடும்பத்தில் எந்தக் குழப்பமும் ஏற்படலை. ஆனா, பொதுவெளியில் என் பெயர் கெட்டது கெட்டதுதானே? என் நாற்பது வருஷ சினிமா வாழ்க்கையை ஒரு ஃபேஸ்புக் பதிவால கரியைப் பூசினாங்க. நான் அந்தப் பொண்ணு மேலே மானநஷ்ட வழக்குப் போடுவேன்னு சொன்னதும், அந்தப் பொண்ணு, தன் ஃபேஸ்புக் பக்கத்தை க்ளோஸ் பண்ணிட்டாங்க. பெண்கள் தயவுசெய்து, ‘மீ டூ’-வைத் தப்புப் பண்றவங்களை அடையாளம் காட்ட மட்டுமே பயன்படுத்துங்க. பாப்புலாரிட்டிக்காகவோ, பழிவாங்கும் நோக்கத்துடனோ பயன்படுத்தாதீங்க. இதனால, நிஜமாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பலன் கிடைக்காமல் போய்விடும்’’ என்றார்.

‘மீ டூ’ எதிர்காலம் என்ன?

‘மீ  டூ’  என்று குரல் கொடுக்கும் பெண்கள், அதன் பிறகு சந்திக்கும் பிரச்னைகளால், இந்த இயக்கம் நீர்த்துப்போய்விடுமா? இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் இதற்கு, ‘‘இந்த இயக்கத்துக்கு, பாலிவுட்டில் ஆண்கள் சப்போர்ட் அதிகமாக இருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகில் அது கிடைக்கவே இல்லை. ஆனாலும், இன்னும் பத்து வருடங்களில் இந்த நிலை நிச்சயம் மாறும். அதற்கான பாதையில்தான் பெண்கள் சென்றுகொண்டிருக்கிறோம். சாதியின் பெயரால் எப்படிச் சிலர் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்களோ, அதேபோல், பெண் என்பதால் பல போராட்டங்களை நாமும் காலம் காலமாகச் சந்தித்து வருகிறோம். அது ஒழிய வேண்டும் என்றால் ‘மீ டூ’ போன்ற குரல்கள் தொடர்ந்து உரத்து ஒலிக்க வேண்டும். ‘நானும் பாதிக்கப்பட்டேன்’ என்று பெண்கள் சொல்வதை முற்போக்காகப் பார்க்க வேண்டும். அதை, இங்கே சிலர் திட்டமிட்டுத் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள், ஆபாச அச்சுறுத்தல்களுக்குப் பயப்படாமல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் பலன் இருக்கும். ‘மீ டூ’ இயக்கம் சிலர் நினைப்பதைப்போல நீர்த்துப்போகவில்லை. அதன் ஜுவாலை தணிந்திருந்தாலும், கனன்றுகொண்டேதான் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அது மீண்டும் பற்றிக்கொள்ளும். ‘மீ டூ’... நிச்சயம் பார்ட் டூ, பார்ட் த்ரீ எல்லாம் தொடரும்’’ என்கிறார்.

- ஆ.சாந்தி கணேஷ், எம்.ஆர்.ஷோபனா
ஓவியம்: பிரேம் டாவின்ஸி

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

சட்டம் என்ன சொல்கிறது?

கா
வல் நிலையங்களில் ‘மீ டூ’ புகார்களை எப்படிப் பதிய வேண்டும் என்றும், சட்டம் ‘மீ டூ’ புகார்களை எழுப்பும் பெண்களிடம் எதிர்பார்க்கும் ஆதாரங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். “ ‘மீ டூ’-வுக்கு என்று சட்டத்தில் தனி செக்‌ஷன் எதுவும் கிடையாது. செக்ஸுவல் ஹராஸ்மென்ட்டுக்கு என்ன செக்‌ஷனோ அதேதான் இதற்கும் இருக்கிறது. ஆனால், காலம் தாழ்த்திப் புகார் செய்யாதீர்கள். உடனே செய்துவிடுங்கள். ‘மீ டூ’-வைப் பொறுத்தவரை, நேரடி சாட்சிகள் கிடைப்பது கடினம். அதனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சட்டம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததைச் சொல்லும் விதத்தில் இருக்கிற உண்மைத் தன்மை, எந்த நாளில், எப்போது தனக்கு இப்படி நிகழ்ந்தது என்பதைக் குறுக்கு விசாரணையின்போதும் சரியாகச் சொல்லும் மன உறுதி, பாலியல் தொல்லையை நேரில் பார்த்தவர்கள் சொல்கிற சாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும். ‘வாட்ஸ்அப்’ மெசேஜ்களின் மூலமாக ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட, ஐ.டி நிபுணர்களை வைத்து நிரூபணம் செய்து, தப்பு செய்தவருக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும்’’ என்கிறார்.

‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?

‘உள் புகார் குழு’வை வலுப்படுத்திய ‘மீ டூ’!  

‘மீ
டூ’ மூவ்மென்ட்டால் எழுந்த கலகங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் பலனாக, அதுவரை பெயரளவிலேயே இருந்த, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரிக்க வேண்டிய ‘உள் புகார் குழு’வைப் (ICC - Internal Complaints Committee) பல நிறுவனங்களும் தங்கள் நிர்வாகத்தில் பலப்படுத்தியிருகின்றன. அதுவரை அந்தக் குழுவை நிறுவாத நிறுவனங்களும் அதை நிறுவினர். இந்த வகையில், பணிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புவரை ‘மீ டூ’-வின் தாக்கம் நீண்டது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உள் புகார் குழுக்களில் உறுப்பினராக இருக்கிறார் வழக்கறிஞர் மாதுரி. அவர் இதுகுறித்து, ‘‘உள் புகார் குழு இருந்தால்தான், ஒரு நிறுவனம் ஆரம்பிக்க லைசென்ஸ் கிடைக்கும் என்பதால், இன்றைக்குச் சின்னச் சின்ன நிறுவனங்கள்கூட இதில் எச்சரிக்கையாக இருக்கின்றன. ‘மீ டூ’ இயக்கம் தலையெடுத்த பிறகு, பெண் ஊழியர்களுக்கு உடன் வேலை பார்ப்பவர்களால் பிரச்னை எதுவும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து சில நிறுவனங்களில் உள் புகார் குழு தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகூட நடத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் ‘மீ டூ’-தான்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism