Published:Updated:

இரண்டே நாளில் 15 மோதல்கள்.. 3 கத்திக்குத்து.. மருத்துவமனையில் 150 பேர்! -திருச்சியில் `போதை' களேபரம்

மது போதை தாக்குதல்கள்
News
மது போதை தாக்குதல்கள்

அடுத்தடுத்து நடைபெற்ற மதுபோதை குற்றங்களால் திருச்சி திகிலடைந்து கிடைக்கிறது.

ஶ்ரீரங்கத்தில் போதைக் கும்பல் ரகளை!

கடந்தவாரம் ஶ்ரீரங்கத்தில் ரவுடி தலைவெட்டி சந்துரு பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், கோஷ்டி மோதல் தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்துள்ளார். போதையில் இருந்த இவர், அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டதுடன், அவ்வழியே வந்தவர்களின் வாகனங்களை மறித்து பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தவழியே வந்த கார்த்திக் என்பவரின் ஆட்டோவை மறித்த முருகானந்தம், ஆட்டோ சாவியைப் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்
தாக்குதல் நடத்தியவர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதையடுத்து, கோபமடைந்த கார்த்திக் இதுகுறித்து அவரின் நண்பர்களான கௌரிசங்கர், ஜெகன், ஹரிஹரசுதன், ஹனிஷ் உள்ளிட்டோரிடம் முறையிட்டுள்ளார். அதையடுத்து அந்தக் கும்பல், சரக்கடித்துவிட்டு அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் வீரேஸ்வரம் பகுதிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

அந்தப் போதைக் கும்பல் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் காத்தபெருமாள் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்தப் போதைக் கும்பலில் இருந்த 8 பேரை அடித்துக் கையும் களவுமாகப் பிடித்து ஶ்ரீரங்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மனைவியை வெட்டிய “போதை” கணவன்!

திருச்சி மாவட்டம், துறையூர் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கட்டுமானத் தொழிலாளியான இவர், நேற்று இரவு போதையில் இருந்துள்ளார். தொடர்ந்து அவரது மனைவி கவிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில், கோபமடைந்த செந்தில்குமார், ஆத்திரத்தில் அரிவாளால் கவிதாவை வெட்டினார். அதில் படுகாயமடைந்த கவிதா, ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீஸார், அங்கிருந்து தப்பி ஓடிய செந்தில்குமார் குறித்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டுக்குள் கறி சமைத்த கும்பல்கள்… எரிக்கப்பட்ட வாகனம்!

திருச்சி கே.கே நகர் சாத்தனூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை தனது நண்பர்களான சக்திவேல், ஆனந்த், செந்தில், ஆறுமுகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து கறி எடுத்துச் சென்று கே.கேநகர் செட்டிகுளம் ஆற்றங்கரையில் சமையல் செய்துள்ளார். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையர் வரதராஜு
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் வரதராஜு

அப்போது இவர்களைப் போலவே மற்றொரு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சக்திவேல், லட்சுமணன், அஜித், பாலா உள்ளிட்டோர் கறி சமைத்து மதுவிருந்து வைத்துள்ளனர். போதை தலைக்கேறவே, இரு இருதரப்பும் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றி இருதரப்பும் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். தொடர்ந்து கோவிந்தராஜ் கோஷ்டி வினோத்குமார் என்பவரின் பைக்கை தீ வைத்து எரித்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் மீது நடவடிக்கை.. திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி!

இந்தச் சம்பவத்தில் போலீஸார் அலட்சியமாகச் செயல்பட்டதாக திருச்சி மாநகரக் காவல் ஆணையர் வரதராஜு மாநகர போலீஸாரை ஓபன் மைக்கில் வெளுத்துவாங்கியவர், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு உள்ளிட்ட போலீஸாரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

இதேபோல் துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டை பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்த வலம்புரிஜான், தனது இரு சக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார்.

தேங்காய் பறிப்புச் சண்டையில் மண்டை உடைப்பு!

ஏற்கெனவே இவர்களுக்குள் தேங்காய் பறிப்பது ஏற்பட்ட தகராறு இருந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட மணிகண்டன் தரப்பினர் நடத்திய தாக்குதலில் வலம்புரிஜான், அவருடைய மனைவி பாண்டியம்மாள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பெயரில் 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கொலைவெறித் தாக்குதல்!

கொரோனோ பரவலைத் தடுக்க, வீடற்றவர்களுக்குத் தங்கும் மையம் ஏற்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் திருச்சியில் அப்படி மையங்கள் அமைக்கப்படாததால், தெருவோர வாசிகள் ஆங்காங்கே படுத்துக்கிடக்கின்றனர். அந்தவகையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ரசிக ரஞ்சன சபா அருகில் உள்ள சாலையோரங்களில் சாலையோரத்தில் குடியிருப்போர் தங்கி உள்ளனர்.

மது போதை தாக்குதல்கள்
மது போதை தாக்குதல்கள்

நேற்று இரவு காக்கி உடையணிந்த நபர் ஒருவர், லத்தியைச் வைத்து நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த நபர் போலீஸ்காரரா என்பது குறித்தும் அவர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு கொலை மற்றும் மூன்று கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், கடந்த இரண்டு நாள்களில் மது குடித்த நபர்களால் ஏற்பட்ட விபத்து, தகறாரு, அரிவாள்வெட்டுச் சம்பவங்களால் சுமார் 150பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.