Published:Updated:

`அஞ்சல பாட்டி ஞாபகம் வந்தது; வீட்டுக்குப்போனப்போ’ - போலீஸாரைக் கலங்கடித்த வாலிபரின் வாக்குமூலம்

`அஞ்சல பாட்டி ஞாபகம் வந்தது; வீட்டுக்குப்போனப்போ’ - போலீஸாரைக் கலங்கடித்த வாலிபரின் வாக்குமூலம்
`அஞ்சல பாட்டி ஞாபகம் வந்தது; வீட்டுக்குப்போனப்போ’ - போலீஸாரைக் கலங்கடித்த வாலிபரின் வாக்குமூலம்

70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலைப் பாட்டிக்கு 70 வயது. இவர் தன்  வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவரது மகள் நாகம்மாள் அதே ஊரைச் சேர்ந்த முனியன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அஞ்சலை வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு நாய் குரைக்கும் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்ததால், தூங்கிக்கொண்டிருந்த நாகம்மாளும், முனியனும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது அஞ்சலையின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததோடு வாசலில் யாரோ அமர்ந்திருப்பது போல தெரிந்ததால் அருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கே அரைநிர்வாண நிலையில் இளைஞன் ஒருவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள் ``யார் நீ ? இங்கு எதற்காக அமர்ந்திருக்கிறாய் ?” என்று கேட்டிருக்கின்றனர்.

மது போதையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் பேசிய அந்த நபர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடிவிடவே, நாகம்மாள் உடனே வீட்டிற்குள் ஓடிப் பார்த்திருக்கிறார். அப்போது அங்கே ஆடைகள் விலகி நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார் அஞ்சலை. நாகம்மாளின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த அக்கம்பக்கத்தினர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்று காவல் துறையினர் இளைஞரின் ஆடைகள் உள்ளிட்ட தடயங்களைக் கைப்பற்றியதோடு, அஞ்சலையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அஞ்சலை வீட்டினுள் ஒருவர் சென்று வரும் காட்சி பதிவாகி இருந்தது. அதேபோல அஞ்சலை வீட்டின் அருகில் நீண்ட நேரமாக பைக் ஒன்று நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அதன் உரிமையாளர் குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது அரசூரைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்று தெரியவர அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால், இரண்டு சாவிகளுமே அவரிடம் இருந்த நிலையில் பைக் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் கவிதாஸ் மீது சந்தேகமாக இருக்கிறது என்று அவர் சொன்னதன் அடிப்படையில் அந்த வீட்டில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அஞ்சலையின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆடைகளை காட்டியிருக்கிறார்கள். அப்போது, ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த எங்கள் தூரத்து உறவினர் கவிதாஸ் எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார். இது அவரது உடைதான் என்று தெரிவித்தனர் அங்கிருந்த பெண்கள்.

அதன் அடிப்படையில் ஒட்டனந்தல் கிராமத்தில் இருந்த கவிதாஸ் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். ``அந்த வீட்டுல அஞ்சலைப் பாட்டி தனியா இருக்காங்கனு எனக்குத் தெரியும். அன்னைக்கு நைட் அரசூர்ல நான் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரரோட பைக்கை டூப்ளிகேட் சாவியைப் போட்டு எடுத்துக்கிட்டு வந்துட்டேன். டாஸ்மாக் போயி மது குடிச்சிட்டுப் போகும்போது அஞ்சலைப் பாட்டியின் ஞாபகம் வந்தது. உடனே பைக்கை தூரமாக நிறுத்திவிட்டு அஞ்சலை வீட்டுக்குப் போனேன். அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தேன். அப்போது அவங்க சத்தம் போட்டதால அவங்க புடவையாலேயே கழுத்தை இறுக்கிக் கொலை பண்ணிட்டேன்” என்று காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறானாம் கவிதாஸ்.

காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``எல்லாம் உண்மைதான். அந்த நபர் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் உள்ளன. ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் வீட்டில் தனியா இருந்த ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி கைதாகியுள்ளான். சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஊருக்குப் போகாம அரசூர்ல தூரத்து உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளான். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவன் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன் போல இருக்கான். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரமும் தெரிய வரும்” என்றனர்.